
சிறுசிறு உடல் நலக்குறைவென்றால் வீட்டிலிருந்தே எளிய உணவின் மூலம் சரிசெய்து கொள்ளலாம். சில குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.
வாதம் சம்பந்தப்பட்ட நோய்களை அவரைக்காய் போக்கும். நீரிழிவை கட்டுப்படுத்தவும் உதவும். பிஞ்சு அவரைக்காயை சமைத்து உண்ண ரத்த கொதிப்பு குறையும்.
சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள மார்புச்சளி, கபத்தை போக்குவதோடு வயிற்றுப் பூச்சிகளையும் கொல்லும்.
அருகம்புல்லை தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி கற்கண்டு சேர்த்து அருந்த மூச்சிரைப்பு குணமாகும்.
இதயம் பலம் பெற, மார்பு வலி தீர 200மிலி தண்ணீரில் 2-3 செம்பருத்தி பூவை போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.
வைட்டமின் சி மற்றும் சி சத்துக்கள் கொண்ட கொய்யா உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். நார்ச்சத்து அதிகம் உள்ளதால் நீரிழிவை கட்டுப்படுத்தும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
3 மிளகு, கொஞ்சம் வெல்லத்துடன் மென்று சாப்பிட இருமல், நீர்க்கோவை குணமாகும்..
சோற்றுக் கற்றாழையை சாறாக தினமும் சாப்பிட்டுவர இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
1/4டம்ளர் நீரில் 5கிராம்பு போட்டு நன்கு கொதிக்கவைத்து வடிகட்டி குடிக்க மூச்சிரைப்பு குணமாகும்.
உணவில் வாழைத்தண்டை அடிக்கடி சேர்த்துக்கொள்ள குடல் இயக்கம் மேம்படும்.
முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து சாப்பிட இருமல் நிற்கும். தூதுவளை கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் தொண்டை எரிச்சல் குணமாகும்.
ஓமம், பனங்கற்கண்டு, மிளகு இவற்றை பாலில் காய்ச்சி குடித்து வர சளி குறையும். ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து சாப்பிட வயிற்று வலி, வயிற்று போக்கு குறையும்.
வில்வ இலையை காய்ச்சி வடிகட்டி குடிக்க காய்ச்சல் குணமாகும். மலைவேம்பு இலையை அரைத்து தலையில் தடவி குளித்து வர பேன், பொடுகு நீங்கும்.
சிறு பசலைக் கீரையை சமைத்து உண்டுவர மலத்தை இளக்கி வெளியேற்றும். உடல்சூடு தணியும்.
வெந்தயத்தை வறுத்து மோரில் கலந்து குடிக்க, வயிற்று பிரச்னைகளை குணப்படுத்தும்.
நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட விக்கல் நிற்கும்.
வாயத்தொல்லையால் அவதிப்படுபவர்கள் ஏலக்காயை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து தண்ணீரை வடிகட்டி குடிக்க வாய்வு தொல்லை குணமாகும். மன இறுக்கம், படபடப்பு குறையும்.
அடிக்கடி விக்கல் ஏற்பட்டால் ஒரு கப் தண்ணீரில் 2,3ஏலக்காயை புதினாவுடன். தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிக்க விக்கல் வராது. விக்கல் நின்றுவிடும்.
அத்திப்பழம் அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுக்க மலச்சிக்கல் இருக்காது. பசியைத் தூண்டும். மாதவிடாய் பிரச்னைக்கு அத்திப்பழம் அடிக்கடி எடுத்துக்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.
ஓமம், மிளகு, உப்பு இவற்றை பொடித்து வைத்துக் கொண்டு காலை, மாலை சாப்பிட்டு வர செரிமானக் கோளாறுகள் நீங்கும்.