
மினி மசாலா வெஜ் தோசை:
தோசை மாவு 2 கப்
கேரட் 1
வெங்காயம் 1
குடைமிளகாய் பாதி
பச்சை பட்டாணி 1/4 கப்
பச்சை மிளகாய் 2
கொத்தமல்லி சிறிது
உப்பு சிறிது
கறிவேப்பிலை
நல்லெண்ணெய்
கேரட், குடைமிளகாய் இரண்டையும் துருவிக் கொள்ளவும். பச்சை பட்டாணியை பாதியாக கத்தியால் நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். எல்லாவற்றையும் ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது உப்பு கலந்து வைக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சின்னச் சின்ன மினிதோசைகளாக உள்ளங்கை அளவு விட்டு அதில் கலந்து வைத்துள்ள காய்களை பரவலாகத் தூவி நல்லெண்ணெய் விட்டு தட்டைப் போட்டு மூடி வேகவிடவும். இரண்டு நிமிடங்கள் கழித்து திருப்பிப் போட்டு பொன் முறுகலானதும் எடுத்து விடவும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சிற்றுண்டி இது.
பஜ்ஜி மிளகாய் சட்னி:
பஜ்ஜி மிளகாய் 2
தக்காளி 1
சின்ன வெங்காயம் 6
பூண்டு 4 பற்கள்
காய்ந்த மிளகாய் 1
புளி சிறிது
நல்லெண்ணெய் சிறிது
உப்பு தேவையானது
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு துண்டுகளாக நறுக்கிய பஜ்ஜி மிளகாய், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை போட்டு காய்ந்த மிளகாய் ஒன்று, பூண்டையும் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் உப்பு, புளி, கொத்தமல்லித்தழை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலியை தாளித்து கொட்ட மிகவும் ருசியான பஜ்ஜி மிளகாய் சட்னி தயார்.
ருசியான பால் ரொட்டி:
மைதா 2 கப்
பால் 1/2 கப்
வெதுவெதுப்பான தண்ணீர் 1/4 கப்
ஈஸ்ட் 1ஸ்பூன்
சர்க்கரை 1/2 ஸ்பூன்
ஆலிவ் ஆயில் 2 ஸ்பூன்
உப்பு தேவையானது
வெண்ணெய் 2 ஸ்பூன்
கொத்தமல்லி சிறிது
சில்லி ஃப்ளேக்ஸ் 2 ஸ்பூன்
ஒரு பாத்திரத்தில் மைதாமாவு, உப்பு, சர்க்கரை, ஈஸ்ட் எல்லாவற்றையும் சேர்த்து கால் கப் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். கொஞ்சம் கொஞ்சமாக பாலை சேர்த்து பிசையவும். ஆலிவ் ஆயில் 2 ஸ்பூன் (ஆலிவ் ஆயில் இல்லையென்றால் சாதாரண மணமில்லாத ரீஃபைன்ட் எண்ணெயை சேர்க்கலாம்) சேர்த்து நன்கு இழுத்து பிசைந்து தட்டைப் போட்டு மூடி இரண்டு மணி நேரம் வைக்கவும். நன்கு உப்பி வந்ததும் திரும்பவும் எடுத்து நன்கு பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்துக் கொள்ளவும். இதனை மாவில் பிரட்டி ரொட்டிகளாக இடவும்.
ஒரு கிண்ணத்தில் வெண்ணை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, சில்லி ஃபிளேக்ஸ் மூன்றையும் நன்கு கலந்து வைக்கவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும் மிதமான தீயில் வைத்து தேய்த்த ரொட்டிகளைப் போட்டு இரண்டு பக்கமும் நன்கு வேக விட்டு எடுக்கவும். நன்கு உப்பி வரும். ரொட்டியின் மேல் வெண்ணை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, சில்லி ஃப்ளேக்ஸ் கலந்த கலவையைத் தடவும். மிகவும் மணமான, ருசியான ரொட்டி தயார்.