
ஷவர்மாவை செய்தால் கலவை சாத வகைகள், சப்பாத்தி, தோசை, நாண், என்று அனைத்திற்கும் சைட் டிஷ் ஆக பயன்படுத்தலாம். நல்ல ருசியாக இருக்கும். அனைவருக்கும் பிடிக்கும். மேலே கூறிய அனைத்து பொருட்களுடன் சேர்த்து ஆர்வமாக சாப்பிடுவார்கள். அதன் செய்முறையைப் பார்ப்போம்.
ஷவர்மா செய்யத் தேவையானப் பொருட்கள்
பெரிய வெங்காயம் -இரண்டு
தக்காளி- இரண்டு
தேங்காய் துருவல்- ஒரு டேபிள் ஸ்பூன்
சாம்பார் பொடி- ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய்ப் பொடி- ஒரு டீஸ்பூன்
தயிர்- ஒரு டேபிள் ஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம்- இரண்டு டேபிள் ஸ்பூன்
மல்லித்தழை ,புதினா பொடியாக நறுக்கியது- தலா ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் -ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
தாளிக்கத் தேவையான பொருட்கள்:
கிராம்பு, ஏலக்காய், பட்டை, லவங்கம், அன்னாசிப்பூ, சோம்பு, பிரிஞ்சி இலை ,மராட்டி மொக்கு - தலா1.
செய்முறை:
வெங்காயம், தக்காளியை நறுக்கி அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், தேங்காய் சேர்த்து நன்றாக ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வதக்கி ஆறவிடவும். ஆறியதும் மிக்சியில் நன்றாக அரைத்து எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பிலிருந்து அனைத்தையும் ஒவ்வொன்றாகப் போட்டு தாளிக்கவும். பின்னர் சாம்பார் பொடி , மிளகாய்ப் பொடி சேர்த்து எண்ணெயில் வதக்கிவிட்டு அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து , உப்பு போட்டு நன்றாக கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
பின்னர் தயிர் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக கரண்டியால் கலக்கிக்கொண்டே இருக்கவும். கலவையுடன் தயிர் நன்றாக கலந்ததும், ஃப்ரெஷ் கிரீமை சேர்த்து சிம்மில் வைத்து நன்றாக கிரேவி பதம் வரும்வரை கொதிக்கவிட்டால் எண்ணெய் பிரிந்து வரும். அப்பொழுது புதினா, மல்லித்தழை தூவி இறக்கி தேங்காய் பால் சாதம் மற்றும் சப்பாத்தி வகைகளுடன் சேர்த்து சாப்பிட ருசி அருமையாக இருக்கும். வாசனை மூக்கைத் துளைக்கும்.
சோம்புக்கீரை வடை
செய்யத் தேவையான பொருட்கள்:
ஊறவைத்து அரைத்த உளுந்து மாவு- ஒரு கப்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் -கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது -நான்கு
இஞ்சி பொடியாக நறுக்கியது- ஒரு துண்டு
கறிவேப்பிலை, மல்லித்தழை பொடியா நறுக்கியது -ஒரு டேபிள்ஸ்பூன்
சோம்புக்கீரை பொடியாக நறுக்கியது- இரண்டு டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு ஊற வைத்தது தலா- ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப.
செய்முறை:
மேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, நன்றாகப் பிசைந்து, வடைகளாகத் தட்டி, ஊறவைத்திருக்கும் பருப்பு வகைகளில் லேசாக புரட்டி கொதிக்கும் எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும். சோம்புக்கீரை வாசனை உடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். குறிப்பாக சோம்புக் கீரையுடன் மற்ற பொருட்கள் சேருவதால் சோம்புக்கீரையின் நெடி தணிந்து சாப்பிடுவதற்கு சுகமாக இருக்கும்.