ருசியான சாம்பார் வேண்டுமா? இந்த பொடியை ஒருமுறை செய்து பாருங்கள்!

delicious sambar.
Want delicious sambar?
Updated on

வீடுகளில் சிலர் சாம்பார் வைத்தால் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் இதை எப்படி வைத்தாய்? தினமும் வைப்பதை விட இன்று நீ வைத்திருப்பது மிகவும் வாசமாக இருக்கிறது. அந்த ரகசியத்தை சொல்லு என்று கேட்பார்கள். தினசரி அவசரத்தில் வைக்கும் சாம்பார் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால் ஸ்பெஷல் ஆக ஒரு நாள் அதற்கான சாம்பார் பொடியை மெனக்கெட்டு தயாரித்து வைத்துக்கொண்டால்  எப்பொழுதுமே நம் சாம்பார் ஸ்பெஷல் சாம்பாராக இருக்கும். வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி உண்பர். அக்கம்பக்கத்தில் கேட்பவர்களுக்கும நன்றாக கொடுத்து அனுப்பலாம் இப்படி மணக்க மணக்க சாம்பார் செய்வதற்கான பொடியை அரைக்கும் விதத்தைப் பற்றி இப்பதிவில் காண்போம். 

முக்கியமாக கவனிக்க வேண்டியது:

சாம்பார் பொடிக்கு தேவையான பொருட்களை வறுக்கும் பொழுது மிகவும் கவனமாக வறுக்க வேண்டும்.  இருக்கின்ற  பொருட்கள் சிறிதளவே இருந்தாலும் அவற்றை எல்லாம் ஒரே நேரத்தில் வறுத்துவிடுவோம் என்று வறுத்தால் ஒன்று கருகும். ஒன்று பதமாக இருக்கும். இன்னொன்று வருபடாமல் போகும். ஆதலால் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக வறுப்பது அவசியம். 

அதேபோல் சிறிதளவு எண்ணெய் சேர்த்து வறுக்கும் பொருட்களுக்கு எண்ணெய் சேர்த்தும், எண்ணெய் சேர்க்காமல் வறுக்கும் பொருட்களுக்கு அப்படியே வறுத்தும் அரைப்பது அவசியம்.

எல்லாவற்றுக்கும் மேலாக அதில் கொடுக்கப்பட்டிருக்கும் ரேஷியோ முக்கியம். 

அதன் ரேஷியோவும் பொருட்களை வறுத்த முறையும் சரியாக இருந்தால் சாம்பார் பொடியின் வாசனையும், கலரும் சிறப்பாக இருக்கும். 

இந்தப் பொருட்களுடன் சிறிதளவு கல் உப்பை வறுத்து சேர்த்து அரைத்தால் குளிர், மழைக் காலத்தில் பொடி கெடாமல் நீண்ட நாள் வரும். இது அவரவர் விருப்பம். 

 இனி அதன் செய்முறையை பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:
சளி, இருமல், காய்ச்சலா? பசியைத் தூண்டும் இந்த உணவுகளை சாப்பிடுங்க!
delicious sambar.

சாம்பார் பொடி அரைக்க தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு -ஒரு டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு- ரெண்டு டேபிள் ஸ்பூன்

தனியா விதை- ஒரு கப்

சீரகம்- கால் கப் 

வெந்தயம்- 2 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய்- 100 கிராம்

மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி தலா -கால் டீஸ்பூன் 

கருவேப்பிலை -முக்கால் கப்

செய்முறை:

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில்  கால் ஸ்பூனுக்கு குறைவாக தேங்காய் எண்ணெய் விட்டு அதில் கடலைப்பருப்பை வாசம் வரும் வரை வறுத்து கலர் மாறாமல் எடுத்து வைக்கவும். அதேபோல் உளுத்தம் பருப்பையும் ரெண்டு ட்ராப் எண்ணெயில் வறுத்த வாசம் வர வேண்டும். ஆனால் கலர் மாறாமல் இருக்கும் பொழுது எடுத்து விட வேண்டும்.

இனி எதற்கும் எண்ணெய் விட தேவையில்லை.  அடுத்ததாக ஒரு கப் தனியா விதையை வெறும் வாணலியில் ட்ரை ஃப்ரை செய்து வாசம் வரும் வரை வறுத்து எடுத்து வைக்கவும். அதேபோல் சீரகத்தையும் நன்றாக வறுத்து எடுக்கவும். வெந்தயத்தை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து மயில்டு கலரில் எடுத்து விடவும். வரமிளகாயை மிதமான சூட்டில் வைத்து கலர் மாறாமல் வறுத்து அதனுடன் மஞ்சள் பொடியையும் பெருங்காய பொடியையும் சேர்த்து எது ஒன்றும் கருகாதபடிக்கு வறுத்து கொட்டவும். கருவேப்பிலையை நன்றாக கழுவி உலர்த்தினால்  வறுக்கும்போது சருகுபோல் இருக்கும். அதை வெறும் வானொலியில் லேசாக வறுத்து பச்சை கலர் மாறாமல் எடுத்து வைக்கவும்.

இவை எல்லாவற்றையும் ஆறவிட்டு ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடித்தால், அதன் மணமும், கலரும் அசத்தலாக இருக்கும். இந்த பொடியில் சாம்பார் வைத்தால் எந்த பருப்பானாலும் வெந்து சுவை தரும் என்பது உறுதி. அந்த சாம்பாரின் சுவையும், மணமும், கலரும் அனைவரையும் சாப்பிடத் தூண்டும் என்பதை சொல்லவும் வேண்டுமா? 

இதையும் படியுங்கள்:
பரிமாறுவது ஒரு கலை: விருந்தினர் மனதைக் கவரும் வழிமுறைகள்!
delicious sambar.

குறிப்பாக இப்படி  சாதாரண சாம்பாரை விட ஸ்பெஷல் சாம்பார் வைப்பதற்கு அதன் ரேஷியோ மிக மிக முக்கியம். அதை ஒவ்வொன்றாக வறுக்கும் முறையும் நிதானமாக கையாள வேண்டியது அவசியம். இவை இரண்டும்தான் இந்த சாம்பார் பொடி ருசியின் ரகசியம். அதுதான் பர்ஃபெக்ட் சாம்பார் பொடியின் மகத்துவம்.

logo
Kalki Online
kalkionline.com