சில நேரங்களில் நாம் சமைக்கும் போது சில தவறுகள் ஏற்படலாம். வாங்க இன்னிக்கு தெரிந்து கொள்ளலாம் சில உபயோகமான டிப்ஸை....
கொத்தமல்லி இலை மற்றும் புதினா சட்னியை அரைக்கும் போது ஒரு துளி எலுமிச்சபழச் சாறை கலந்து அரைத்தால் புதினா மற்றும் கொத்தமல்லியின் பச்சை நிறம் மாறாது.
பொறியலிலோ, கூட்டிலோ அல்லது வேறு ஏதாவது உணவில் உப்பு அதிகமாக ஆகி விட்டால் சிறு துளி எலுமிச்சபழச் சாற்றை சேர்க்கலாம் அல்லது இரண்டு உருளைக்கிழங்கை வேக வைத்து கலக்கலாம். இவை இரண்டும் அதிகமாக உள்ள உப்பை ஈர்த்து விடும்.
மதிய உணவிற்கோ அல்லது இரவு நேரத்திற்கோ கொண்டைக்கடலை மசாலா செய்வதாக திட்டம் போட்டு வைத்திருப்பீர்கள், ஆனால் ஐந்து மணி நேரத்திற்கு முன்னதாகவே ஊறப் போட மறந்து விட்டால் கவலைப் பட வேண்டாம். சட்டென ஊற ஒரு idea, கொதித்த வெந்நீரில் கடலையைப் போட்டு அத்துடன் ஒரு சிட்டிகை cooking soda போட்டு மூடி வைக்கவும். ஒரு மணி நேரத்தில் நன்றாக ஊறிவிடும்.
வாழைக்காய், வாழைப்பூ போன்றவற்றை நறுக்கும் போது கைகளில் சிறிது தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்கினால் கைகளில் பால்கறை படாமல் இருக்கும்.
சேனைக்கிழங்கை நறுக்கும் போதும் எண்ணெயை கைகளில் தடவிக் கொள்ளவும். சேனைக்கிழங்கை சாப்பிடும் போது சில சமயம் நாக்கரிக்கும். ஆகவே எப்போதும் சேனைக்கிழங்கை நறுக்கியபின் சிறிது புளிகரைசல் சேர்த்து 20 நிமிடத்திற்கு ஊற வைத்து பின்பு நீரை வடிகட்டி விட்டு சமைக்கவும்.
பாகற்காய் சில சமயங்களில் மிகவும் கசக்கும். பாகற்காயை நறுக்குவதற்கு முன்னால் முழுதாக ஒரு பாத்திரத்தில் போட்டு திறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பையும் (சிறு சிட்டிகை) போட்டு தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து பாகற்காயை தண்ணீரிலிருந்து எடுத்து துடைத்து விட்டு பின்பு அதை நறுக்கி பொறியல் செய்தால் அத்தனை கசக்காது.
பிரியாணி மற்றும் fried rice செய்யும் போது பாசுமதி அரிசியை அரை மணி நேரத்திற்கு ஊர வைத்து பின்பு நீரை வடிகட்டி அரிசி உலர்ந்த பின் சிறிது நெய்யில் அதை வருத்கவும். பிறகு அதில் பிரியாணியோ அல்லது புலாவோ எது செய்தாலும் அரிசி வெந்து உதிர் உதிராகவும் நீளமாகவும் இருக்கும்.
கேரட் அல்வா அல்லது சுரைக்காய் அல்வா செய்யும் போது கேரட் அல்லது சுரைக்காயை முதலில் துறுவி குக்கரில் ஒரு சிட்டி விசில் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை அல்வா செய்யும் போது சீக்கிரமாக வெந்து நன்றாக குழைந்து விடும்.
சீடை முறுக்கு தட்டை போன்ற பண்டங்களை எண்ணெயில் பொரிப்பதற்கு முன்னால் எண்ணெய் காய்ந்த உடன் சிறிது புளியை உருட்டி எண்ணெயில் போட்டு கறுக விடவும். கறுகிய பிறகு அதை எடுத்து விட்டு சீடையோ அல்லது முறுக்கையோ பொரிக்க வேண்டும்.