
குடைமிளகாய் சட்னி
தேவை:
குடைமிளகாய் - 2 பெரியது
பச்சை மிளகாய் - 4
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
புளி - சிறிதளவு
சின்ன வெங்காயம் - 10
தேங்காய் சிறிய துண்டு - 1
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
சின்ன வெங்காயம், குடைமிளகாயை நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பைப் போட்டு வறுத்து எடுக்கவும். அடுத்து அதில் பச்சை மிளகாய் போட்டு வதக்கிய பின்னர் தேங்காய், குடைமிளகாய், வெங்காயம் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். இவை யாவும் வதங்கிய பிறகு புளி சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.
அனைத்தும் ஆறியதும் மிக்சியில் உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்தால் சுவையான குடைமிளகாய் சட்னி ரெடி.
*******
குடைமிளகாய் புலாவ்
தேவை:
பாசுமதி அரிசி - 1 கப்
குடைமிளகாய் - 2
வெங்காயம், தக்காளி - தலா 1
புதினா, கொத்தமல்லித்தழை - தலா 1 கைப்பிடி அளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பட்டை - சிறு துண்டு
சோம்பு - கால் டீஸ்பூன்
எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். குடைமிளகாயை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வடித்துக்கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, சூடானதும் பட்டை, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.
தக்காளி குழைய வதங்கியதும் இதனுடன் நறுக்கிய குடைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும். வடித்த சாதத்தில் இந்தக் கலவையை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும். சூப்பரான குடைமிளகாய் புலாவ் தயார்.
******
குடைமிளகாய் வறுவல்
தேவை:
குடைமிளகாய் - 2
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூ ன்
தேங்காய் துருவல் - கால் கப்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூ ன்
உப்பு - தேவைக்கேற்ப
வர மிளகாய் - 4
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
தாளிக்க:
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - அரை டீஸ்பூ ன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
குடை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் தூள் போட்டு தாளித்து, அவற்றுடன் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் போட்டு 2 நிமிடம் வறுக்கவும்.
வறுத்தவற்றை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு, தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.
வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அத்துடன் நறுக்கிய குடைமிளகாயைப் போட்டுக் 5 நிமிடம் வேகவைக்கவும்.
மிளகாய் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து, அவற்றுடன் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு கிளறிவிட்டு, 3 நிமிடம் வேகவிட்டு இறக்கினால், சுவையான குடைமிளகாய் வறுவல் தயார்.
******
குடைமிளகாய் பனீர் ஃப்ரை
தேவை:
சதுரமாக நறுக்கிய பனீர் - 200 கிராம்,
குடைமிளகாய் - 100 கிராம்,
வெண்ணெய் - 50 கிராம்,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2,
புதினா விழுது - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்,
பாதாம் - 100 கிராம்,
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்,
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு.
செய்முறை:
பாதாமை 6 மணி நேரம் ஊறவைத்து தோல் நீக்காமல் விழுதாக அரைத்துக்கொள்ளவும். பனீரை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் வெங்காயம், குடைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கி, தனியாத்தூள் சேர்க்கவும்.
பின்பு பாதாம் விழுதைச் சேர்த்துக்கிளறி, வெந்த பனீர் துண்டுகள், புதினா விழுதை சேர்த்து கிளறவும். இத்துடன் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்த்து கலந்து வறுவலாக வந்ததும் இறக்கி பரிமாறவும். சுவையான குடைமிளகாய் பனீர் ஃபிரை ரெடி.