
நார்மலா நாம் சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட தக்காளி ரசம், பருப்பு ரசம், மைசூர் ரசம், ஜீரா ரசம் என பரம்பரையாக பழக்கத்தில் உள்ள ரச வகைகளையே செய்வதுண்டு. இவை அனைத்தும் புளிப்பு சுவையுடன் நீர்த்தன்மை நிறைந்ததாக இருக்கும்.
தேங்காய்ப் பால் ரசம் அவ்வாரில்லாமல் அதிக சுவையுடன் க்ரீமி டெக்ச்சர் கொண்டதாக இருக்கும். இதனுடன் இணைந்திருக்கும் பூண்டும் தக்காளியும் இதற்கு ஒரு வேறுபட்ட சுவையும் மணமும் தரும். தேங்காய்ப் பால் ரசம் எவ்வாறு செய்வது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
திக்கான தேங்காய்ப் பால் 1 கப்
உரித்த பூண்டு பல் 5
பெப்பர் கார்ன் 4
சீரகம் ½ டீஸ்பூன்
தனியா விதை ½ டீஸ்பூன்
தக்காளி 2
திக்கான புளிக் கரைசல் ½ டேபிள்ஸ்பூன்
உரித்த சின்ன வெங்காயம் 8
பெருங்காயம் ¼ டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை 15 இலை
மல்லித் தழை ஒரு கைப்பிடி
எண்ணெய் தேவையான அளவு
கடுகு ½ டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 2
பச்சை மிளகாய் 2
செய்முறை:
பூண்டு, பெப்பர் கார்ன், சீரகம், தனியா விதை ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தக்காளியை கொதி நீரில் போட்டு வேகவைத்து தோலுரித்து கரைத்துக் கொள்ளவும். இதனுடன் புளிக் கரைசலையும் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் தேங்காய்ப் பாலை ஊற்றி அதில் பெருங்காயம், உப்பு, மஞ்சள் தூள், மல்லித் தழை சேர்த்து கலந்துகொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பிறகு சின்ன வெங்காயத்தை சேர்க்கவும். அது சிவந்ததும் அரைத்து வைத்த பூண்டு சேர்த்த ஸ்பைஸ் மிக்ஸ்ஸை ஊற்றவும். அனைத்தும் கலந்து கொதி வந்து பச்சை வாசனை போனதும் தேங்காய்ப் பால் கலவையை சேர்த்து மிதமான தீயில் வைக்கவும். நுரைத்து கொதி வரும்போது இறக்கிவிடவும். மேலும் சிறிது கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரிக்கவும்.
க்ரீமி டெக்ச்சருடன் சிறிது கெட்டியாக இருக்கும் இந்த ரசத்தை சூடான சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட சுவை எங்கோ இட்டுச் செல்லும். தொட்டுக்க அப்பளம் வடாம் இருந்தாலே போதும். இந்த ரசத்தில் சுவை மட்டுமின்றி நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளன.
இவை எடைக் குறைப்பிற்கும் உதவும்.