
பெரிய நெல்லிக்காய்களை முழுசாக ஊறுகாய் போட பயன்படுத்தும்போது, சுத்தமான கோணி ஊசியால் நெல்லிக்காயின் 3, 4 இடங்களில் குத்திவிட்டால் சீக்கிரமாக உப்பு பிடிக்கும், ஊறவும் செய்யும்.
தேங்காயைத் துருவிப்போட்டு பொரியல் செய்தால் இரவுக்குள் ஊசிவிடும் வாய்ப்புண்டு. எனவே கடுகு, பருப்பு போட்டு ஒரு வதக்கு வதக்கி விட்டு பின்னர் காயைப் போட்டுக்கிளறி சமைத்துப் பாருங்கள். எவ்வளவு நேரமானாலும் ஊசவே ஊசாது.
பிரட் துண்டுகளை பஜ்ஜி மாவில் தோய்த்து சுவையான பஜ்ஜி செய்யலாம்.
வெல்லக் கொழுக்கட்டை செய்யும்போது, துணி போட்டு வைத்தால் கொழுக்கட்டை அதில் ஒட்டிக் கொள்ளும். வாழையிலைக் கிழிசலைப் போட்டால் சிறிதும் ஒட்டாது. கொழுக்கட்டை வீணாகாமல் எடுக்கவும் வரும்.
புட்டு செய்யும்போது கடைசியில் ஒரு கரண்டி ரவையை பொன்போல் வறுத்து, புட்டுமாவில் சேர்த்து மூடினால் புட்டு மிகவும் சுவையாக இருக்கும்.
சேனைக்கிழங்கை வேக வைக்கும்போது, சிறு வெல்லக்கட்டியைப்போட்டு வேகவைத்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.
கோதுமையை அரைத்துப் பால் எடுத்து, அத்துடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து, அடுப்பில் குக்கரில் வைத்து விடவும். 15 நிமிடம் கழித்து குக்கரை இறக்கினால் நன்றாக வெந்திருக்கும். பின்னர் நெய் சேர்த்துச் சிறிது நேரம் கிளறி இறக்கினால் சுவையான அல்வா தயார்.
வீட்டில் மோர் அதிகமாகிவிட்டால் அதை புளிக்கவிடாமல் துளி உப்பு சேர்த்து ஃ ப்ரிட்ஜில் இருக்கும் ஐஸ் ட்ரெயில் கியூப் ஆக வைத்து தாகம் எடுக்கும்போது தண்ணீர் விட்டுப் பருகலாம்.
மோர்க்குழம்புக்கு தாளிக்கும்போது கடுகுடன், மூன்று, நான்கு வெங்காய வடகத்தையும் உதிர்த்து இட்டு தாளித்துப் பாருங்களேன். மோர்க்குழம்பு சுவை மிகுந்து இருக்கும்.
ஒரு கப் தனியாவை கொஞ்சமாக எண்ணைய் விட்டு வறுத்து, மிக்ஸியில் பொடி செய்து வைத்துக்கொண்டு அவ்வப்போத
ஒரு டேபிள் ஸ்பூன் குழம்பு கொதித்து இறக்கும்போது சேர்த்தால், மிகுந்த வாசனையுடன், வறுத்தரைத்து செய்த சாம்பார் போலவே இருக்கும்.
அடைக்குத் தேவையான அரிசி, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் இவற்றுடன் நிலக்கடலையையும், பச்சைப் பட்டாணியையும் சேர்த்து அரைத்தால் அடை கரகரப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.
பாயசத்துக்குப்போட முந்திரி பருப்பு இல்லையென்றால், முற்றின தேங்காயை பல்லு பல்லாக நறுக்கி, நெய்யில் சிவக்க வறுத்து பாயசத்தில் போட்டால் பாயசம் சுவை ஊரைத்தூக்கும்.