
தொக்கு என்று சொன்னாலே நாக்கில் நீர் ஊறவைக்கும். இதனை காலை டிபன், மதியம் சாதத்தில் பிசைந்து சாப்பிட, இரவு உணவிற்கு சைட் டிஷ்ஷாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். வேலைக்கு செல்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். ஒரு வாரம் பத்து நாட்கள் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.
புளியங்காய் தொக்கு:
பிஞ்சு புளியங்காய் 1/4 கிலோ
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
பூண்டு 10 பற்கள்
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் 10
வெல்லம் சிறு துண்டு
தாளிக்க: கடுகு, வெந்தய பொடி, நல்லெண்ணெய்
பிஞ்சு புளியங்காயாக எடுத்து சுத்தம் செய்து கழுவி ஈரம் போக துடைத்து வைக்கவும். அத்துடன் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள், பூண்டு, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் ரொம்பவும் விழுதாக இல்லாமல் சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு ஒரு ஸ்பூன், வெந்தயம் வறுத்து பொடித்தது 1/2 ஸ்பூன் போட்டு கடுகு பொரிந்ததும் அரைத்து வைத்துள்ள புளியங்காய் கலவையை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறவும். ஐந்து நிமிடத்தில் எண்ணெய் பிரிந்து தனியாக வரும் சமயம் எடுத்து ஆற வைத்து பத்திரப்படுத்தவும்.
உப்பு, புளிப்பு, காரம் என மிகவும் ருசியான தொக்கு தயார். இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பூரி, இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம்.
தோசைக்காய் தொக்கு:
தோசைக்காய் 1
சின்ன வெங்காயம் 10
பூண்டு 4பற்கள்
உப்பு தேவையானது
புளி சின்ன எலுமிச்சையளவு
காய்ந்த மிளகாய் 6 -8
தாளிக்க: கடுகு, சீரகம், நல்லெண்ணெய் 4 ஸ்பூன்
தோசைக்காயை தோல், உள்ளிருக்கும் விதைகளை நீக்கி துண்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தையும், பூண்டையும் தோல் உரித்துக்கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு முதலில் காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துக்கொண்டு, அதில் நறுக்கிய தோசைக்காய் துண்டுகள், பூண்டு, சின்ன வெங்காயம், புளி சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். சிறிது ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம் போட்டு கடுகு பொரிந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் பாட்டிலில் போட்டு வைத்து தேவைப்படும் சமயத்தில் உபயோகிக்கவும்.
மாங்காய் இஞ்சி தொக்கு:
மாங்காய் இஞ்சி 1/4 கிலோ
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
வினிகர் 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம் 1
வறுத்து பொடிக்க:
காய்ந்த மிளகாய் 10, வெந்தயம் 1/2 ஸ்பூன், பெருங்காய கட்டி ஒரு சிறு துண்டு
தாளிக்க: கடுகு, நல்லெண்ணெய்
மாங்காய் இஞ்சியை தோல் சீவி துருவிக்கொள்ளவும். வறுத்து பொடிக்க சொல்லிய பொருட்களை வாணலியில் போட்டு நன்கு வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு போட்டு கடுகு பொரிந்ததும் துருவிய மாங்காய் இஞ்சி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மிதமான சூட்டில் அடிப்பிடிக்காமல் வதக்கவும். பின்பு எலுமிச்சம் பழச்சாறு, வினிகர் சேர்த்து பொடித்து வைத்துள்ள பொடியைத் தூவி நன்கு கிளறி இறக்கவும். மிகவும் ருசியான மாங்காய் இஞ்சி தொக்கு தயார்.
இதனை தயிர் சாதம், இட்லி, தோசை, பொங்கல் என எல்லாவற்றிற்கும் தொட்டுக்கொள்ள தோதாக இருக்கும்.