
மிளகு சீரக ரசம்:
புளி எலுமிச்சை அளவு
தக்காளி ஒன்று
உப்பு தேவையானது
கொத்தமல்லி சிறிது
வறுத்தரைக்க:
துவரம் பருப்பு 2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
மிளகு 1 ஸ்பூன்
மிளகாய் 1
கறிவேப்பிலை சிறிது
தாளிக்க: நெய், கடுகு, சீரகம், கருவேப்பிலை
புளியை சூடான நீர் விட்டு ஐந்து நிமிடம் ஊறவிட்டு கரைக்கவும். உப்பு, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து புளி வாசனை போக ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.
வாணலியில் துவரம் பருப்பு, மிளகு, சீரகம், மிளகாய் ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். புளி வாசனை போனதும் அரைத்து வைத்துள்ள விழுதை ரெண்டு கப் தண்ணீர் சேர்த்து கரைத்துவிட்டு அடுப்பை பெரியதாக்கி ஓரங்களில் நுரைத்து வரும் வரை (கொதிக்க விட வேண்டாம்) அடுப்பில் வைத்து இறக்கவும். நெய்யில் கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் ரசத்தில் கொட்டி பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவ மணக்க மணக்க மிளகு சீரக ரசம் தயார்.
காலிஃப்ளவர் சீசன் இது. நிறைய கிடைக்கும்பொழுது அவற்றை வாங்கி வறுவல், பொரியல், குருமா என செய்து அசத்தலாம்.
காலிஃப்ளவர் வறுவல்:
காலிபிளவர் 1
பெரிய வெங்காயம் 1
மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
பூண்டு 4 பற்கள்
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
காலிஃப்ளவரை வெட்டி சுத்தம் செய்து உப்பு தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு வைக்கவும். வெங்காயத்தை மெல்லியதாக நீள நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் நான்கு ஸ்பூன் எண்ணெய்விட்டு முதலில் வெங்காயத்தை போட்டு சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்தெடுக்கவும். பிறகு அதே வாணலியில் மேலும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கி வைத்துள்ள காலிஃபிளவர் துண்டுகளை சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாகும் வரை வறுத்தெடுக்கவும்.
மேலும் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு பொரிந்ததும் தட்டி வைத்த பூண்டுகளைப்போட்டு பொரித்து வைத்துள்ள வெங்காயம், காலிபிளவர் சேர்த்து மிளகுத்தூள், காரப்பொடி, கறிவேப்பிலை போட்டு கலந்து விட ருசியான காலிபிளவர் வறுவல் தயார். சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.