
இனிப்பு இந்த சொல்லைக்கேட்டாலே நம் மனதில் ஒரு மகிழ்ச்சி பிறப்பது இயற்கைதானே. இனிப்பில்தான் எத்தனை எத்தனை வகைகள். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான உணவு உண்டு. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் மதுரை முதலான தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமானது சீரணி மிட்டாய். தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமாக விளங்குவதால் இந்த இனிப்பிற்கு “தெக்கத்தி சீரணி மிட்டாய்” என்ற பெயரும் வழங்கப்படுகிறது.
மிட்டாய் என்று பெயர் பெற்றிருந்தாலும் இது ஒரு இனிப்பு தின்பண்டமாகும். சீரணி மிட்டாய் கருப்பட்டி, வெல்லம், சர்க்கரை என மூன்று விதங்களில் தயாரிக்கப் படுகின்றன.
பச்சரிசி மாவு, உளுந்து, சுக்கு, கருப்பட்டி அல்லது வெல்லம் அல்லது சர்க்கரை இவற்றை உபயோகித்து தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு வகையே சீரணி மிட்டாய் ஆகும். இனிப்புக் கடைகளில் சீரணி மிட்டாயானது ஒரு பெரிய சங்கிலியை வட்டமாகச் சுற்றி வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
பார்ப்பதற்கு வடநாட்டைச் சேர்ந்த ஜிலேபிபோல காட்சியளிக்கும். நம் மாநிலத்தில் அதிகம் விற்கப்படும் ஜாங்கிரியையும் ஞாபகப்படுத்தும். சங்கிலி வடிவத்தில் சுருள் சுருளாக உருவாக்கப்பட்டு இனிப்புக் கடைகளில் உயரமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இதனால் இந்த சீரணி மிட்டாய்க்கு “ஏணி மிட்டாய்” என்ற காரணப் பெயரும் வழக்கத்தில் உள்ளது. மேலும் இது “சீனி மிட்டாய்” எனவும் “ரயில் மிட்டாய்” எனவும் செல்லமாக அழைக்கப்படுகிறது.
சீரணி மிட்டாயின் மீது காணப்படும் கருப்பட்டி அல்லது வெல்லப்பாகு நம்மைச் சாப்பிடத் தூண்டும் ஆவலை அதிகரிக்கும். கடித்துச் சுவைக்கும்போது மொறுமொறுப்பும் நாவில் கரையும்போது இனிப்பும் சேர்ந்து நம்மை மகிழ்விக்கும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் பச்சரிசி மாவு மற்றும் உளுந்து இரண்டையும் நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை நன்றாக இட்லி மாவுப் பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு கருப்பட்டி அல்லது வெல்லத்தை எடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் வெல்லத்தை கரைக்க வேண்டும். வெல்லம் பாகுப்பதத்திற்கு வந்த பின்னர் அதைத் தனியாக இறக்கி வைத்து கொள்ளவும்.
ஒரு துணியில் ஒரு சிறிய துளையைப் போட்டு கொண்டு அதில் அரைத்து வைத்துள்ள மாவுக் கலவையை போட்டு கொதிக்கும் எண்ணெயில் ஜாங்கிரி சுற்றுவது போலப் பிழிய வேண்டும். எண்ணெயில் வெந்து பொன்னிறமாக மாறிய பின்னர் அதை எடுத்து கருப்பட்டி அல்லது வெல்லப்பாகில் பத்து நிமிடங்களுக்கு ஊற வைத்தால் சீரணி மிட்டாய் தயார்.
கருப்பட்டிக்கு பதிலாக சர்க்கரைப் பாகில் ஊறவைத்துத் தயாரித்தால் அது வெள்ளைச் சீரணி மிட்டாய் என அழைக்கப்படும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சீரணி மிட்டாயை பாகில் அதிக நேரம் ஊறவைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் மிட்டாய் உடைந்து போகக்கூடும். மேலும் சிறிது நேரம் ஊற வைத்தால்தான் மிட்டாயின் மேற்புறத்தில் மொறுமொறுப்பும் உள்ளே மிருதுவான தன்மையும் கிடைக்கும்.
தென்மாவட்டங்களில் கருப்பட்டி அதிக அளவில் உபயோகிக்கப்படுகிறது. இப்பகுதிகளில் கருப்பட்டியில் இனிப்புகள் செய்யப்படுகின்றன. அவற்றில் இன்றுவரை மிகவும் பிரபலமாக விளங்குவது இந்த சீரணி மிட்டாய்தான். மதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், கல்குறிச்சி, பாலவநத்தம், இருக்கன்குடி முதலான ஊர்களில் இன்றளவும் மிகவும் புகழ் பெற்று விளங்கும் ஒரு இனிப்பு சீரணி மிட்டாய். இந்த பகுதிகளுக்கு நீங்கள் பயணிக்கும்போது மறக்காமல் சீரணி மிட்டாயை வாங்கி சுவைத்து மகிழுங்கள்.