
நமது பாரம்பரிய உணவுகள் ஆரோக்கியமானது. இவை உடல் நலத்திற்கு பல நன்மைகளை அளிக்கின்றன. சத்துக்கள் நிறைந்தது; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது; இயற்கையான உள்ளூர் பொருட்களால் தயாரிக்கப்படுவதால் ஆரோக்கியமான உணவாகவும், நாள்பட்ட நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றது.
பாரம்பரிய உணவுகள் பெரும்பாலும் உள்ளூர் மற்றும் பருவகாலத்தில் விளையும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது. இது சுற்றுச்சூழலுக்கும், பொருளாதாரத்திற்கும் நன்மை பயப்பதுடன் நம் ஆரோக்கியத்திற்கும் ஏற்றதாக உள்ளது. பாரம்பரிய உணவுகளில் கலோரிகள் குறைவாக இருப்பதும், நார்ச்சத்து அதிகமாக இருப்பதும் நம் உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகின்றது. சில பாரம்பரிய உணவுகள் செரட்டோனின் உற்பத்தியை அதிகரித்து நம் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது.
நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் முக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் நோய் எதிர்ப்பு சக்தியும் ஏற்படுகிறது. கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற தானியங்கள் உடலுக்குத் தேவையான நார்ச்சத்தை வழங்குகின்றன. பயறு வகைகள், உளுந்து, வேர்க்கடலை போன்றவை புரதச்சத்தை வழங்கி நம்மை ஆரோக்கியமுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.
வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்த காய்கறிகள் மற்றும் கீரைகள் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை வழங்குகின்றன. துளசி, வேப்பிலை போன்ற மருத்துவ குணம் நிறைந்த மூலிகைகள் நம் உடலை ஆரோக்கியமாகப் பேணிக் காக்கின்றன.
பாரம்பரிய உணவுகள் அந்தந்த பகுதிகளில் விளையும் தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றைக் கொண்டு தட்பவெப்ப நிலைக்கேற்ப சமைக்கப்படுவதால் உணவுகளில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி, சரும ஆரோக்கியம் மேம்படுவதுடன் மூளையின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும்.
பாரம்பரிய உணவுகள் பெரும்பாலும் நொதித்தல் முறையில்தான் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட நேரம் வரை புளிக்க வைத்து தயாரிக்கப்படும் உணவுகளில் பல நன்மைகள் உண்டு. இந்த உணவுகள் எளிதாக ஜீரணமாகக் கூடியவை. நன்மை தரும் பாக்டீரியாக்கள் இவற்றில் அதிகம் இருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
செயற்கையான நிறமூட்டிகளையோ, சுவையூட்டிகளையோ சேர்க்காமல் தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லது. மிளகு, இஞ்சி, மஞ்சள், சுக்கு பெருங்காயம், சீரகம் போன்ற மசாலாப் பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. முளைகட்டிய தானியங்கள், நெய், பிஞ்சு காய்கறிகள், சீசனில் கிடைக்கும் பழ வகைகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். பாரம்பரிய சத்துமிக்க உணவுகளை எடுத்துக்கொண்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்!