
சாம்பார் பொடி அரைக்கும்போது சிறிதளவு சுக்கை தட்டிப்போட்டு அரைத்தால் சாம்பார் பொடியின் வாசனை கூடும்.
தயிர் சாதத்துக்கு ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் பால், இரண்டு கப் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து வேகவிட்டு சாதம் கலந்தால் தயிர்சாதம் இரவு வரை புளிக்காமல் இருக்கும்.
தேங்காயைத் துருவி அதை கொதி நீரில் போட்டு வைத்து விட்டு, பிறகு கைப்பொறுக்கும் சூட்டில் எடுத்துப் பிழிந்தால் நல்ல கெட்டியான பால் கிடைக்கும்.
ஊறுகாய் தொக்கு மிஞ்சிவிட்டால், அதை சப்பாத்தி மாவுடன் சேர்த்துப்பிசைந்து கொண்டு சப்பாத்தி செய்தால் சுவையாக இருக்கும்.
கடலைப் பருப்பு போளி செய்யும்போது, பொடித்த சர்க்கரையை சேர்த்தால் போளி நிறமாகவும், வாசனையாகவும் இருக்கும்.
சேமியா வாங்கியவுடன், அதை வெறும் வாணலியில் சிறிது வறுத்து ஆறியவுடன் ஒரு டப்பாவில் எடுத்துவைத்து, சேமியா உப்புமா செய்யும்போது பயன்படுத்தினால் ஒன்றோடோன்று ஒட்டாது.
தேங்காய், பெருங்காயம், தனியா, புளி, கறிவேப்பிலை, உப்பு, கடுகு ஆகியவற்றை நல்லெண்ணெய் விட்டு வதக்கி செய்யும் பொடி ருசியாக இருக்கும். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள ஏற்ற திடீர்ப்பொடி இது.
அடைக்கு அரைத்து வைத்த மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் கார்ன்ப்ளேக்ஸைத் தூள் செய்து தேவையான அளவு போட்டுக் கலக்கி அடை செய்யலாம்.
தோசைக்கு மாவு அரைக்கும்போது, கொஞ்சம் வெண்டைக்காயையும் போட்டு அரைத்தால், மிருதுவான, சுவையான தோசை ரெடி.
சப்பாத்திக்கான மாவை பால் காய்ச்சின பாத்திரத்தில் வைத்துப்பிசைந்தால் தனியாக எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது என்று மட்டுமல்லாமல் செய்யும் சாப்பாத்தியும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
வாழை இலையை தண்ணீர் தெளித்து சுத்தம் செய்யும்போது இலையில் கோடுகள் இருக்கும் திசையிலேயே சுத்தம் செய்தால் இலை கிழியாது.
சப்பாத்தியை நன்கு துணியில் சுற்றி வைத்துத்தான் மைக்ரோ வேவ் அவனில் சூடு செய்யவேண்டும். நேரடியாக அவனில் வைத்தால், சப்பாத்தியில் உள்ள ஈரம் வற்றிப்போய் சப்பாத்தி வறட்டி போலாகிவிடும்.