
கடலைப்பருப்பு போளி செய்யும்போது, பொடித்த சர்க்கரையைச்சேர்த்தால் போளி நிறமாகவும், சுவையாகவும், மெல்லியதாகவும் இருக்கும்.
இன்ஸ்டன்ட் மாவில் குலோப் ஜாமூன் செய்யப்போறீங்களா? மாவைக் கலக்கும்போது சிறிது வெண்ணைய் சேர்த்தால் ஜாமூன் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
தோல் சீவிய கேரட்டுகளை குக்கரில் வேக விட்டு கூழாக மசிக்கவும். பிறகு கடாயில் நெய் விட்டு சர்க்கரை மசித்த கலவையை சேர்த்து, சுருளக் கிளறினால் சுவையான அல்வா தயார்.
எந்த வகை கேசரி செய்தாலும், மூன்று டீஸ்பூன் தேங்காய்ப்பால் சேர்த்தால், அதன் சுவையே அலாதிதான்.ரவையை மாவாகத் திரித்து, அதில் வெல்லப்பாகு விட்டு, தேங்காய்த்துருவல் சேர்த்துப் பிசைந்து பிடித்து வேகவைத்தால் வித்தியாசமான, சுவையான கொழுக்கட்டை ரெடி.
ரவா லட்டு செய்யும்போது அத்துடன் மிக்ஸியில் அவலையும் ரவைபோல் பொடித்து, நெய்யில் வறுத்துச் சேர்த்து, மூன்று டேபிள் ஸ்பூன் பால் பவுடரையும் கலந்து டேஸ்ட்டியான ரவா லட்டு பிடிக்கலாம்.
அரிசியையும், பருப்பையும் கலந்து வாசனை வரும் வரை வறுத்து, சர்க்கரைப் பொங்கல் செய்தால், பொங்கல் சீக்கிரமாக வெந்துவிடும். வாசனையாகவும் இருக்கும்.
இனிப்பு பணியாரம் மிருதுவாக இருக்க, அரிசிமாவை ஒரு துணியில் கட்டி, இட்லிப்பாத்திரத்தில் வைத்து ஆவியில் ஐந்து நிமிடம் வேக வைத்து எடுத்து, நன்றாக அவித்த பிறகு பணியாரம் செய்தால் பஞ்சுபோல இருக்கும்.
ரவையை நெய்விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் ஊறவைத்து, பிறகு சர்க்கரைப் பாகு செய்து கேசரி கிளறினால் சுவை இரட்டிப்பாகும்.
பொரித்தெடுத்த ஜாமூன்களை சூடான சர்க்கரைப் பாகில் சேர்க்காமல், நன்கு ஆறியபின் சேர்த்தால் ஜாமூன்கள் விரியாமல், கரையாமல் சுவையாக இருக்கும்.
ஜவ்வரிசி பாயசம் செய்யும்போது இரண்டு டீஸ்பூன் வறுத்த கோதுமை மாவைப் பாலில் கரைத்து ஊற்றிச் செய்தால், பாயசம் கெட்டியாகவும், ருசியாகவும் இருக்கும்.
பாயசம் செய்யும்போது, ஜவ்வரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்துப் பின் நெய் சேர்த்து வறுத்தால் ஜவ்வரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.