
கேரளாவில் கண்ணூர் பகுதியில் தயாரிக்கப்படும் இந்த அப்பம் செய்வதும் எளிது. சுவையும் அபாரமாக இருக்கும்.
கண்ணூரப்பம்:
அரிசி ஒரு கப்
மைதா 1/4 கப்
சர்க்கரை 3/4 கப்
ஏலக்காய் 4
உப்பு ஒரு சிட்டிகை
ஈஸ்ட் விருப்பப்பட்டால் 1/4 ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு
ஒரு கைப்பிடி அளவு அரிசியை தனியாக எடுத்து வைத்து மீதமுள்ள அரிசியைக் களைந்து குக்கரில் வைத்து சாதமாக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும். சாதம் நன்கு ஆறியதும் அதில் மைதா மாவு, சர்க்கரை, ஏலக்காய், தனியாக எடுத்து வைத்த அரிசி, உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்தெடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் அளவு ஈஸ்ட் சேர்த்து உடனடியாக கண்ணூரப்பம் செய்யலாம் அல்லது மூன்று மணிநேரம் புளிக்கவிட மாவு தயார்.
பணியார சட்டி ஒன்றை அடுப்பில் வைத்து நன்கு சூடானதும் எண்ணெய் விட்டு தயாராக கரைத்து வைத்துள்ள மாவினை பணியார சட்டியில் ஊற்றி இரண்டு புறமும் பொன் கலரில் வரும்வரை பொரித்தெடுக்க மிகவும் ருசியான கண்ணூரப்பம் தயார்.
மசாலாப் பணியாரம்:
இட்லி மாவு 2 கப்
கடலை மாவு 1/4 கப்
கேரட் 1
குடமிளகாய் பாதி
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
கொத்துமல்லி சிறிது
கறிவேப்பிலை சிறிது
உப்பு தேவையானது
தாளிக்க: கடுகு, கடலைப்பருப்பு1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு1 ஸ்பூன், நல்லெண்ணெய்
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு தாளித்து கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய குடைமிளகாய், கேரட், பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கி சிறிது ஆறியதும் இட்லி மாவில் கலந்து, கடலை மாவு கால் கப் சேர்த்து தேவையான அளவு உப்பும், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலையையும் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
பணியாரக்கல் காய்ந்ததும் குழிகளில் எண்ணெய் விட்டு தயார் செய்த மாவை தேவையான அளவு ஊற்றி இருபுறமும் முறுகலாக சுட்டெடுக்கவும். மிகவும் அருமையான மசாலாப் பணியாரம் தயார். இதனைக் கார சட்னியுடன் பரிமாற நன்றாக இருக்கும்.
காரச் சட்னி:
தக்காளி 4
பச்சை மிளகாய் 6
உப்பு தேவையானது
புளி சிறு துண்டு
பூண்டு 4 பற்கள்
தாளிக்க: கடுகு, நல்லெண்ணெய்
தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, புளி, பூண்டு அனைத்தையும் வதக்காமல் பச்சையாகவே மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். வாணலியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு கடுகு போட்டு, கடுகு பொரிந்ததும் அரைத்து வைத்ததை சேர்த்து இரண்டு கிளறு கிளறி இறக்க ருசியான கார சட்னி தயார். ரொம்ப சிம்பிள். ஆனால் சுவையோ அள்ளும்.