ஹோட்டல் சுவையில் அசத்தும் மீல் மேக்கர் கிரேவி செய்யலாம் வாங்க!
சோயா சங்க்ஸை வைத்து எளிமையாக செய்யும் ஒரு ரெசிபி இது. இந்த மாதிரியான கிரேவியை நீங்கள் வீட்டில் செய்ய கற்றுக்கொண்டு விட்டால் எப்பவுமே ரெஸ்டாரண்டுக்கு போக வேண்டிய தேவை இருக்காது. அதை செய்யும் செயல்முறை விளக்கத்தைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
ரெசிபி செய்ய தேவையான பொருட்கள்:
சோயா சங்க்ஸ் பால்ஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
பொட்டுக்கடலைவ கால் கப்
சோயா சங்க்ஸ் -ஒரு கப்
உப்பு -கால் டீஸ்பூன்
மிளகாய்த் தூள் -அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள்- அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய்- 3 டேபிள்ஸ்பூன்
கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - இரண்டு பேஸ்ட் ஆக்கியது
தக்காளி- மூன்று பேஸ்ட் ஆக்கியது
மஞ்சள் பொடி -கால் டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி -ஒரு டீஸ்பூன்
மல்லி பொடி -ஒரு டீஸ்பூன்
சோம்பு பொடி -ஒரு டீஸ்பூன்
சீரகம் -அரை டீஸ்பூன்
இஞ்சி ,பூண்டு பேஸ்ட் -அரை டீஸ்பூன்
மாங்காய்ப் பொடி / லெமன் ஜூஸ்- அரை டீஸ்பூன்
காய்ந்த வெந்தயக்கீரை பொடி- ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள்- அரை டீஸ்பூன்
மல்லித்தழை -ஒரு டீஸ்பூன்
செய்முறை:
பொட்டுக்கடலையை மிக்ஸியில் நன்றாக பொடித்து ஒரு பாத்திரத்தில் கொட்டவும் .
சோயா சங்க்ஸை கொதிக்கும் வெந்நீரில் போட்டு ஐந்து நிமிடம் நன்றாக மூடி வைக்கவும். பிறகு அவற்றை நன்றாகப் பிழிந்து அந்த உருண்டைகளை மிக்ஸியில் போட்டு அரைத்து அதை பொட்டுக்கடலை பொடியுடன் சேர்த்து உப்பு, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி, மல்லித்தழை அனைத்தையும் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
மாவு தண்ணியாக இருந்தால் ஒரு டீஸ்பூன் பொட்டுக்கடலை பொடியை சேர்த்து நல்ல கெட்டியான உருண்டை பிடிக்கவும் .
அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து ,ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளில் இரண்டு முறை 10,10 ஆகப் போட்டு நல்ல கிறிஸ்ப்பியாக பொரித்து எடுக்கவும்.
அதே கடாயில் மீந்திருக்கும் எண்ணெயில் சீரகத்தை பொரிக்க விடவும். பின்னர் வெங்காய பேஸ்ட்டை போட்டு அதில் நன்றாக ஒரு நிமிடம் வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். அதன் பச்சை வாசனை போன பிறகு தக்காளி பேஸ்ட்டை சேர்க்கவும்.
பிறகு மஞ்சள் தூள், மல்லி ,மிளகாய், சோம்பு, மாங்காய் தூள் வரை சேர்த்து நன்றாக வதக்கி தேவையான அளவு உப்பு போட்டு ஒன்றரை கப் தண்ணீர் விட்டு எட்டு நிமிடம் நன்கு கொதிக்க விடவும். கிரேவி நன்றாக கொதித்து ஓரளவு கெட்டிப்பட்டு, எண்ணெய் பிரியும் பொழுது பொரித்து வைத்த சோயா பால்ஸை அதில் சேர்த்து ,கரம் மசாலா பொடி ,காய்ந்த வெந்தயக்கீரை பொடியையும் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.
கிரேவி அதில் நன்றாக கலக்கும் வரை இரண்டு நிமிடம் கொதிக்க விட்டால் போதும். பால்ஸ் அதில் நன்றாக ஊறிவிடும். பிறகு சிறிதளவு மல்லி தழையைச் சேர்த்து இறக்கவும். மிகவும் ஈஸியா, ரொம்ப டேஸ்டியா செய்யக்கூடிய ரெசிபி இது. செய்து அசத்திட்டோம்ல.
இதை சப்பாத்தி ,இட்லி ,தோசை, சாதம் என்று அனைத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். ருசியில் அசத்தலாக இருக்கும்.
சோயா பால்ஸை பொரிக்கும் பொழுது விருப்பப்பட்டால் அதிக அளவு எண்ணெய் விட்டு ஒரே முறையிலும் பொரித்து வைத்துக் கொள்ளலாம்.
கரம் மசாலாவை எப்பொழுதும் கடைசியில் தான் சேர்க்க வேண்டும்.
காய்ந்த மாங்காய் பவுடர் இல்லை என்றால் அதற்கு பதிலாக இதில் லெமன் ஜூஸை சேர்த்துக் கொள்ளலாம்.

