

மாம்பழ சீசன் இது. இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில், மாங்காயிலிருந்து தயாரிக்கப்படும் எட்டுவித வெவ்வேறு வகையான சுவைகொண்ட உணவுகளின் பட்டியலை இப்போது பார்ப்போம்.
ஆம் கி லவுன்ஜி (Aam Ki Launji), ராஜஸ்தான்: மாங்காயை தோல் சீவி துருவிக்கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கவும். பின் கடுகு, பெருஞ்சீரகம், கருஞ்ஜீரகம் சேர்த்து, பொரிந்ததும் அதனுடன் துருவிய மாங்காய், சிறிது உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து கிளறவும். பின் மிளகாய்தூள் சேர்த்து, அனைத்தும் ஒன்று சேர்ந்து சரியான பதம் வந்ததும் இறக்கவும். ரொட்டி அல்லது பருப்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட, கலவையான சுவையுடன் ஆரோக்கியமும் தரும்.
அம்பே டால் (Ambe Dal), மகாராஷ்டிரா: தோல் சீவி துருவிய மாங்காயை கடலைப் பருப்புடன் சேர்த்து வேகவைக்கவும். அதனுடன் தேங்காய் பச்சை மிளகாய் அரைத்து சேர்த்து, கறிவேப்பிலை கடுகு தாளித்துக்கொட்டி உப்பு சேர்த்துக் கலக்கவும். கோடைகாலத்தில் அதிக சிரமமின்றி, சுலபமாக தயாரிக்கக்கூடிய உணவு இது.
ஆம் பன்னா (Aam Panna), மகாராஷ்டிரா: எலக்ட்ரோலைட் பவுடர் மற்றும் பாட்டில் ட்ரிங்க்ஸ் சந்தை க்கு வரும் காலத்திற்கு முன்பே அவைகளுக்கு சமமான சத்துக்கள் கூடிய இந்த ஆம் பன்னா என்ற பானத்தை மக்கள் தயாரித்து அருந்தி வந்துள்ளனர். தோல் சீவிய மாங்காய் துண்டுகளை ரோஸ்ட் செய்து, பின் அரைத்து வடிகட்டி அந்த ஜூஸுடன் வெல்லம், வறுத்து அரைத்த சீரகப் பவுடர் மற்றும் பிளாக் சால்ட் கலந்து புதினா இலைகளால் அலங்கரித்து அருந்த, சுவை வேற லெவெலுக்கு இழுத்துச் செல்லும். புளிப்பு, இனிப்பு, உப்பு போன்ற சுவைகள் உடலுக்குள் சென்று நீரிழப்பு மற்றும் சூட்டினால் உண்டாகும் சக்திக் குறைபாடு உண்டாகாமல் உடலைப் பாதுகாக்கும்.
மாவினகாயி சித்ரன்னா, கர்நாடகா: தோல் சீவி துருவிய மாங்காயுடன், மஞ்சள் தூள், உப்புத்தூள் மற்றும் சாதத்தைக் கலந்து பிறகு அதனுடன் கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் வேர்க்கடலைப் பருப்புகளை எண்ணெயில் வறுத்து சேர்த்துக் கலந்து உண்ணலாம். இதன் புளிப்பு சுவை நீண்ட நேரம் உணவை கெட்டுப்போகாமல் பாதுகாப்பதால், பயணத்தின்போது இதைக் கொண்டு செல்வது நன்மை தரும்.
ஃபஜெட்டோ (Fajeto), குஜராத்: ஆம்ராஸ் எனப்படும் பிரபலமான இனிப்பு ஒன்றைத் தயாரிக்க பழுத்த மாம் பழங்களிலிருந்து சாற்றை பிழிந்தெடுத்த பின், பழங்களில் தங்கும் பழக்கூழிலிருந்து தயாரிக்கப்படுவது ஃபஜெட்டோ. மீந்திருக்கும் மாம்பழக் கூழுடன் மோர் அல்லது யோகர்ட் சேர்த்து குழம்பு பதத்திற்கு கொண்டு வந்து கொதிக்க வைத்துக்கொள்ளவும். அதில் சீரகம், வெந்தயம் மற்றும் சிவப்பு மிளகாய்களை நெய்யில் தாளித்துக்கொட்டி, உப்பு சேர்த்து சாதம் அல்லது கிச்சடியுடன் சேர்த்துப் பிசைந்து உண்ணலாம்.
மாங்கா பச்சடி, தமிழ்நாடு: தமிழ்நாட்டில் தமிழ் வருடப் பிறப்பன்று வீடுதோறும் தவறாமல் செய்து உண்ணப்படும் அறுசுவை கொண்ட பச்சடி இது. இதில் சேர்க்கப்படும் பொருட்கள் ஒவ்வொன்றும் ஒரு சுவையை நினைவுபடுத்துபவை. எண்ணெயில் கடுகு மற்றும் சிவப்பு மிளகாய்களை தாளித்து, பின் வேப்பம் பூ சேர்த்து வறுத்துவிட்டு அதில் உப்பு, செல்லம், மாங்காய் துண்டுகள், சிறிது தண்ணீர் சேர்த்து கிரேவி பதத்திற்கு சமைத்தெடுத்தால் மாங்கா பச்சடி தயார்.
அம்பே உப்காரி (Ambe Upkari), கொங்கணி: கர்நாடகாவின் மங்களூர் மக்கள் மாம்பழ சீசனில் அடிக்கடி தயாரித்து உண்ணும் உணவிது. 90 சதவிகிதம் பழுத்த நிலையில் உள்ள மாம்பழத்தை துண்டுகளாக்கி தண்ணீரில் போட்டு வேகவைத்துக்கொள்ளவும். அதில் துருவிய தேங்காய், சீரகம், சிவப்பு மிளகாய் சேர்த்து அரைத்த விழுதைப் போட்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பிறகு தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அம்பே உப்காரியில் கொட்டிக் கலந்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். புளிப்பு மற்றும் இனிப்பு சுவை அதிகமிருக்க விரும்புவோர் கொஞ்சம் புளிக் கரைசல் மற்றும் வெல்லம் சேர்த்தும் இதைத் தயாரிக்கலாம்.
ஆமெர் சட்னி, வெஸ்ட் பெங்கால்: பச்சையான அல்லது பாதி பழுத்த மாங்காய்களை தோல் சீவி துருவி அதனுடன் தண்ணீர் சேர்த்து மிருதுவாகும் வரை வேகவிடவும். பின், வெல்லம், சிவப்பு மிளகாய் மற்றும் பான்ச் போரோன் எனப்படும் ஐந்து வகை ஸ்பைஸஸ் சேர்த்து அரைத்த பொடி ஆகியவை சேர்த்துக் கலந்துவிடவும். கண்ணாடி போன்ற பளபளப்புடன் ஆமெர் சட்னி தயாராகிவிடும். தேவைப்பட்டால் சில பேரீச்சம் பழங்களை அரைத்து சேர்த்தும் உண்ணலாம்.