அது என்னது செவ்வாழை அம்மினி?

Ammini
Ammini
Published on

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இனிப்பு மற்றும் சுவையான சிற்றுண்டிகள் மீது ஒரு தனி பிரியம் உண்டு. கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான தின்பண்டங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் இரசாயனங்களைக் கொண்டிருக்கின்றன. எனவே, வீட்டில் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான தின்பண்டங்களே சிறந்தது. அந்த வகையில், இந்தப் பதிவில் செவ்வாழை அம்மினி எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

செவ்வாழை அம்மினி செய்யத் தேவையான பொருட்கள்:

  • நன்கு பழுத்த செவ்வாழைப்பழம் - 2

  • ராகி மாவு - 1 கப்

  • அரிசி மாவு - 1/2 கப்

  • நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் - தேவையான அளவு

  • பால் - 2 டேபிள் ஸ்பூன்

  • நெய் - 1 டேபிள் ஸ்பூன்

  • முந்திரி, திராட்சை - சிறிதளவு

  • உப்பு - ஒரு சிட்டிகை

இதையும் படியுங்கள்:
வயிற்றுக்குள் 'கடமுட' ஓசை அடிக்கடி கேட்கிறதா? வாழை இலையில் உணவு உண்பது உதவுமே!
Ammini

செய்முறை:

  • முதலில், வாழைப்பழத்தை தோல் உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் பால் மற்றும் சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

  • ஒரு பாத்திரத்தில் ராகி மாவு மற்றும் அரிசி மாவு இரண்டையும் சேர்த்து அதனுடன் உப்பு, அரைத்த வாழைப்பழக் கலவையை சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். மாவு சப்பாத்தி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு பால் அல்லது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

  • பிசைந்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து 10-15 நிமிடங்கள் வேக வைக்கவும்.

  • ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

  • வெந்த அம்மினியை கடாயில் போட்டு லேசாக வறுத்துக்கொள்ளவும். பின்னர் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் மீதமுள்ள நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

இதையும் படியுங்கள்:
சருமத்துக்கு இளமைப் பொலிவைத் தரும் வைட்டமின் சி பலன்கள்!
Ammini

செவ்வாழையின் நன்மைகள்:

செவ்வாழை பொட்டாசியம், வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்களை கொண்டது. இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது. மேலும், குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த செவ்வாழை அம்மினி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. எனவே, வீட்டிலேயே செவ்வாழை அம்மினி செய்து உங்கள் குடும்பத்தினருடன் உண்டு மகிழுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com