ருசி மட்டும் போதாது... ஆரோக்கியமும் வேண்டும்! இல்லத் தரசிகளுக்கான 'ஸ்மார்ட்' கிச்சன் டிப்ஸ்!


'Smart' kitchen tips
'Smart' kitchen tips
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

சமையல் கலை என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆயக்கலைகள் 64ல் முக்கியமான ஒன்றாகும். செய்கின்ற சமையல் பசிக்கு விருந்தாகவும், வாய்க்கு ருசியாகவும், உடலுக்கு ஆரோக்கியமான தாகவும் இருக்கவேண்டும். சமையலில் செய்யக்கூடியதாகவும், செய்யக் கூடாதவையாகவும் சில உண்டு. அவற்றை கவனமுடன் சமைக்க ருசியும் மணமும் கூடும்.

சமையலில் அதிக உப்பு, புளிப்பு, காரம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். எண்ணையின் பயன்பாடும் அதே போல்தான். எல்லாம் அளவாக இருக்கவேண்டும். எதுவும் அதிகம் கூடினால் ருசியும் குறைந்து, உடல் ஆரோக்கியத்திற்கும் கேடுதான்.

ரசம் அதிகம் கொதிக்க கூடாது. மொச்சு வந்தவுடன் அதாவது மேலாக நுரை கட்டியவுடன் இறக்க வேண்டும். அத்துடன் ரசம் செய்து முடித்ததும் நெய்யில் கடுகு, சீரகம், மிளகுத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்ட ஆஹா என்ன ருசி என்ற பாராட்டு கிடைக்கும்.

தேங்காய்ப் பால் சேர்த்து செய்யும் குருமா, குழம்பு, சொதி போன்றவை அதிகமாக கொதிக்க கூடாது. ருசி மாறிவிடும். தண்ணீருக்கு பதில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் புலவு அதிக ருசியுடன் இருக்கும்.

மோர் குழம்புக்கு தேங்காய் எண்ணெயில் தாளிப்பதும், சுண்டைக்காய் வத்தல் வெண்டைக்காயை எண்ணெயில் நன்கு வதக்கி சேர்ப்பதும் அதிக சுவையைக் கொடுக்கும். முக்கியமாக மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது நீர்த்து விடும்.

எந்த சமையல் செய்தாலும் சூடாக அடுப்பில் இருக்கும் பொழுது எலுமிச்சம் பழம் பிழியக் கூடாது. இறக்கி சிறிது நேரம் கழித்தே சேர்க்கவேண்டும்.

சில சமயங்களில் வெங்காயம் ரொம்ப விலை குறைவாக இருக்கும். அம்மாதிரி சமயங்களில் அவற்றை அதிக அளவில் வாங்கி வைப்பது வழக்கம். அவற்றை சரியாக கவனிக்காவிட்டால் முளை வந்து சில அழுகியும் போய்விடும். இதற்கு வெங்காயத்தை வாங்கி வந்ததும் நியூஸ் பேப்பரை விரித்து அதில் வெங்காயத்தை கொட்டி நன்கு பரத்தி வைக்க முளை வருவதோ, அழுகுவதோ ஆகாமல் நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சுடச்சுட சாதமும், நெய் மணக்கும் பருப்பு பொடியும்! நாவூறும் ரகசிய ரெசிபி இதோ!

'Smart' kitchen tips

மோட்டாரின் சக்திக்கு ஏற்ற அளவு மாவை அரைப்பதுதான் கிரைண்டர் நீண்ட நாட்கள் வேலை செய்ய உதவும். கிரைண்டர் பெரிதாக இருக்கிறது இன்னும் ரெண்டு ஆழாக்கு சேர்த்து போட்டு அரைக்கலாம் என்று நினைத்தால் அவ்வளவுதான் சீக்கிரம் ரிப்பேராகிவிடும்.

வோல்டேஜ் பிரச்சனை சமயங்களில் கிரைண்டரில் மாவு அரைப்பதை தவிர்த்துவிடுவது மோட்டாருக்கு ஆயுளை கூட்டும்.

பூரிக்கு மாவை பிசைந்ததும் பூரி போடவேண்டும். ஊறவிட்டால் எண்ணெய் குடிக்கும். சப்பாத்திக்கோ மாவைப் பிசைந்து நன்கு ஊற வைத்து செய்ய மிருதுவாகவும் உப்பியும் வரும். பூரி அல்லது சப்பாத்தி எதுவாக இருந்தாலும் மாவு பிசையும் போது சிறிது காரைக்குடி மசாலா பொடி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி அல்லது புதினா சேர்த்து பிசைந்து செய்ய மனமாக இருக்கும்.

சில சமயம் இட்லி பூப்போல மென்மையாக இல்லாமல் ‌கல்லு போல வந்துவிடும். அப்பொழுது அவற்றை கையால் நன்கு உதிர்த்துவிட்டுக் கொண்டு, வாணலியில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பீன்ஸ், துருவிய கேரட், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து உதிர்த்த இட்லி போட்டுக்கிளற ருசியான இட்லி உசிலி தயார்.

இளநீரில் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நாள் முழுவதும் மூடி வைத்து அடுத்த நாள் காலையில் ஆப்பத்திற்கு அரைத்த மாவுடன் சேர்த்து ஆப்பம் வார்க்க மிகவும் மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.

சமையல் என்பது ஆரோக்கியம் மற்றும் சுவை சார்ந்த கலை. சமையலறை மேடை மற்றும் பாத்திரங்கள் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். புதிய காய்கறிகள் மற்றும் கீரைகளை சமைப்பது ஆரோக்கியமாக இருப்பதற்கான வழிகள்.

இதையும் படியுங்கள்:
சப்பாத்தி முதல் பஜ்ஜி வரை - உணவின் ருசியை மாற்றும் எளிய வழிமுறைகள்!

'Smart' kitchen tips

உணவை மிதமான அல்லது குறைந்த வெப்பத்தில் சமைப்பது ஊட்டச்சத்தை இழக்காமல் பாதுகாக்கும். அத்துடன் பாத்திரங்களை மூடி வைத்து சமைப்பது எரிபொருளை மிச்சப்படுத்துவதுடன் உணவு பொருட்களும் விரைவாக வேகும்.

சரியாக வேகாத குறிப்பாக அசைவ உணவுகளைத் தவிர்க்கவும். அதேபோல் சூடான சமைத்த உணவுகளை பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைப்பதையும் தவிர்க்கவும்.

logo
Kalki Online
kalkionline.com