நாக்குக்கு ருசியான காரசார பச்சை மிளகாய் சட்னி!

பச்சை மிளகாய் சட்னி...
பச்சை மிளகாய் சட்னி...

பெரும்பாலும் நமது காலை மற்றும் இரவு உணவுகளில் இட்லி தோசை வகைகளே அதிகம் இருக்கும். இதற்கு தொட்டுக் கொள்வதற்கு சட்னி, சாம்பார் வகைகள் செய்வார்கள். இந்த சட்னியிலும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கொத்துமல்லித்தழை சட்னி போன்றவைகளே அதிகம் இடம் பிடிக்கும். கொஞ்சம் காரசாரமாக நாக்குக்கு ருசியாக சட்னி செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக இந்த பச்சை மிளகாய் கார சட்னி செய்து பாருங்கள். நிச்சயம் இன்னும் இரண்டு இட்லி அதிகம் கேட்பார்கள்.

தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய் - 8
எண்ணெய் - 2 டே. ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1/2 டே. ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 டே. ஸ்பூன்
சீரகம்- 1/4 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - கால் கப்
கொத்த மல்லி (தனியா) - 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 8
இஞ்சி -சிறு துண்டு
பெருங்காயத் தூள்- சிறிது 
வெல்லம் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

சட்னிக்கு தாளிக்க:
கடுகு    -   1/4 டீஸ்பூன்                    
உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை  - சிறிது

செய்முறை:
முதலில் ஒரு அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் முதலில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும். (தீயக்கூடாது) பருப்புகள் பொன்னிறமாக வறுத்ததும், சீரகம் சேர்த்து வறுக்கவும். அதன் பின்பு இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய்களையும் சேர்த்து நன்கு வதக்கவும். நிறம் மாறி மிளகாய் நன்கு வதங்கியதும் தோலுரித்து இரண்டாக வெட்டி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தையும் இதோடு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி கொள்ளவும்.

வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அதன் பின்பு சிறிது பெருங்காயத் தூளை சேர்த்து கொண்டு கிளறி விடவும். ஒரு நிமிடம் கழித்து வைத்திருக்கும் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கருகாமல் நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

இந்தக் கலவையை நன்கு ஆறவிட்டு மின் அம்மியில் போட்டு  தேவையான உப்பு மற்றும் சிறிது வெல்லம் சேர்த்து சிறிது நீர் தெளித்து சற்று கெட்டியாக அரைத்து பவுலில் எடுத்து வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
ஒரு ஊருக்கு ஒரே சமையலறையா? ஒன்றாக கூடி உணவருந்தும் மக்கள்!
பச்சை மிளகாய் சட்னி...

பின் தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் விட்டுக் கலக்கவும். அவ்வளவுதான் சற்று இனிப்பான, அதே சமயம் காரசாரமான பச்சை மிளகாய் சட்னி தயாராகிவிட்டது.

குறிப்பு- அவரவர் காரத்திற்கு ஏற்ப மிளகாய்களை சேர்க்கலாம். காரமான மிளகாய் என்றால் கவனமாக இருக்கவும். காரத்தை மட்டுப்படுத்தவே வெல்லம் சேர்க்கிறோம். வறுக்கும் போது எதையும் அதிகம் கருகவிடாமல் இருப்பது சட்னியின் சுவைக்கு உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com