

‘கடை சப்பாத்தி’ என்றாலே எனக்கு வாயூறுது. கையில் எடுத்தால் பஞ்சு போல மென்மையாக இருக்கும். மடித்தாலும் உடையாது. ஆனால் வீட்டில் செய்த சப்பாத்தி மட்டும் ஏன் விர்ருன்னு போயிடுது... அத பிக்கிறதுக்கே தனியா சாப்பிடணும் போல, “காலையில் சுட்டது... மதியம் பார்த்தால் பிளாஸ்டிக் தட்டு மாரி ஆயிடுதுனு என் நண்பர் சிவா சிரித்துக்கொண்டே சொன்னார்.
இது பல வீடுகளில் நடக்கும் கதைதான். சில கணவன் மார்கள் மனைவியிடம் நல்ல பேர் எடுப்பதற்காக அப்டிப்பட்ட சப்பாத்தியை பாலில் ஊறவைத்து அவர்கள் கண் முன்னே சாப்பிட்டு சப்பாத்தி மிக அருமை என்று புகழ்ந்துவிட்டு புருஷ லட்சணத்துடன் இருப்பதையும் கேள்விப்படுகிறோம்.
கடை சப்பாத்தி மட்டும் எப்படி இவ்வளவு மென்மையாக இருக்கிறது? மாவில் ஏதாவது ரகசியப் பொருள் சேர்க்கிறார்களா?
வாங்க... கடை சப்பாத்தி செய்வோம்!
தேவையான பொருட்கள்;
கோதுமை மாவு – 2 கப்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
ஃப்ரஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன்
கனிந்த வாழைப்பழம் – ½ பழம்
நெய் – 1 டீஸ்பூன்
சீனி (அ ) சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெதுவெதுப்பான தண்ணீர் – தேவையான அளவு.
செய்முறை;
வாழைப்பழத்தை நன்றாக மசித்து, ஃப்ரஷ் க்ரீம், தயிர், நெய், உப்பு ஆகியவற்றை மாவுடன் சேர்த்து பிசையவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையாகப் பிசையவும்.
20–30 நிமிடங்கள் சுத்தமான காட்டன் ஈரத்துணியால் மூடி ஓய்வெடுக்க விடவும்.
பின்னர் உருண்டைகளாகப் பிரித்து, மிதமான தடிமனில் உருட்ட வேண்டும்.
உருட்டும்போது மிகவும் மெல்லியதாகவோ, மிகவும் தடிமனாகவோ இருக்கக் கூடாது. மிதமான தடிமனில் இருக்க வேண்டும்
நன்கு சூடான தோசைக் கல்லில் வட்டமாக உருட்டிய மாவை இடவேண்டும்.
சப்பாத்தியை அதிக நேரம் வாட்டினால், அதிலுள்ள ஈரப்பதம் வெளியேறி கடினமாகிவிடும்.
சுட்டவுடன் சப்பாத்திகளை உடனடியாக மூடியுள்ள பாத்திரத்தில் வைத்தால், உள்ளே இருக்கும் நீராவி அதன் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும்.
இப்போது ஒரு சப்பாத்தியை கையில் எடுத்துப் பாருங்கள்.
மடங்குகிறதா? மென்மையாக இருக்கிறதா? ஆம் மென்மையாக இருக்கும்.
காரணம் என்ன?
முதலில்... மாவின் அறிவியலைப் புரிந்துகொள்வோம்!
கோதுமை மாவில் உள்ள க்ளுட்டன் புரத வலையமைப்பு, மாவைப் பிசையும்போது உருவாகி வலுப்பெறுகிறது. இதுதான் மாவுக்கு நீட்டும் தன்மையையும் மீள் தன்மையையும் கொடுக்கிறது.
ஆனால் சப்பாத்தியை அதிக நேரம் சுடும்போது, அதிலுள்ள ஈரப்பதம் தொடர்ந்து வெளியேறுகிறது. ஈரப்பதம் குறைந்தால் சப்பாத்தியும் உலர்ந்து கடினமாகிவிடும்.
அதனால் மென்மையான சப்பாத்திக்கு மாவுக்குள் ஈரப்பதத்தைச் சரியாக வைத்திருப்பதும், சுடும் நேரத்தை கட்டுப்படுத்துவதும் முக்கியம்.
தயிர் ஏன் சேர்க்க வேண்டும்?
கோதுமை மாவில் சிறிதளவு தயிர் சேர்த்து பிசையும் போது, மாவுக்கு கூடுதல் ஈரப்பதம் கிடைக்கிறது. தயிரில் உள்ள அமிலத்தன்மையும் மாவின் தன்மையைப் பாதிக்கிறது; இதனால் மாவு மென்மையாகக் கையாளப் படுவதற்கு உதவலாம்.
கனிந்த வாழைப்பழம்... உண்மையிலேயே சேர்க்கலாமா?
“சப்பாத்தி மாவில் வாழைப்பழமா?” என்று ஆச்சரியப்பட வேண்டாம்.
நன்றாகக் கனிந்த வாழைப்பழத்தைச் சிறிதளவு மசித்து மாவுடன் சேர்க்கும் முறையும் உள்ளது. வாழைப்பழம் மாவுக்கு ஈரப்பதத்தையும் மென்மையான அமைப்பையும் கொடுக்க உதவுகிறது. அதிகமாகச் சேர்த்தால் சப்பாத்தியின் சுவையும் மணமும் மாறிவிடும். எனவே அரை வாழைப்பழம் போதும்.
மூன்றாவது... நெய்!
நெய் மாவில் உள்ள க்ளுட்டன் இழைகளுக்கு இடையில் ஒரு மென்மையான தடுப்பாகச் செயல்பட்டு, சப்பாத்தியின் அடுக்குகள் நன்றாக உருவாக உதவுகிறது; இதனால் சப்பாத்திக்கு லேசான ஃபிளகி தன்மையும் சுவையான மொறுமொறுப்பும் கிடைக்கலாம்.
கிரீம் சேர்ப்பது மாவுக்கு கூடுதல் கொழுப்பையும் ஈரப்பதத்தையும் வழங்குவதால், சப்பாத்தி இன்னும் பஞ்சு போல மென்மையாக இருக்க உதவுகிறது. அதேபோல், சிறிதளவு சீனி மாவில் உள்ள ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுவதால், சப்பாத்தி சுட்ட பிறகும் நீண்ட நேரம் மென்மையாக இருக்க வாய்ப்புள்ளது.
மாவின் ஓய்வு நேரம் மிக அவசியம்!
இந்த ஓய்வு நேரத்தில் மாவில் தண்ணீர் நன்றாகப் பரவவும், gluten அமைப்பு தளர்ந்து மாவை எளிதாக உருட்டவும் உதவுகிறது.
பக்குவம் வேண்டும்!
மாவுக்கு தண்ணீர் எவ்வளவு?
எவ்வளவு நேரம் பிசையவேண்டும்?
எவ்வளவு நேரம் ஊறவைக்க வேண்டும்?
எவ்வளவு தடிமனில் உருட்ட வேண்டும்?
எப்போது சட்டியில் போடவேண்டும்?
எப்போது எடுத்துவிட வேண்டும்?
இந்த ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதிலைப் பழகிக்கொண்டால், மென்மையான சப்பாத்திக்காக கடைக்குப் போக வேண்டியதில்லை!
நம் வீட்டுச் சமையலறையிலேயே...
பஞ்சு போல மென்மையான சப்பாத்தி மணமணக்கும் !