
ஆந்திரா ஸ்பெஷல் குடுமுலு:
பச்சரிசி ரவை 1 கப்
கடலைப்பருப்பு 2 ஸ்பூன்
உப்பு சிறிது
தேங்காய்த் துருவல் 1 கப்
காய்ந்த மிளகாய் 1
சீரகம் 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
பச்சரிசியை நன்கு கழுவி 1/2 மணி நேரம் ஊறவைத்து நீரை வடித்து சிறிது நேரம் ஃபேன் அடியில் உலர்த்தவும். பிறகு அதனை ரவை பதத்திற்கு பொடித்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை சிறிது தண்ணீர் விட்டு 1/2 மணி நேரம் ஊறவிடவும்.
வாணலியில் நெய் விட்டு சீரகம், கிள்ளிய கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும். சீரகம் பொரிந்ததும் ஊறிய கடலைப்பருப்பை சேர்த்து இரண்டு பிரட்டு பிரட்டி, ஒரு கப் அரிசி ரவைக்கு இரண்டு கப் தண்ணீர் விட்டு தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நடுக்கொதி வந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பொடித்த அரிசி ரவையை சேர்த்து கட்டி தட்டாமல் கிளறவும்.
தட்டை போட்டு மூடி நன்கு வேக விடவும். தேங்காயும் மிளகாயும் சேர்த்து கொரகொரப்பாக பொடித்து எடுக்கவும். அரிசி ரவை வெந்ததும் தேங்காய், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து ஆறவிடவும். பொறுக்கும் சூட்டில் கிளறியதை உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து எடுக்க மிகவும் ருசியான மாலை டிபன் தயார். தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
கடலைப்பருப்பு இனிப்பு சுண்டல்:
கடலைப்பருப்பு 200 கிராம்
பச்சை மிளகாய் 2
உப்பு 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
சர்க்கரை 2 ஸ்பூன்
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் சிறிது
மிக்ஸியில் தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக பொடித்தெடுக்கவும். கடலைப்பருப்பை வெறும் வாணலியில் சூடு வர வறுத்து தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து பருப்பு நன்கு மலர வேகவிட்டு எடுக்கவும்.
வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு பொரிந்ததும் வெந்த கடலைப் பருப்பை நீரை வடித்து சேர்க்கவும். பொடித்து வைத்துள்ள தேங்காய்த் துருவலையும் சேர்த்து கடைசியாக 2 ஸ்பூன் சர்க்கரை, பெருங்காயத்தூள் தூவி கலந்து இறக்க மிகவும் ருசியான உப்பு, உரப்பு, இனிப்பு கலந்த சுண்டல் தயார்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் புரதச்சத்தும் நார்ச்சத்தும் மிகுந்த நவதானிய சுண்டலை எடுத்துக்கொள்வது நல்லது.
கருப்பு கொண்டைக்கடலை
காராமணி
சிகப்பு மொச்சை
வெள்ளை கொண்டைக்கடலை
பச்சை பயறு
கொள்ளு. தலா 1/2 கப்
பச்சை பட்டாணி
துவரை
கருப்பு உளுந்து
பொடிக்க: இஞ்சி ஒரு துண்டு, சோம்பு 1/2 ஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, தேங்காய்த் துருவல் 1/2 கப், கறிவேப்பிலை சிறிது.
தாளிக்க: கடுகு, உடைத்த உளுந்து, கறிவேப்பிலை, நல்லெண்ணெய்
நவதானியங்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாகக் கழுவி 6 முதல் 8 மணி நேரம் வரை ஊறவிடவும். குக்கரில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 4 விசில் விட்டு எடுக்கவும். இஞ்சி, சோம்பு, தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கடுகு பொரிந்ததும் வெந்த நவதானியங்களை நீரை வடித்து சேர்த்துக்கிளறவும். பொடித்து வைத்த மசாலாவை சேர்த்துக்கிளறி இறக்க மிகவும் ருசியான நவதானிய சுண்டல் தயார்.