சுவையான சாம்பார் சாதம் மற்றும் பிஸிபேளாபாத் செய்ய எளிய வழிகள்!

healthy samayal recipes
Sambar rice and bisi bele bath recipeImage credit; spiceupthecurry.com
Published on

நாம் அனைவருக்கும் நம் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது உணவு. உண்ணும் உணவுகளை சுவையாக நாமே சமைத்து உண்பது ஒரு கலை. ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உடலுக்கு நல்ல சக்தி அளிக்கக் கூடியவை சாம்பார் சாதம் மற்றும் பிஸிபேளாபாத் ஆகிய இரண்டுமே எனலாம். தயாரிப்பு முறையைப் பார்த்தால் சாம்பார் சாதம் கொஞ்சம் கடினமானது. பிசிபேளாபாத் சாதம் சுலபமாக செய்யக்கூடியது.

இந்த இரண்டு வகை உணவுகளின் ரெசிபியை இங்கு பார்ப்போம்.

சாம்பார் சாதம்

தேவையான பொருட்கள்:

1.பச்சரிசி 1 கப்

2.துவரம் பருப்பு ½ கப்

3.கேரட் 1

4.பீன்ஸ் 50 கிராம்

5.அவரைக்காய் 4

6.முருங்கைக்காய் துண்டு 4

7.கத்திரிக்காய் 1

8.பச்சை வேர்கடலைப் பருப்பு 2 டீஸ்பூன்

9.உரித்த சின்ன வெங்காயம் 10

10.மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்

11.பெருங்காய தூள் ¼ டீஸ்பூன்

12.தக்காளிப் பழம் 4

13. சிவப்பு மிளகாய் வற்றல் 10

14.கடலைப் பருப்பு 2 டீஸ்பூன்

15.மல்லி விதை 3 டீஸ்பூன்

16.சீரகம் ½ டீஸ்பூன்

17.மிளகு ½ டீஸ்பூன்

18.சிறு துண்டுகளாய் நறுக்கிய கொப்பரை தேங்காய் 1 டேபிள் ஸ்பூன்

19.நல்லெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்

20.நெய் 1 டேபிள் ஸ்பூன்

21.உருளைக் கிழங்கு 1

22.புளி ஒரு நெல்லிக்காய் சைஸ்

23.கடுகு 1 டீஸ்பூன்

24.கறிவேப்பிலை 2 இணுக்கு

25.கொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி

26.தண்ணீர் தேவையான அளவு

27.உப்பு தேவையான அளவு

செய்முறை:

துவரம் பருப்பை குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். காய் கறிகளை கழுவி நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து, மிதமான தீயில், மிளகாய் வற்றல், கடலைப் பருப்பு, மல்லி விதை, சீரகம், மிளகு, கொப்பரை தேங்காய் துண்டுகள் ஆகியவற்றை பொன்னிறமாக வருத்தெடுத்து தட்டில் கொட்டி ஆறவிடவும்.

பின் மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ளவும். அதே கடாயில் சிறிது நெய் ஊற்றி, கடுகு, இரண்டு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். பின் வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை வதக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளிப் பழங்களையும் சேர்த்து வேகவைத்து இறக்கவும்.

இதையும் படியுங்கள்:
பிஸ்தாவின் ஊட்டச்சத்து நன்மைகள்: உடல்நலப் பிரச்னைகளுக்கான தீர்வு!
healthy samayal recipes

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் 4½ கப் தண்ணீர் ஊற்றி, அரிசியை கழுவிப் போட்டு வேகவைக்கவும். முக்கால் பாகம் வெந்ததும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளையும் வேர்கடலைப் பருப்பையும் அதனுடன் சேர்த்து கலந்து, மீடியம் தீயில் வேக வைக்கவும். பின் மஞ்சள் தூள், பெருங்காய தூள், உப்பு, மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து கலந்துவிடவும்.

அதனுடன் வேகவைத்த பருப்பு, மசாலாப் பவுடர், வதக்கிய வெங்காயம் தக்காளி கலவை, நெய் ஆகிய அனைத்தையும் சேர்த்து ஒரு சேர கலந்து, மல்லி இலைகள் தூவி இறக்கவும். சுவையான சாம்பார் சாதம் ரெடி.

பிஸிபேளாபாத் ரெசிபி:

ஒரு பாத்திரத்தில் ¾ கப் அரிசி எடுத்து அதில் 1¾ கப் தண்ணீர் ஊற்றி குக்கரின் உள்ளே வைத்து மூடவும். அதன் மீது மற்றொரு பாத்திரத்தில் அரை கப் துவரம் பருப்பை கழுவிப் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தட்டுப் போட்டு மூடவும். குக்கரை மூடி நான்கு விசில் வரும்வரை மீடியம் தீயில் வைத்து சமைத்து எடுக்கவும். அதே நேரம் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, மிதமான தீயில், ஒரு டீஸ்பூன் கடலைப் பருப்பு, ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் 4 சிவப்பு மிளகாய் வற்றல் ஆகியவற்றை கோல்டன் கலர் வரும் வரை வறுத்து எடுக்கவும். அதே கடாயில் 1½ டீஸ்பூன் மல்லி விதை, ஒரு துண்டு பட்டை, 2 லவங்கம், தாமரை மொக்கு ஒரு துண்டு ஆகியவற்றை மணம் வரும் வரை வறுத்தெடுக்கவும். பின் கடாயில் சிறிது வெந்தயம் மற்றும் ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து வறுக்கவும்.

இதையும் படியுங்கள்:
சமையலறையின் சின்னச் சின்ன ரகசியங்கள்!
healthy samayal recipes

ஒரு டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் பூவையும் சிவக்க வறுத்தெடுக்கவும். வறுத்த பொருட்கள் அனைத்தையும்  மிக்ஸியில் போட்டு பவுடராக்கிக் கொள்ளவும்.

அரை கப் தண்ணீரில் 40 கிராம் அளவு புளியை ஊறவைத்து, கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். 

அதில் 1½ டீஸ்பூன் வெல்லம், ½ டீஸ்பூன் உப்பு சேர்த்து  கரைத்துக் கொள்ளவும். இதனுடன் மசாலாப் பவுடரையும் போட்டு கட்டியில்லாமல் நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும். சமைத்து வைத்த சாதத்தையும் பருப்பையும் ஒன்று சேர்த்து மசித்துக்கொள்ளவும்.

பின் ஒரு பெரிய கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் உரித்த 8 சின்ன வெங்காயம், நறுக்கிய கேரட் ½ கப், பீன்ஸ் ¼ கப், குடை மிளகாய் ¼ கப், பச்சைப் பட்டாணி ¼ கப் சேர்த்து 3-4 நிமிடங்கள் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் ஒரு கப் தண்ணீரை அதில் ஊற்றி காய்களை வேகவிடவும். ஓவர் குக் ஆகிவிடாமல் கிரஞ்சியாக இருக்கும்போது அதில் கரைத்து வைத்த மசாலாவை ஊற்றவும். அவை கொதித்து மணம் வந்தவுடன் பருப்பு சாத கலவையையும் சேர்த்து, 1¼ கப் நீர் ஊற்றவும். அனைத்தையும் ஒன்று சேரக்கலந்து, தோசை மாவு பதத்திற்கு கொண்டு வரவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

பின் ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, சூடானதும் அரை டீஸ்பூன் கடுகு, ஒரு மிளகாய் வற்றல், பத்து முந்திரி பருப்பு, கறிவேப்பிலை, கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொட்ட பிஸிபேளா பாத் ரெடி. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com