
தற்போது ஆரோக்கிய உணவுகளில் மீதான கவனம் அதிகரித்து வரும் வேளையில் இடியாப்பம், புட்டு, உருண்டைகள் போன்ற பாரம்பரிய உணவுகளை மக்கள் விரும்ப ஆரம்பித்துவிட்டனர். அதிலும் புட்டு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிற்றுண்டிகளில் ஒன்றாகிவிட்டது.
ஆனால் ஒரு சிலர் புட்டு செய்தால் சரியாக வரவில்லையே? உதிரிஉதிராக இல்லையே? கட்டியாக இருக்கிறதே? சுவையாக இல்லையே? என்பது போன்ற குழப்பங்களால் வீட்டில் புட்டு செய்வதை பெரும்பாலும் தவிர்த்து விடுகிறார்கள்.
இதோ உங்களுக்காகவே புட்டு செய்யும் வழிமுறைகள்:
1. இடியாப்ப மாவில் அரை கரண்டி உப்பு போட்ட நீரை தெளித்து மாவை ஒன்று போல் ஈரம் ஆக்கி ரவை சல்லடையினால் சலித்து வைக்கவும். அரைத்தவுடன் மாவு இருக்கும் ஈரப்பதத்தில் இதை செய்வது முக்கியம்.
2. கொஞ்சம் தேங்காய் பூ கலந்து புட்டு குழாயிலோ அல்லது இட்லி தட்டிலோ முதலில் சிறிது தேங்காய் பூ பின்பு மாவு அதன் மீது சர்க்கரை அல்லது தூள் செய்த கருப்பட்டி பின்பு மறுபடியும் மாவு, தேங்காய் பூ, சர்க்கரை என்று மாறி மாறி போட்டு வேகவைத்து எடுக்கவும்.
3. சர்க்கரை பிடிக்காதவர்கள் தேங்காய் பூ மட்டும் போடலாம். மாவில் மொத்தமாக தேங்காய் பூ கலந்து வேகவைத்து இறக்கி அத்துடன் தேவையான அளவு சர்க்கரை மற்றும் சிறிது நெய் விட்டு சேர்த்துக் கலந்து மூடி வைக்கவும் புட்டு மணமாக இருக்கும்.
4. மாவை அரைத்தவுடன் அந்த ஈர மாவை சலித்து அப்படியே வேக வைத்து இறக்கி தேங்காய் பூவும் சர்க்கரையும் கலக்கலாம்.
5. அரைத்த மாவில் தேங்காய் துருவல், சர்க்கரை கலந்து இட்லி தட்டு அல்லது சிறு சிறு கிண்ணத்தில் வைத்தும் வேகவைக்கலாம்.
6. சர்க்கரை சேர்த்து அதிக நேரம் கலந்து வைக்ககூடாது. அப்படி வைத்தால் கட்டியாக மாவு சேர்ந்து விடும். சர்க்கரை அதிகமாக போட்டாலும் புட்டு வேகாது.
7. வறுத்த மாவில் கருப்பட்டி பாகை ஆறவைத்து ஊற்றி மிகவும் கெட்டியாக பிசைந்து இரவில் வைத்துவிட வேண்டும். காலையில் மாவை உதிர்த்துவிட்டு ரவை சல்லடையில் கட்டி இன்றி சலித்து அத்துடன் தேங்காய் பூ கலந்து இட்லி தட்டில் அல்லது புட்டுக்குடத்தில் வேகவைத்து எடுக்கவும்.
9. புழுங்கல் அரிசி சட்டென அரைபடாது. ஆகையால் அரிசியை நனைய போட்டதும் களைந்து அரைக்கலாம். மாவை ரவை அலசும் சல்லடையில் அலசவேண்டும்.
10. கேழ்வரகு புட்டு பிரபலமானது. இதற்கு நன்கு திரித்த கேழ்வரகு மாவை சலித்து தேங்காய் தண்ணீர் சிறிது உப்பு சேர்த்து மாவை புட்டுக்கு போல் பிரட்டி பின் ரவை சல்லடையில் சலித்து தேங்காய் பூ தூவி ஈரமில்லாத துணியில் புட்டாக அவித்து வெந்தவுடன் சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை நெய் சேர்க்கலாம்.
பொதுவாக புட்டு செய்ய பச்சரிசி ஏற்ற சாய்ஸ். நன்கு ஊறிய அரிசியை வடிகட்டி காற்றில் உலர்த்தி முக்கால் ஈரப்பதத்தில் மிக்சியில் அரைக்க வேண்டும். இதுதான் முக்கியம். ஈரம் அதிகமிரூந்தால் மாவு கட்டிப்பிடித்து சலிக்க வராது. உப்புத் தண்ணீர் பிசிறும்போதும் கவனம் தேவை. அதேபோல் ஏலக்காய் சேர்த்தால் மணமாக இருக்கும்.