சமையலில் சின்ன சின்ன மாற்றங்கள்: கூடுதல் சுவை தரும் வழிகள்!
பெரிய வெங்காயம் வெட்டும்போது நீளவாக்கில் நறுக்கினால், அதில் இனிப்பு சுவை இருக்காது; எளிதில் வதங்கும்.
அடை தோசை மாவு அரைக்கும்போது, அதனுடன் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து அரைத்தால், தோசை நல்ல மணமாகவும் எளிதில் ஜீரணமாகவும் உதவும்.
பாயாசம் செய்யும்போது, அதற்கான ஜவ்வரிசியை சிறிது வறுத்து கொதிக்கவைத்தால், பாயாசம் ஒட்டாமல் வரும்.
சேமியாவை பாலில் உடைத்து போட்டு, குக்கரில் ஒரு விசில் வந்ததும் இறக்கி, அதனுடன் ஏலக்காய் தூள், முந்திரி, திராட்சை சேர்த்தால் — இன்ஸ்டன்ட் பாயாசம் ரெடி!
விசேஷ நாட்களில் செய்த காய்கறி மீதம் இருந்தால், அதனுடன் சிறிது அரிசி மாவு, கோதுமை மாவு கலந்து, கட்லெட் போல தட்டி, தோசைக்கல்லில் போட்டு எடுத்தால் சுவையாக இருக்கும்.
உப்புமா செய்யும்போது எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்தவுடன் கருவேப்பிலை, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் போட்டு வதக்கி, பின் தக்காளி மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கினால் — வதக்கும் நேரம் மிச்சமாகும்; பச்சை மிளகாய் கலர் மாறாமல் சுவையாகவும் இருக்கும்.
திடீரென விருந்தாளிகள் மதிய உணவு நேரத்தில் வந்தால், குக்கரில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் தாளித்து, பாசிப்பருப்பு சேர்த்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். அப்பளத்துடன் பரிமாறி — “சட்டென சாப்பிடலாம் வாங்க!” எனக் கூப்பிடலாம்.
குழம்பிற்கு அரைக்கும்போது, அதில் பச்சை கடலைப்பருப்பை சேர்த்து வறுத்து அரைத்தால், குழம்பு சுவை கூடும்.
உப்புமா செய்யும்போது தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், அதில் ஒரு ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்துக்கொண்டால், ரவை கட்டியாகாமல் இருக்கும்.
கண்ணாடி பாட்டில்களை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது, பழைய சாக்ஸ்களை அதற்கு போட்டு ரப்பர் பேண்ட் போட்டுவிட்டால், கை தவறி விழாமல் பாதுகாப்பாக இருக்கும்.
இட்லி மாவு அரைக்கும்போது, ஒரு ஸ்பூன் ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால், இட்லி பட்டு போலவும் தோசை முறுகலாகவும் வரும்.
வாழைப்பழத்தை டைனிங் டேபிளில் பழக்கூடையில் மற்ற பழங்களுடன் வைக்காமல், தனியாக வைப்பது நல்லது. அது சீக்கிரம் பழுத்துவிடுவதால், அதன் மேல் பறக்கும் சிறு பூச்சிகள் மற்ற பழங்களுக்கு பரவாமல் தடுக்கலாம்.

