
சிலர் கையால் எதை செய்தாலும் மிகவும் ருசியாக இருக்கும். அவர்கள் சமைப்பதை பக்கத்தில் நின்று பார்க்கும் பொழுதுதான் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அதன் நுணுக்கமென்ன என்பதை தெரிந்துகொள்ள முடியும். அது போல் கவனித்ததில் சில…
வெண்பொங்கல் செய்யும்போது அரிசியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக உடைத்து பின்னர் வறுத்த பாசிப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிட்டு வழக்கம்போல் நெய்யில் கருவேப்பிலை, மிளகு சீரகம், முந்திரி தாளித்து செய்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
சர்க்கரை பொங்கல் செய்யும்பொழுது தண்ணீரில் சிறிது நெய்யை சேர்த்து அதில் அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைத்து பொங்கல் செய்தால் பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும். நெய்வாசத்துடன் பொங்கலும் சுவையைக் கூட்டித்தரும்.
சேமியாவை வாணலியில் கொஞ்சமாக நெய்விட்டு வறுக்கும் பொழுது அதனுடன் முந்திரிப் பருப்பையும் சேர்த்து வறுத்தால் ஒரே சீராக சிவந்து இருக்கும்.
ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடியாக்கி வைத்துக்கொண்டால் அடை, வடை, தோசை செய்யும்போது மாவுடன் இதில் சிறிதளவு கலந்து செய்ய பதார்த்தங்கள் மொறுமொறுப்பாக இருக்கும். ஹோட்டல் தோசைபோல் ரோஸ்ட் ஆகவும் வரும்.
சில நேரங்களில் வாழைப்பழத்தை கனியவிட்டு விடுவோம். அவற்றை உரித்து பாலுடன் சேர்த்து மிக்ஸியில் அடித்தால் வாழைப்பழ மில்க் ஷேக் கிடைக்கும். குழந்தைகள் விரும்பி உண்பர். பாலருந்த மறுக்கும் குழந்தைகளுக்கு இது ஒரு எளிய வழி.
தர்பூசணி, பீர்க்கங்காய், வெள்ளை பூசணி போன்றவற்றின் தோலில் சட்னி செய்யும்போது, அவற்றை சிறிதளவு சதையுடன் நறுக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து அத்துடன் இந்த தோலுடன் உள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கி புளி சேர்த்து துவையலாக அரைக்கலாம். வித்தியாசமான சுவையுடன் இருக்கும். எல்லாவற்றுக்கும் தொட்டுக்கொள்ளலாம். இந்த சட்னி சக்கைபோல் இல்லாமலும் இருக்கும்.
சில காபி பில்டரின் துளைகள் பெரிதாக இருக்கும். அதில் அப்படியே காப்பி துளை போட்டு வெந்நீரை ஊற்றினால் தூளும் சேர்ந்து இறங்கும். அதை தவிர்ப்பதற்கு ஃபில்டரில் காபி போடும் முன் ஒரு மெல்லிய துணியை அதன் மீது போட்டு, அதன்பின் காபித்தூள் போட்டு வெந்நீர் ஊற்றினால் அதில் உள்ள துவாரங்கள் அடைத்துக் கொள்ளாமல் இருக்கும். டிகாஷனும் நன்றாக இருக்கும். தூளும் சேர்ந்து வராது.
நெய்யை உருக்கியவுடன் உடனடியாக அதை குளிர்ந்த பாத்திரத்தில் கொட்டி வைத்தால் அழகாக மணல் போல் உறையும். இன்னும் சொல்லப்போனால் திணை போல் கலர் அழகாக இருக்கும்.
சின்ன வெங்காயத்தை எண்ணெயில் வதக்கி இதர சாமான்களுடன் அரைத்து வெங்காய சாம்பார் வைத்தால் ருசி நன்றாக இருக்கும்.
ரசத்துக்கு தாளிக்கும் பொழுது ஒரு குண்டு மிளகாய் சேர்த்து தாளியுங்கள். ரசம் இது மிதந்து கொண்டு பார்க்க அழகாகவும், ருசியையும் கூட்டித்தரும்.
பருப்பு ரசத்துக்கு இரண்டு பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டி ரசம் நுரைத்து வரும்போது போட்டால் அதன் சுவை சூப்பரோ சூப்பர்.
சம்பா கோதுமையில் உப்மா செய்யும்போது அதை தேங்காய் எண்ணெயில் செய்தால் உப்புமா அதிக மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
கொழுக்கட்டை பூர்ணம் மீந்துவிட்டால் அதனுடன் கோதுமை, மைதா, ரவா கலந்து ஐந்து நிமிடங்களில் அப்பமாக வார்க்கலாம் நல்ல ருசியாக இருக்கும்.
கீரை கடைசலுடன் கோதுமை மாவு கலந்து நன்றாக சப்பாத்தி செய்து நெய் சேர்த்துக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். கடைந்த கீரையை ஊட்டினால் சாப்பிடாதவர்களுக்கு இப்படி பழக்கப்படுத்தலாம். நல்ல சத்தும் கிடைக்கும்.
பருப்பு வகைகள் வேகும்போது வெள்ளையாக நுரைத்து வருவதை ஒரு கரண்டியால் எடுத்துவிட்டு, பெருங்காயம், சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வேகவைத்தால் பருப்பு வாசனையாக இருக்கும். சீக்கிரமாக வெந்துவிடும்.
தேங்காயுடன் வரமிளகாய், சீரகம், பூண்டு பல், மஞ்சள் பொடி, கறி வேப்பிலையை கரகரப்பாக அரைத்து பீட்ரூட் கேரட் கோஸ் பொரியல்களில் சேர்த்து வதக்கி இறக்கலாம். சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும்.