நம்ம தென்னிந்திய வீடுகளில் காலை விடிந்தாலே இட்லி சத்தம்தான் கேட்கும். இட்லியும் சாம்பாரும் அமிர்தம் தான், மறுக்கவில்லை. ஆனால், அந்த இட்லியை அவிக்கும் போதுதான் பெரிய போர்க்களமே நடக்கும். ஆசை ஆசையாக இட்லி ஊற்றுவோம், ஆனால் வெந்த பிறகு எடுக்கும்போது பாதி இட்லி தட்டிலேயே ஒட்டிக்கொள்ளும்.
கரண்டி வைத்துச் சுரண்டி எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஆனால், உண்மையில் பிரச்சனை மாவில் இல்லை, நாம் இட்லி ஊற்றும் முறையில்தான் இருக்கிறது. சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்தாலே, தட்டில் ஒரு பருக்கை கூட ஒட்டாமல், ஹோட்டல் இட்லி போலப் பந்து பந்தாக எடுக்கலாம். அது எப்படின்னு பார்ப்போம்.
எண்ணெயும் நெய்யும்!
வழக்கமாக நாம் இட்லி தட்டில் நல்லெண்ணெய் மட்டும் தடவிவிட்டு மாவை ஊற்றுவோம். ஆனால், எண்ணெய் மட்டும் போதாது. ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணெயையும், இரண்டு ஸ்பூன் நெய்யையும் எடுத்து நன்றாகக் கலக்கிக்கொள்ளுங்கள்.
இட்லி தட்டில் ஈரம் இல்லாமல் சுத்தமாகத் துடைத்துவிட்டு, இந்த எண்ணெய்-நெய் கலவையைத் தடவுங்கள். நெய் சேர்ப்பது வெறும் வாசனைக்கு மட்டுமல்ல, அது ஒரு 'நான்-ஸ்டிக்' தன்மையை உருவாக்கும். இந்த க்ரீஸைத் தடவிய பிறகு, ஒரு இரண்டு நிமிடம் ஊறவிட்டு, அதன் பிறகு மாவை ஊற்றிப் பாருங்கள். வெந்த பிறகு இட்லி வழுக்கிக்கொண்டு வரும்.
தண்ணீர் கொதிப்பது முக்கியம்!
பலரும் செய்யும் அவசரத் தவறு இதுதான். இட்லிப் பானையில் தண்ணீரை ஊற்றி, உடனே இட்லி தட்டையும் உள்ளே வைத்து அடுப்பைப் பற்ற வைப்பார்கள். இப்படிச் செய்யவே கூடாது. தண்ணீர் நன்றாகக் கொதித்து ஆவி வரும்போதுதான், மாவு ஊற்றிய தட்டை உள்ளே வைக்க வேண்டும்.
அப்போதுதான் அந்தத் திடீர் வெப்பத்தில் மாவு சட்டென உப்பி, பூ போல மலரும். பச்சத் தண்ணீரில் வைத்தால் இட்லி கல்லு போல ஆவதோடு, தட்டிலும் பிசுபிசுவென ஒட்டிக்கொள்ளும்.
அவசரம் ஆபத்து!
இட்லி வெந்த வாசனை வந்தவுடனே அடுப்பை அணைத்துவிட்டு, சுடச்சுடத் தட்டை வெளியே எடுத்து, உடனே இட்லியைத் தோண்ட ஆரம்பித்துவிடுவோம். இதுவும் தவறு. அடுப்பை அணைத்த பிறகு, இட்லிப் பானையை இறக்கித் தரையில் வையுங்கள். ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் அந்த ஆவி அடங்கட்டும்.
அந்தச் சூடு கொஞ்சம் குறைந்தால்தான் இட்லி இறுகி, வடிவத்திற்கு வரும். சுடச்சுட எடுத்தால், நீராவி பட்டு இட்லி குழைந்து போவதுடன், தட்டிலும் ஒட்டிக்கொள்ளும். கொஞ்சம் ஆறிய பிறகு, கரண்டியால் லேசாகத் தள்ளினாலே இட்லி பந்து போலத் தட்டிலிருந்து குதிக்கும்.
இனிமேல் இட்லி மாவு அரைக்கும்போதெல்லாம் கவலைப்பட வேண்டாம். மேலே சொன்னது போல நெய் கலவை தடவுவது, கொதிக்கும் நீரில் வைப்பது, ஆறிய பின் எடுப்பது ஆகிய இந்த மூன்று விஷயங்களைக் கடைப்பிடித்துப் பாருங்கள்.