
1. குருமா, சட்னி போன்றவற்றுக்கு அவசரமாக அரைக்கும் நேரத்தில் ஜார் சூடாகி விடும். இதைத் தவிர்க்க காய்களுடன் ஐஸ் வாட்டர் சேர்த்து அரைத்தால் போதும்.
2. ஜாம், ஊறுகாய் பாட்டில்களின் மூடியைத் திறக்க கஷ்டமாக இருந்தால், கையில் கிளவுஸ் அணிந்து கொண்டால் எளிதாக திறந்து விடலாம்.
3. பழத்துண்டுகளின் மீதும், ஐஸ் க்ரீம்களின் மீதும் சீவிய இஞ்சியைத் தூவிச் சாப்பிட்டால் சுவை அதிகரிக்கும்.
4. எலுமிச்சைப்பழ ரசம் செய்வது போல நார்த்தங்காய் சாறு பிழிந்தும் ரசம் வைக்கலாம். வாய்க்கசப்பும் நீங்கி விடும்.
5. தேங்காய்க்கு பதில், வெங்காயத்துடன் பீர்க்கங்காயையும் வதக்கி அரைத்து விட்டால் குழம்பு கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும். இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்தும் கிடைக்கும்.
6. சாம்பார், ரசம், கூட்டு போன்றவற்றைத் தயாரித்து முடித்து தாளிக்கும் போது கடுகு வெடித்துச் சிதறும். இதைத் தவிர்க்க வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சிறிது மஞ்சள் தூள் போட்டு பிறகு கடுகு தாளித்தால் வெடித்துச் சிதறாது.
7. ஊறுகாய்களை வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகித்தால் குறைந்த அளவு உப்பு போட்டாலே போதும்.
8. எலுமிச்சைப் பழங்கள் வாங்கியது அதிகமாக இருந்தால், ஒவ்வொரு பழத்தையும் தனித்தனியாக டிஷ்யூ பேப்பரால் சுற்றி, எல்லாவற்றையும் சேர்த்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் அவை நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
9. கரைத்த பஜ்ஜிமாவை மிக்ஸியில் அடித்து பஜ்ஜி போட்டால் பஜ்ஜியின் சுவையே அலாதி தான்.
10. கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவோடு வெங்காயம் சேர்த்து வதக்கி உப்பு, புளி, மிளகாயோடு துவையல் செய்து சாப்பிட்டால் உடம்புக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.
11. பருப்பு சாம்பாரை சீரகம் தாளித்து இறக்கும் முன்பு, சிறிதளவு புதினாவைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து இறக்கினால் சாம்பாரின் சுவை ஊரைத் தூக்கும்.
12. எண்ணெய் பாட்டில்கள், எண்ணெய் கேன்கள் ஆகியவற்றின் வெளிப்புறம் எண்ணெய் வழிந்து, நாம் எடுக்கும் போது கைவழுக்கி எண்ணெய் சிந்தக்கூடும். பழைய சாக்ஸ்களை சுத்தம் செய்து வைத்துக்கொண்டு, எண்ணெய் பாட்டில்கள், கேன்களின் வெளிப்புறம் சுற்றி வைத்தால் இதைத் தவிர்க்கலாம்.