

-ஸ்ரீவித்யா பசுபதி
காலை நேர ப்ரேக்ஃபாஸ்ட், இரவு உணவுக்கு டிஃபன் இவைகளை வகைவகையாகச் செய்வதே பெரிய வேலை. அதைவிடக் கடினமானது இட்லி, தோசை, சப்பாத்தி, கிச்சடி, பணியாரம் போன்ற டிஃபன் வகைகளுக்கு தொட்டுக்கொள்ள சைட் டிஷ் என்ன செய்வது என்று யோசித்து முடிவெடுப்பது சிக்கலான ஒன்றுதான். அதுவும் வீட்டில் இருக்கும் இளைய தலைமுறையைத் திருப்திப்படுத்தும் வகையில் நிறைவாகச் செய்வது என்பது சவாலான விஷயம்தான்.
இட்லி, தோசை, வெண்பொங்கல், பணியாரம், கிச்சடி போன்ற டிஃபன் வகைகளுக்கு சட்னி அவசியம் எதிர்பார்ப்பார்கள். எப்போதும் தேங்காய் சட்னிதானா என்று சலித்துக் கொள்பவர்களுக்காகவே சட்டென்று செய்து அசத்தும் சட்னி வகைகளைப் பார்க்கலாமா.
தக்காளி வெங்காயம் எப்போதும் சமையலறையில் இடம் பிடித்திருப்பவை. அவற்றைக் கொண்டு தினம் ஒரு விதம் என வகை வகையாகச் செய்து அசத்தலாம்.
தக்காளி, பெரிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 50 சதவீதம் வதக்கிவிட்டு, ஆறவைத்து அரைத்தால் சுவையான சட்னி தயார். இதிலேயே ஒரு மாறுதலுக்கு, பச்சை மிளகாய்க்கு பதில் காய்ந்த மிளகாய் போட்டால் சுவை வேறுவிதமாக இருக்கும். பூண்டு விரும்பாதவர்கள் அதைத் தவித்துக்கொள்ளலாம்.
அதேபோல், தக்காளி, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் இவற்றோடு புதினா அல்லது கொத்தமல்லி போட்டு வதக்கி அரைத்தால் அதன் சுவைக்கு இட்லி சுலபமாக உள்ளே செல்லும்.
இதே செய்முறையில், தக்காளி இல்லாமல் பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, கொத்தமல்லி அல்லது புதினா போட்டு வதக்கி அரைத்தால், ஹோட்டல் சுவையில் பச்சைநிற சட்னி தயார். இவை அனைத்திற்கும் அரைத்த பிறகு தாளிதம் அவசியம். கடுகு, உளுந்து, பெருங்காயம், கருவேப்பிலை தாளித்தால் மணமும், ருசியும் உங்கள் கைப்பக்குவத்தோடு சேர்ந்து உங்களை கிச்சன் க்வீனாக முடிசூட்டிவிடும்.
பிரயாண சமயங்களில் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு ஒரு சட்னி செய்யலாமா?
தக்காளி, பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், உப்பு போட்டு மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். (எதையும் வதக்கவேண்டாம்.) ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயம் கருவேப்பிலை தாளித்து, அரைத்த விழுதைக் கொட்டி, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கி வைத்தால், ரெண்டு நாள் பிரயாணத்தில் இட்லி, சப்பாத்திக்கு சரியான ஜோடியாய் துணைவரும். ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் ஆனாலும் கெடாது.
தக்காளி வெங்காயம் இல்லை, தேங்காய் சட்னியிலேயே வேறு சுவையில் செய்யமுடியுமா? தக்காளி வெங்காயம் நறுக்க, வதக்க நேரமில்லை என்று புலம்புபவர்களா நீங்க? இதோ உங்களுக்காக...
தேங்காய், இஞ்சி பச்சைமிளகாய், உப்பு புளி பொட்டுக்கடலை என்று வழக்கமான சட்னி அரைக்காமல், தேங்காய், காய்ந்த மிளகாய், நாலைந்து பூண்டுப்பல், உப்பு போட்டு அரைத்துப் பாருங்கள். சுள்ளென்று தோசைக்கு நல்ல துணை.
தேங்காய், பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் நாலைந்து, உப்பு போட்டு அரைத்தால் இன்னும் சுவையான சட்னி தயார்.
மேலே சொன்ன தக்காளி வெங்காயம் சட்னி வகைகளில் எதற்கும் பொட்டுக்கடலை தேவையில்லை. விருப்பம் இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம். அதேபோல், சிறிது கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு வறுத்து இதோடு சேர்த்து அரைக்கலாம். நிறைய பேருக்கு செய்யும்போது இவ்வாறு பருப்பு போட்டுக்கொண்டால் சட்னி அளவு அதிகமாக வரும்.
என்ன, நாளைக்கு உங்கள் வீட்டில் என்ன சட்னி செய்யப்போறீங்க?