

மோர்க்குழம்பு செய்யும்போது பொங்கிப்பொங்கி வழிகிறதா? ஒரு உருளைக்கிழங்கை எடுத்து தோல் சீவி, துண்டு துண்டாக வெட்டிக்கொள்ளுங்கள். இந்தத் துண்டுகளைப் போட்டால் மோர்க்குழம்பு பொங்குவது நின்றுவிடும்.
வெயில்காலத்தில் மோர் விரைவில் புளித்து விடும். அப்படி புளிக்காமல் இருக்க, வாழை இலையை சிறு சிறு துண்டுகளாக்கி, மோரில் போட்டு வைத்து, மோரை உபயோகிக்கும்போது எடுத்துவிட வேண்டும்.
தேங்காய்ப்பால் எடுக்கும்போது, தேங்காய்த்துருவலை அரைக்கும் சமயத்தில் சிறிது வெந்நீர் தெளித்து அரைத்தால், தேங்காய்ப்பால் கெட்டியாக கிடைக்கும்.
பஜ்ஜி, வடை போன்ற பட்சணங்கள் செய்யும்போது, எண்ணெயில் ஒரு சிறு துண்டு இஞ்சியைத்தட்டிப் போடுங்கள். பொரித்த பட்சணங்கள் நன்றாக இருப்பதோடு வயிற்றுக்கும் நல்லது.
முட்டைக்கோஸை சமைக்கும்போது, அதனுடன் சிறிதளவு எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்தால், முட்டைக்கோஸில் இருந்து வரும் வாடை அகன்றுவிடும்.
வெண்ணையை நெய்யாக உருக்கும்போது, ஒரு துளி உப்பு சேர்க்கவும். நெய் சாஃப்டாக இருக்கும். துகள் துகளாக வரும். நல்ல வாசனைக்கு கொஞ்சம் கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்துக் கொள்ளலாம்.
மிகுந்துவிட்ட உப்புமாவில் ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப்போடுங்கள். தேவையான அளவுக்கு முட்டைக்கோஸ் மற்றும் கேரட்டைத் துருவிப்போடுங்கள். எல்லாவற்றையும் கலந்து நன்றாக பிசைந்து சிறு சிறு வடைகளாகத்தட்டி, சமையல் எண்ணையைக் காயவைத்து முறுகலாகப் பொரித்து எடுங்கள். ருசி மிகுந்த வெஜிடபிள் வடை தயார்.
கறிவேப்பிலை வாடாமல் இருக்க வாழை இலையில் சுற்றி வைக்கலாம். பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, தண்டு பாகத்தை தண்ணீரில் மூழ்கும்படி வைத்தாலும் கறிவேப்பிலை வாடாமல் இருக்கும்.
முருங்கைக்கீரை, அகத்திக் கீரையை வதக்கும்போது கரண்டியின் காம்புப்பகுதியை வைத்துக்கிளறவும். அப்படிச் செய்தால் கட்டி விழாமல் கீரை உதிரி உதிரியாக இருக்கும்.
கேரட் அல்வா செய்யும்போது, சிறிதளவு பால் கோவாவையும் சேர்த்துக்கிளறி, கடைசியில் பாதாம் எசென்ஸ் சிறிதளவு விட்டு இறக்கினால் அல்வாவின் சுவையே அலாதிதான்.
உணவுப்பண்டங்களை சமையல் மேடையில் வைக்கும் போது, அவற்றை சுற்றி இடைவெளி இல்லாமல் மஞ்சள் பொடியைத் தூவி வைத்தால், எறும்புகள் அண்டாது.
அடுப்பிலிருந்து சமையல் பாத்திரங்களை எடுத்தவுடன் 'சிங்க்' அடியில் வைத்துக் குழாயை திருப்பிவிட்டால் பாத்திரங்களின் ஆயுள் குறையும். சூடு ஆறியபின்தான் சமையல் பாத்திரங்களை குழாயின் அடியில் வைக்கவேண்டும்.