
குறிஞ்சான் கீரை தொக்கு:
குறிஞ்சான் கீரை ஒரு கட்டு
மிளகாய் வற்றல் 6
பெருங்காயம் சிறிது
புளி எலுமிச்சையளவு
கடுகு ஒரு ஸ்பூன்
வெந்தயம் சிறிது
உப்பு தேவையான அளவு
எண்ணெய்
குறிஞ்சான் கீரை சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து. வேலிகள் மற்றும் மரங்களில் கொடி போல படரும் இவை சிறிது கசப்பு சுவை உடையது.
வெறும் வாணலியில் கடுகு, வெந்தயம் இரண்டையும் வறுத்தெடுத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். குறிஞ்சான்கீரை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி எடுக்கவும். பிறகு புளி, மிளகாய் வற்றல் இரண்டையும் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற விட்டு குறிஞ்சான் கீரையுடன் சேர்த்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு போட்டு கடுகு பொரிந்ததும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். நன்கு கெட்டியாக சுருண்டு வந்ததும் கடுகு வெந்தயத்தை பொடித்த பொடியை சேர்த்து கிளறி இறக்கவும். தொக்கு தயார் இதனை சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம் தோசை இட்லிக்கும் தொட்டுக் கொள்ளலாம் கசப்பு தெரியாது.
மணலிக்கீரை மசியல்
மணலிக்கீரை 4 கைப்பிடி அளவு
பயத்தம் பருப்பு 1/2 கப்
சின்ன வெங்காயம் 10
பூண்டு 4
சீரகம் அரை ஸ்பூன்
தக்காளி 2
பச்சை மிளகாய் 4
மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
தாளிக்க :கடுகு, உளுத்தம் பருப்பு, பூண்டு 2 பல், சின்ன வெங்காயம் 4 நல்லெண்ணெய்
நாவமல்லிக்கீரை என்ற பெயரிலும் அழைக்கப்படும் மணலிக்கீரை பூண்டு இனத்தைச் சேர்ந்தது. சமையலுக்கு உகந்த மருத்துவ குணம் நிறைந்த கீரை இது. மார்பு சளி, வயிற்றுப்புண், குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் நீங்க இதனை எடுத்துக்கொள்ளலாம்.
மணலிக் கீரையை இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் நான்கு கப் தண்ணீர் விட்டு பயத்தம் பருப்பு சேர்த்து அத்துடன் ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துள்ள மணலிக் கீரையைப் போட்டு உப்பு, மஞ்சள் தூள், சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து குக்கரை மூடி நான்கு விசில் வந்ததும் இறக்கவும்.
பிரஷர் குறைந்ததும் குக்கரைத் திறந்து நன்கு கரண்டியால் மசித்துக்கொண்டு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன் சேர்த்து கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், நசுக்கிய பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கி தயாராக உள்ள கீரையில் போட்டு கலந்து ஒரு கொதிவிட்டு இறக்க மிகவும் ருசியான, மருத்துவ குணம் நிறைந்த மணலிக்கீரை மசியல் தயார்.