
சாதம் வடிக்கும்போது சற்று குழைந்துவிட்டது போன்று தெரிந்தால் உடனே சிறிதளவு நல்லெண்ணெயைச் சேர்த்தால் மேலும் குழையாமல் இருக்கும்.
ஒரு நிமிடத்தில் ரய்த்தா தயாரிக்க இதோ ஓர் ஐடியா. ஒரு கிண்ணம் கெட்டித்தயிரில் இரண்டு சிட்டிகை உப்பும், அரைத் தேக்கரண்டி சாட் மசாலா அல்லது சன்னா மசாலா பொடியும் சேர்த்துக் கலக்கினால் ஃப்ரைடு ரைஸுக்கு ஏற்ற அவசர ரய்த்தா தயார்.
பாகற்காய் குழம்பு அல்லது பாகற்காய் பிட்லை செய்யும் போது, சில துண்டுகள் கேரட்டையும் சேர்த்து வேகவிட்டால், ருசியும், சத்தும் கூடுவதோடு, பாகற்காயின் கசப்புத்தன்மையும் குறைந்துவிடும்.
பச்சை மிளகாய்களை மிக்ஸியில் அரைக்கும்போது, மிளகாயை நீளவாக்கில் இரண்டாக வெட்டி அரைத்தால் நன்கு மசிந்துவிடும்.
குக்கரில் பொருட்களை வேகவைக்கும்போது, விசில் சத்தம் வந்ததும் உடனே அடுப்பை அணைக்காமல், குக்கரை சிம்மில் இரண்டு நிமிடங்கள் வைத்தபின் அணைத்தால் உணவுப்பொருட்கள் சரியான பதத்தில் வெந்திருப்பதுடன் குக்கரையும் வழக்கத்தை விட சீக்கிரம் திறக்கலாம்.
பாகற்காய் சமைக்கும்போது கசப்பு தெரியாமல் இருக்க சர்க்கரை அல்லது வெல்லம் சேர்ப்போம். அதற்கு பதில் பாகற்காயை பொரியலாக செய்யும்போது கேரட் அல்லது பீட்ரூட் துருவி தாளிப்புடன் சேர்த்து வதக்கி விட்டு பின்னர் பாகற்காய் சேர்க்கவும்.
பஜ்ஜி மாவில் பொடியாக நறுக்கிய புதினா இலையைச் சேர்த்தால் நல்ல வாசனையாக இருப்பதுடன் எளிதில் ஜீரணமாகும்.
பாதுஷா செய்யும்போது மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்து, சிறிதளவு வனஸ்பதியும், நெய்யும் சேர்த்தால் பாதுஷா மிருதுவாகவும், நல்ல சுவையுடனும் இருக்கும்.
சீடை, தட்டை, முறுக்கு செய்யும்போது சிறிது தேங்காய்ப்பால் விட்டு செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும்.
சர்க்கரைப் பாகு காய்ச்சும்போது சில துளிகள் எலுமிச்சம் பழச்சாறு விட்டால் பாகு முறுகாமல் இருக்கும்.
எந்த வகையான இனிப்பு செய்தாலும் ஒரு கல் உப்பு அதில் சேர்க்க வேண்டும். இதனால் அந்த இனிப்பு திகட்டாமல் இருக்கும்.
ஒரு கரண்டி எண்ணெய் அல்லது நெய் அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் பஜ்ஜி மாவில் ஊற்றி, பிறகு மாவைக் கரைத்து பஜ்ஜி சுட்டால் வாசனையாய் இருக்கும். எண்ணெய் அதிகம் குடிக்காது.