சமையல் கலையில் அசத்தலாம் வாங்க! உங்கள் கிச்சனை ஜொலிக்க வைக்கும் டிப்ஸ்!

smart-kitchen-tips
smart-kitchen-tips
Updated on

கேசரி செய்யும்போது ரவையுடன் பால்கோவா, பொடிப்பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழங்களை கலந்து வேகவைத்து செய்தால் சுவை மிகுந்து இருக்கும். உடலுக்கு தேவையான இரும்புச்சத்தும் கிடைக்கும்.

இட்லிக்கு உளுத்தம்பருப்பு அரைக்கும் முன் அதை ஒரு டப்பாவில் ஊறப்போட்டு, உடனடியாக ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். ஊறிய பிறகு அரைத்தால் இட்லி பூப்போல வரும்.

சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து பிசிறி வைத்தால் தயிர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள சுவையான ஊறுகாய் ரெடி.

துவையல் மீந்துவிட்டதா? கவலையை விட்டுத்தள்ளுங்கள். வாணலியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெயை காயவைத்து, அதில் துவையலைப் போட்டு ஒரு நிமிடம் நன்றாகக் கிளறி விடுங்கள். எண்ணையில் வதக்கிய துவையல் அடுத்த நாளும் சுவையாக இருக்கும்.

கோதுமைமாவைப் பிசைந்து சப்பாத்திகளாக இட்டு, ஒரு பாட்டில் மூடியால் வட்ட வட்டமாக வெட்டி, பஜ்ஜிமாவில் தோய்த்து எண்ணையில் பொரித்தெடுக்கவும். சூடாக சாப்பிட வித்தியாசமான சுவையில் பஜ்ஜி தயார்.

பாலை உறை ஊற்றும் முன் பால் நன்கு ஆறவேண்டும் என்பதில்லை. காய்ச்சிய சில நிமிடங்கள் கழித்து சூடாக இருக்கும் போதே சில துளி மோரை ஊற்றி நுரை வருமளவுக்கு ஆற்றிவிட்டால், விரைவாக தயிர் தோய்ந்துவிடும்.

தோசை மாவு புளித்துப்போயிருந்தால், அதில் பாதியளவு கோதுமை மாவு, பாதியளவு ரவை என கலந்து, தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை வார்த்தால் புளிப்பில்லாத சுவையான தோசை ரெடி.

முதல் நாள் இரவு தோய்த்த தயிரில் மறுநாள் சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்னதாக அரை டம்ளர் பாலைச் சேர்த்து கலக்கி வைத்தால் புளிப்பில்லாத தயிர் கிடைக்கும்.

குலோப் ஜாமூனுக்கு மாவு பிசையும்போது அத்துடன் ஒரு ஸ்பூன் கண்டென்ஸ்டு மில்க்கும் சேர்த்துப் பிசைந்தால் உருண்டைகளின் இனிப்பு அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளைக் கவரும் சாக்லேட் மற்றும் ஆரோக்கியமான ஆப்பிள் பர்பி செய்வது எப்படி?
smart-kitchen-tips

சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாக வேண்டுமா? சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் ரசப்பொடி, நெய் சிறிதளவு, சிட்டிகை உப்பு கலந்து சாப்பிடுங்கள். எளிதில் ஜீரணமாகிவிடும்.

வாங்கி வந்த காய்கறிகளில் முற்றல் எதுவும் இருந்தால் அதை பாழாக்க வேண்டாம். சூப், சாம்பார், குருமா போன்றவை தயாரிக்கும்போது, முதலில் இந்தக் காய்களை சிறு துண்டுகளாக நறுக்கி பத்து நிமிடங்கள் வேகவையுங்கள். அந்தத்தண்ணீரை மட்டும் ஈர்த்து மேற்சொன்ன உணவு வகைகளை தயாரிக்கும் போது சேர்த்துவிடலாம். இதனால் அந்த உணவு வகைகள் மிகவும் சுவையாக இருக்கும்.

இரண்டு டம்ளர் சர்க்கரையை மிக்ஸியில் நைசாகப் பொடித்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வையுங்கள். இந்த சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டுக்கு விருந்தினர்கள், உறவுக்காரர்கள் வரும்போது அவர்களுக்கு கொடுக்கும் குளிர்பானங்களில் இந்த சர்க்கரையை பயன்படுத்தினால் சட்டென்று கரையும்.

logo
Kalki Online
kalkionline.com