
குழந்தைகளுக்கு ஆறு மாத பாதியிலிருந்து திட உணவை கொடுக்க சொல்வார்கள் மருத்துவர்கள். குழந்தை எதையெல்லாம் விரும்பி சாப்பிடுகிறது என்று கவனித்து அதற்கு தகுந்தாற்போல் உணவை செய்து கொடுத்தால் பிரச்சனை இல்லாமல் சாப்பிட்டு விடுவார்கள். கொஞ்சம் ருசி மாறினாலும், எதையும் சாப்பிட அடம்பிடிப்பார்கள். அவர்கள் சாப்பிடுவதற்கு உகந்த உணவு முறைகள் சில இதோ:
1. ஒரு ஸ்பூன் ரவையுடன் அரை கேரட்டை பொடியாக நறுக்கி, ஆறு ஸ்பூன் தண்ணீர் விட்டு நன்றாக குழைய வேக வைத்து, சூடாக இருக்கும் பொழுதே ஒரு டீஸ்பூன் நெய் சிறிது வெல்லம் கலந்து ஆறவிட்டு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கொடுத்தால் குழந்தைகள் சத்தம் போடாமல் சாப்பிடுவார்கள். இது ஒரு மீடியம் சைஸ் கிண்ணத்தில் ஒரு கிண்ணம் வரும். இதில் முக்கால் கிண்ணம் கட்டாயமாக சாப்பிட்டு விடுவார்கள்.
2. ஒரு ஸ்பூன் அரிசியும், அரை ஸ்பூன் துவரம் பருப்பும் கலந்து அதனுடன் சிறிதளவு பீர்க்கங்காய் சேர்த்து ஒரு மிளகு, 3 சீரகம், சின்ன வெங்காயம் ஒன்று, தக்காளி சிறிது, பூண்டு 1 பல், பெருங்காயம் சிறிதளவு, உப்பு சேர்த்து வேகவைத்து வெந்தவுடன் நெய் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.
இப்படி ஊட்டும் பொழுது ஒரு கிண்ணத்தில் தண்ணியை வைத்துக்கொண்டு அவ்வப்பொழுது இடைஇடையில் தண்ணீர் கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள். பிறகு அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது. செரிமான பிரச்சனை இன்றி நன்றாக இருக்கும். மிளகு பிடிக்கவில்லை என்றால் நீக்கி விடலாம்.
3. சில குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருக்கும். அதற்காக முருங்கைக்காயை கொடுக்க சொல்வார்கள். அப்பொழுது அரிசியுடன், இளம் முருங்கை காயின் உள்ளே இருக்கும் சதைப் பற்றை எடுத்துப் போட்டு, சிறிதளவு பயத்தம் பருப்பு சேர்த்து சீரகம் கலந்து வேகவிட்டு அதனுடன் உப்பு, நெய் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அடித்து கொடுக்கலாம்.
4. அதேபோல் காலை உணவாக கோதுமை ரவை அல்லது சாதாரண ரவையுடன் ஆப்பிள் துண்டுகள், அல்லது பேரிக்காய் இவற்றை சேர்த்து நன்றாக வேக வைத்து மசித்துக் கொடுக்கலாம்.
5. சப்போட்டா, பப்பாளி பழத்தை மசித்து கொடுப்பது, வாழைப்பழத்தை மசித்துக் கொடுப்பது போன்றவற்றை ஸ்னாக்ஸ் ஆக கொடுக்கலாம். எல்லாவற்றையும் கலந்து கொடுக்காமல் தினசரி ஒவ்வொரு பழமாக ஒவ்வொரு காயாக சேர்த்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
6. கேரட், பீட்ரூட், அவரைக்காய், முருங்கை, முள்ளங்கி, புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், இவைகளை குழந்தைகளுக்கு உணவுடன் சேர்த்துக் கொடுக்கலாம். சர்க்கரைவள்ளி கிழங்கை ஸ்நாக்ஸாக அவித்து சிறிது நீர் கலந்து கொடுத்தால் விக்காமல் சாப்பிடுவார்கள்.
7. உருளைக்கிழங்கு, பீன்ஸ் போன்றவற்றை சில குழந்தைகள் சாப்பிட்டால் கேஸ் பிரச்சனையால் அழுவார்கள். அதை நாள் பட கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்தால் வாயு பிரச்சனை தீரும். அவர்களும் பழகி மெல்ல சாப்பிட ஆரம்பிப்பார்கள்.
இப்படி ஒவ்வொரு நாளும் மெனுவை மாற்றி மாற்றி கொடுத்தால், குழந்தைகள் அடம் பண்ணாமல் சாப்பிடுவார்கள். போதுமான அளவு சத்தும் கிடைக்கும். அந்தந்த மாதத்திற்கு தேவையான அளவு எடையும் கூடும், வளர்ச்சியும் நார்மலாக இருக்கும்.