தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 3
கருவேப்பிலை -சிறிது
சின்ன வெங்காயம் - 5
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
புளி - சிறிது
சீரகம் - ஒரு ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
உப்பு -தேவையான அளவு.
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு மூன்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து அதில் காய்ந்த மிளகாய் இரண்டையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் .
ஒரு மணி நேரம் கழிந்த பின் தண்ணீர் இல்லாமல் மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் சின்ன வெங்காயம் , கறிவேப்பிலை, கொத்தமல்லி சீரகம் முதலியவற்றை சேர்த்து சற்று கொர கொரப்பாக அரைக்கவும்.
அரைத்த மாவை பாத்திரத்தில் இட்டு , துருவிய தேங்காய், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் லேசாக எண்ணெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை அளவுக்கு தட்ட வேண்டும் .
தட்டுவடை தட்டுவதை விட சற்று கனமாக இருக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து வடை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் தட்டி வைத்திருக்கும் இந்த வடையை எண்ணெயில் போடவும். எண்ணெய் அடியில் சென்று வடை வெந்து மேலே வரும், அப்போது திருப்பி போட்டு இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும். இப்போது கொங்கு நாட்டு புளிவடை ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி மிகவும் அருமையாக இருக்கும். எப்போதும் போல பருப்பு வடை, உளுந்து வடைபோல அல்லாமல் புளிவடை செய்து பாருங்கள் .
சுவையும், வடையும் வித்தியாசமாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 2 கப்
பலாக்கொட்டை -15
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி -சிறிது
துருவிய தேங்காய் - 1/4 கப்
கருவேப்பிலை -சிறிது
உப்பு -தேவையான அளவு.
செய்முறை:
இட்லி அரிசியை கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும். பலா கொட்டையை தோல் நீக்கி இடி கல்லில் போட்டு நன்றாக இடித்து எடுத்து அதை தனியாக எடுத்து வைக்கவும் வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
தேங்காயை துருவி வைக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த அரிசியை போட்டு ஒரு சுற்று சுற்றி அதன் பின் இடித்த பலாக்கொட்டையை சேர்த்து அரைத்து, அதனுடன் தேங்காய் துருவல் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி கருவேப்பிலை அனைத்தையும் போட்டு அதுக்கு தேவையான அளவுக்கு உப்புபோட்டு தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும் . அரைத்த அந்த தோசை மாவை உடனேயேயும் தோசையாக ஊற்றலாம். அல்லது இரண்டு மணி நேரம் கழித்தும் தோசையாக ஊற்றலாம் .
அடுப்பில் தோசை கல்லை வைத்து கல் சூடானதும் தோசை ஊற்றுவது போலவே இந்த தோசையும் ஊற்றி இருபுறமும் வெந்த பின் திருப்பி போட்டு மறுபுறமும் வேகவைத்து எடுத்தால் சுவையான பலாக்கொட்டை தோசை தயார். இது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சத்தானது. சுடச்சுட தேங்காய் சட்னியுடன் சாப்பிட ருசியே அலாதிதான்.