
சப்பாத்திக்கு மாவு பிசையும்போது ஒன்றிரண்டு பிடி சோளமாவைச் சேர்த்துப் பிசைந்து பாருங்கள். செய்யும் சப்பாத்தி மிகவும் சுவையாக இருக்கும்.
சாம்பார் செய்யப்போறீங்களா? புளிக்குப் பதிலாக தக்காளியைச்சேர்த்துக் கொதிக்க விட்டுப்பாருங்கள். சாம்பாரின் சுவையே அலாதிதான்!
அடைக்கு பருப்புகள் ஊறவைக்கும்போது, கூடவே கொண்டைக்கடலை, பச்சைப்பயறு போன்ற பயறு வகை களையும் ஒவ்வொரு கைப்பிடி சேர்த்து ஊறவைத்து அரைத்தால் அடை சுவையோ சுவை.
பூரி, சப்பாத்தி போன்ற பலகாரங்களுக்கு மாவு பிசையும் போது, கொஞ்சம் மில்க்மெய்டு விட்டுப் பிசைந்து தயாரித்துப் பாருங்களேன். சப்பாத்தி சுவையாக இருக்கும்.
தயிர்வடை செய்யும்போது, வடைகளை சூடான பாலில் தோய்த்து எடுத்து, தயிரில் ஊறவையுங்கள். ருசி மாறாமல், புளிப்பு வாடை வராமல் வடை நீண்ட நேரம் நன்றாக இருக்கும்.
பொரித்த ஒரு அப்பளத்தை நொறுக்கி, இரண்டு டீஸ்பூன் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, புளி, ஒன்றிரண்டு மிளகாய், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுத்தால் சுவையான அப்பளத் துவையல் ரெடி.
தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சியை, பச்சை மிளகாயுடன் சிறிது எண்ணெயில் வதக்கி, சிறிது உப்புடன் மிக்ஸியில் அரைத்து, தாளித்த சாதத்துடன் கலந்துவிட்டால் ருசி மிகுந்த இஞ்சிச் சாதம் தயார்.
இட்லிமாவு புளித்து போய்விட்டதா? கவலையை விடுங்கள். ஒரு டம்ளர் பால் இட்லி மாவில் சேர்த்தால் புளிப்புச் சுவை அறவே நீங்கிவிடும்.
புளிச்சாற்றில் உப்பு பெருங்காயம் சேர்த்து பச்சை மிளகாய்களைக்கீறி ஊறவைத்து, வெயிலில் காயவைத்து எடுத்தால் சுவையான புளிமிளகாய் ரெடி.
தோசைக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி செய்யும்போது,பச்சை மிளகாயை எண்ணெயில் வதக்கிய பின் அரைத்தால் சுவை மிகுந்து இருக்கும்.
காய்கறிகள் வாடிப்போய்விட்டதா? அந்தக் காய்கறிகளை, வினீகர் கலந்த தண்ணீரில் பத்து நிமிடம் போட்டு வைத்து எடுத்தால் புதியதுபோல் ஆகிவிடும்.
எலுமிச்சை ஊறுகாய் செய்யும்போது சிறிது வதக்கிய இஞ்சித்துண்டுகள் சேர்த்துப் பாருங்களேன். ஊறுகாய் மிகவும் ருசியாக இருக்கும்.