
இஞ்சியும், பூண்டும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகின்றன. இஞ்சி உணவு செரிக்கவும், பித்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. பூண்டு வாய்வு பொருட்களின் அபனா வாய்வை வெளியேற்ற உதவுகிறது.
1. கடல் உணவுகளுக்கு
மீன் உணவில் கொழுப்பு இருப்பதில்லை. எனவே மீன், இறால், நண்டு போன்ற கடல் உணவுகளுக்கு இஞ்சியும் பூண்டும் தேவையில்லை.
2. இறைச்சிக்கு இஞ்சி
ஆட்டிறைச்சிக் குழம்பு வைக்கும் போது கண்டிப்பாக இஞ்சி தட்டி போட்டு வேக வைக்க வேண்டும். இஞ்சியைப் பூண்டோடு அரைத்து சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. இஞ்சியைத் தட்டி இறைச்சியுடன் சேர்த்து வேகவிட்டால், இறைச்சி விரைவாக வெந்துவிடும். கெட்ட கொழுப்பும் உடம்பில் சேராமல் தடுத்து விடும்.
3. இஞ்சிப் பூண்டு விழுது வேண்டாம்
இஞ்சிப் பூண்டு விழுதை நவீன காலத்தில், சமூக வலைத் தளங்களில் சுரைக்காய், கத்திரிக்காய் போன்ற நாட்டுக்காய்களில் கூட சேர்க்கின்றனர். நாட்டுக்காய்களுக்கு என இருக்கும் தனித்த ருசியை இஞ்சிப் பூண்டு விழுது சாய்த்து விடும்.
பெங்களூர் கத்திரிக்காய் போன்றவற்றிற்கு தன் ருசி இல்லை என்பதால் இது போன்ற கூடுதல் மசாலா சேர்க்கலாம். நாட்டுக்காய்களுக்கு இஞ்சி, பூண்டு போன்ற கடினமான, காரமான இடு பொருட்கள் அநாவசியம்.
4. பூண்டின் மகத்துவம்
உருளைக்கிழங்கு, வாழைக்காய் கறி செய்யும் போது அவற்றில் பெருஞ்சீரகம், வெள்ளை பூண்டு ஆகியவற்றை ஒன்றரையாகத் தட்டிப் போட வேண்டும். தாளிப்பிலேயே இவற்றைச் சேர்த்து விட வேண்டும். பின்பு வெந்த உருளைக்கிழங்கு அல்லது வாழைக்காயை மசித்து தாளித்த எண்ணெயில் சேர்த்து மசாலா பொடி (மஞ்சள், மல்லி, சீரகம், காரப்பொடி) சேர்த்துக் கிளறி எடுக்கலாம். இவை இரண்டையும் வேக வைக்கும் போது பெருங்காயம் போடக்கூடாது. கிழங்குகளுக்கு பூண்டு தான் வாய்வை முறிக்கும்.
5. சைவக் குழம்புகளில் பூண்டு
பூண்டு சேர்த்துக் கிழங்கு, வாழைக்காய் செய்தால் கூட சிலருக்கு இரவில் வாய்வுக் குத்து ஏற்படும். அவர்களுக்கு உதவுவதற்கு தான் ரசம் உள்ளது. மறு சோற்றில் மிளகு ரசம் ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டால், வாய்வுக் குத்து வராது. 'பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்' என்பது பழமொழி. எனவே, மிளகு சீரகம் வெள்ளை பூண்டு இடித்துப் போட்ட ரசம் சாப்பிடும் போது உணவில் உள்ள நச்சுப் பொருட்கள் மற்றும் வேண்டாத வேதிப்பொருட்கள் சமன் செய்யப்படும்.
6. மைசூர் சட்னியில் இஞ்சி பூண்டு
கடலை மாவைக் கரைத்து ஊற்றி பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் தக்காளி, தாளித்து கொட்டிச் சேர்த்து செய்யப்படும் மைசூர் சட்னியில் இஞ்சி பூண்டு சேர்த்து குருமா சுவையில் சமைக்கலாம். இந்தச் சட்னி சாம்பார் பதத்தில் இருக்கும்.
மதுரையில் டீ கடைகளில் வடை, பஜ்ஜி, போண்டாக்களுக்கு இச்சட்னியைத் தாராளமாக ஊற்றித் தருவார்கள். சாப்பிடுவோர் குறைந்தது 4 அல்லது 5 வடை, பஜ்ஜி வாங்கி சாப்பிட்டுவர். தண்ணீர் குழம்புப் பதத்தில் இருப்பதால், பலகாரங்கள் விரைவில் ஊறி விடும்.
சாப்பிடுகிறவர்கள் அதிக எண்ணிக்கையில் சாப்பிடுவர். மேலும் மளமளவென சாப்பிட்டு முடிப்பார்கள். நேரமும் வீணாகாது. பெருங்காயம் இந்த மைசூர் சட்னியின் மணம் மற்றும் சுவைக்கு ஒத்து வராது.
7. பூண்டுக் குழம்பு
பூண்டு குழம்பு, பிள்ளை பெற்ற இளம் தாய்மார்களுக்கு வாரத்துக்கு இரண்டு முறை மதியம் கொடுக்கப்படும். பகல் வேளைகளில் பூண்டுப் பற்களைச் சிறிதாக நறுக்கி நல்லெண்ணெயில் வதக்கி சாப்பிடக் கொடுப்பார்கள். பின்பு சுடு தண்ணீர் குடிக்கக் கொடுப்பார்கள்.
நல்ல மலைப்பூண்டு வாங்கி உரித்து பூண்டு அளவுக்கு சிறிய வெங்காயமும் உரித்து நறுக்கி சேர்த்து மஞ்சள் மல்லி, சீரகம், மிளகு அரைத்து கலந்து பூண்டுக் குழம்பு கெட்டியாக வைக்க வேண்டும். இக்குழம்பு உடல் தளர்ச்சியைப் போக்கி சுறுசுறுப்பைக் கொடுக்கும்.