ரசம் முதல் பாயசம் வரை சுவையும் மணமும் அதிகரிக்கும் எளிய வீட்டுக் குறிப்புகள்!

தேங்காய், பீட்ரூட், ஜாங்கிரி, கொழுக்கட்டை, சத்துமாவு, ஊறுகாய் வரை ஒவ்வொரு உணவையும் சுவையாகவும் நீண்டநாளும் பாதுகாக்கவும் உதவும் பாரம்பரிய சமையல் ரகசியங்கள்
simple-cooking-tips
simple-cooking-tips
Updated on

ரசத்துக்கு தாளிக்கும்போது சிறிதளவு முருங்கை இலையைச் சேர்த்துத் தாளித்தால் ரசத்தின் மணமும், சுவையும் அதிகரிக்கும்.

தேங்காய் மூடியில் கொஞ்சம் உப்பைத்தூவி வையுங்கள். தேங்காய் மஞ்சள் நிறமாக மாறாது.

தேங்காய்த்துருவியில் துரு ஏறினால் அவற்றின் மீது வெங்காயத்தைத் தேய்த்தால் துரு மறைந்துவிடும்.

பீட்ரூட்டை சுத்தம் செய்து துருவி தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் கலர்ஃபுல்லாக இருப்பதுடன் தோசையின் சத்தும், சுவையும் அதிகரிக்கும்.

கொழுக்கட்டைக்கு மாவு கிளறும்போது தண்ணீருடன் ஒரு கரண்டி பால் விட்டுக்கிளறினால் கொழுக்கட்டை விரிந்து போகாமலிருக்கும்.

சத்துமாவு கஞ்சிக்கு அடுப்பில் கொதிக்க வைக்கும்போது சில சமயம் கட்டி தட்டிவிடும். இதைத் தவிர்க்க முதலில் தண்ணீரில் மாவைப்போட்டு நன்றாகக் கரைத்து அதன்பின் அடுப்பில் வைத்துக் காய்ச்சினால் கட்டி தட்டாது.

ஜாங்கிரி உடையாமல் வர வேண்டுமென்றால், உளுந்து  விழுதுதுடன் ஒரு ஸ்பூன் அரிசி மாவைக் கலந்தால் போதும்.

ஒரு பங்கு புழுங்கலரிசி, கால் பங்கு ஜவ்வரிசி, கால்பங்கு  பச்சரிசி மூன்றையும் ஊறவைத்து, ஒரு பிடி பழைய சாதம், கொஞ்சம் தேங்காய்ப்பால் சேர்த்து தளர  அரைத்து ஆப்பம் செய்தால் ஆப்பத்தின்  சுவையே அலாதிதான்.

எண்ணைய் பாத்திரங்களின் பிசுக்கும், பிசுக்கு வாடையும் போக வேண்டுமானால், சீகைக்காய் பொடியால் முதலில் தேய்த்துக்கழுவிவிட்டு, பின்னர் எலுமிச்சைப் பழத்தோல் பொடியைக் கொண்டு தேய்த்துக் கழுவவேண்டும்.

தேங்காய்த் துருவலுடன் ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையை சேர்த்து, தேங்காய் பர்ஃபி செய்தால் பர்ஃபி சுவை மிகுந்து இருக்கும்.

இதையும் படியுங்கள்:
துரித சமையல்: ஒரு பிரியாணி - ஒரு பூந்தி - ஒரு பக்கோடா!
simple-cooking-tips

பாயசம் சற்று நீர்த்துப்போய்விட்டால், அதில் ஒரு வாழைப்  பழத்தை பிசைந்து போட்டு கொஞ்சம் தேன் அல்லது மில்க் மெய்ட் சேர்த்துக் கலந்தால் சுவையான  பாயசம் ரெடி.

காம்புள்ள மாவடுகளை வாங்கி ஊறுகாய் போடும்போது காம்புகளை ஒட்ட வெட்டி விடாதீர்கள். மாவடுவுடன்  சிறிது காம்பு இருக்குமாறு விட்டு விட்டு நறுக்கவும். சிறிது காம்புடன் கூடிய ஊறுகாய்  நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com