கொஞ்சம் கவனமுடன் செயல்பட்டால் உங்கள் வீட்டுச் சமையலறையையும் பார்ப்பவர்கள் மெச்சும்படி வைத்துக் கொள்ளலாம். இதோ அதற்கு உதவும் குறிப்புகள்.
1. முதலில் சமையல் வேலைக்கு ஒரு போதும் பயன்படாத பொருட்கள் இருந்தால் சமையலறையில் இருந்து அகற்றி விடுங்கள்.
2. உணவுப்பொருட்கள், எண்ணெய் பிசுக்கு என கேஸ் அடுப்பு அழுக்காக இருக்கிறதா? சிறிதளவு நீரில் ஒரு ஸ்பூன் உப்பைக் கலந்து அதில் ஒரு துண்டு செய்தித்தாளை முக்கி எடுத்து கேஸ் அடுப்பின் மீது தடவுங்கள். சில வினாடிகள் கழித்து ஒரு உலர்ந்த துணியால் அழுத்தித் துடைத்து விட்டால் கேஸ் அடுப்பு பளிச்சென்று ஆகிவிடும்.
3. சமையலறையில் வைத்திருக்கும் ஃப்ரிட்ஜை மாதத்தில் இரு தடவையாவது கிளீன் செய்து அழுகிப்போன காய்கறிகளையும், கெட்டுப்போன உணவுப் பொருட்களையும் அகற்ற வேண்டும். இதனால் ஃப்ரிட்ஜில் துர்நாற்றம் வீசுவதைத் தவிர்க்கலாம்.
4. சமையலறையில் பயன்படுத்துவது புது குக்கராக இருந்தால் தினமும் கொஞ்சம் எலுமிச்சைத் தோல்களை போட்டு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வைத்தால் குக்கரின் உள்பாகம் கறுக்காமல் இருக்கும்.
5. சமையலறையில் இருக்கும் கேஸ் சிலிண்டர், சமையல் மேடை, சிங்க், மற்றும் தரைகளின் மீது சமைக்கும் உணவுப் பொருட்கள் விழுந்து கிடக்கக் கூடாது. இதனால் சமையலறையில் பல்லி, கரப்பான் பூச்சி போன்றவற்றின் தொல்லைகள் அதிகமாகி விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.
6. இட்லி, தோசை, அடை மாவு போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது அகலமான பாத்திரத்தில் கால் பாகம் தண்ணீர் நிரப்பி, மாவு பாத்திரத்தை அதனுள் வைத்து உள்ளே வைக்கவும். தண்ணீரின் குளிர்ச்சியால் மாவு மேலும் சில நாட்கள் புளிக்காமல் இருக்கும்.
7. கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது சீக்கிரமே அழுகி விடுகிறதா? அவற்றை ஈரமில்லாமல் ஒரு தாளில் சுற்றி, கறுப்புநிற பிளாஸ்டிக் பையில் வைத்து சுருட்டி ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். பத்து நாட்கள் ஆனாலும் அவை அழுகாமல் அப்படியே பசுமையாக இருக்கும்.
8. குக்கரிலிருந்து பாத்திரங்களை எடுத்த பின் அடியிலிருக்கும் சூடான நீரை வீணாக்க வேண்டாம். அதை வாய் அகலமான பாத்திரத்தில் கொட்டி, அதில் சமையலறையில் பயன்படுத்தும் எண்ணெய்ப் பிசுக்கான கரண்டிகள், தட்டுகள், கைப்பிடித் துணிகள் போன்றவற்றைத் தேய்த்துக் கழுவினால், அவையெல்லாம் பிசுக்கும் நீங்கி பளிச்சென்று ஆகி விடும்.
9. தண்ணீரைக் கொதிக்க வைத்த சில ஸ்டீல் பாத்திரங்களில் வெள்ளையாக கறை படிந்திருக்கும். அது எளிதில் போக அந்தப் பாத்திரத்தில் இரண்டு நாட்களுக்கு அரிசியை ஊற வைத்திருந்தால் கறை போய்விடும்.
10. பெருங்காயப் பவுடர் வரும் டப்பாக்கள் காலியானதும், அதில் சோப் பவுடர் போட்டு சமையலறை மேடை மீது வைத்துக் கொண்டால் சாப்பிட்ட தட்டுகள், பயன்படுத்திய கரண்டிகள், ஸ்பூன்கள் போன்றவற்றை அவசரத்துக்கு தேய்த்தெடுக்க சுலபமாக இருக்கும்.
11. அரிசி மாவு வைத்திருக்கும் டப்பாவில், கரண்டிக்கு பதிலாக ஓர் சிறிய டீ வடிகட்டியை போட்டு வைப்பது நல்லது. மாவு எடுக்கும் பொழுது டீ வடிகட்டியால் எடுத்தால், அவ்வப் பொழுது புழு, பூச்சி, கட்டி தட்டிகள் இல்லாமல் சலித்தே சுத்தமானமாவை உபயோகிக்கலாம்.
12. சமையலறையில் உள்ள எல்லா மளிகைப் பொருள் டப்பாக்களிலும் ஸ்பூன் போட்டு வைப்பதை கட்டாயம் செய்யுங்கள். நாம் அவசரமாக ஈரத்துடன் கையைப் போட்டு எடுப்பதால் மளிகைப் பொருள் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம்.