இந்த கீரைகளை இப்படி சமைச்சா... அப்புறம் வேற எதுவுமே தேவையில்லை!

Spinach recipes
Spinach recipes
Published on

1) தண்டுக்கீரை சாம்பார்:

சின்ன வெங்காயம் - 10 

தக்காளி - 2 

பச்சை மிளகாய் - 2 

சாம்பார் பொடி - 2 ஸ்பூன் 

துவரம் பருப்பு - 1/4 கப்

தாளிக்க: கடுகு, வெந்தயம், பூண்டு 2 பல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்

செய்முறை:

துவரம் பருப்பை கழுவி பூண்டு, பெருங்காயத்தூள், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து ரெண்டு விசில் வரும் வரை குக்கரில் வைக்கவும். தண்டுக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து அதையும் பொடியாக நறுக்கி வைக்கவும். 

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் நறுக்கிய கீரை, சாம்பார் பொடி, தேவையான உப்பு, தண்ணீர்  விட்டு வேக விடவும். வெந்த பருப்பு கலவையை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். மிகவும் ருசியான தண்டுக்கீரை சாம்பார் தயார். சூடான சாதத்தில் நெய் விட்டு கீரை போட்டு பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

குறிப்பு: கீரையை மூடி வைக்காமல் திறந்து வைத்து வேக விட நிறம் மாறாமல் இருக்கும்.

2) முடக்கத்தான் கீரை ரசம்:

முடக்கத்தான் கீரை - 2 கைப்பிடி 

மிளகு - 1 ஸ்பூன் 

சீரகம் - 1/2 ஸ்பூன் 

பூண்டு - 6 பற்கள் 

துவரம் பருப்பு - 2 ஸ்பூன் 

புளி - சிறிய எலுமிச்சை அளவு

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 

உப்பு - தேவையானது 

தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை,  மிளகாய், நெய்

செய்முறை:

முடக்கத்தான் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து நல்லெண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவும். துவரம் பருப்பு, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை வெறும் வாணலியில் நன்கு சூடு வர வறுத்து ஆறவிட்டு நைஸாக பொடித்துவிட்டு அத்துடன் முடக்கத்தான் கீரையையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
சத்தான கேரளா ஸ்பெஷல் கோதுமை ஒரட்டி, பால் கஞ்சி மற்றும் புழுக்கு செய்யலாம் வாங்க..!
Spinach recipes

புளியை நீர்க்கக் கரைத்து அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து புளி வாசனை போகும் வரை கொதிக்க விடவும். அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நான்கு கப் தண்ணீர் விட்டு மொச்சு பதம் வந்ததும் இறக்கவும். (கொதிக்க விட வேண்டாம்) வாணலியில் சிறிது நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, ஒரு காய்ந்த மிளகாய் சேர்த்து கடுகு பொரிந்ததும் ரசத்தில் கொட்டி கலக்கிவிட மிகவும் ருசியான முடக்கத்தான் கீரை ரசம் தயார்.

3) சிலோன் பசலைக்கீரை பொரியல்:

இதனை 'குத்து பசலைக்கீரை' என்றும் அழைப்பார்கள். வாதம் பித்தம் கபம் போன்றவற்றை நீக்கி கண்ணுக்கும் நன்மை தரும். உடல் வெப்பத்தை தணிக்கும். நீர் சுருக்கு, நீர்க்கட்டு, நீர்க்கடுப்பு போன்றவற்றை சரி செய்யும். வெயில் காலத்துக்கு ஏற்ற கீரை இது.

பசலைக்கீரை - ஒரு கட்டு 

பெரிய வெங்காயம் - 1 

தேங்காய்த் துருவல் - 1/2 கப் 

காய்ந்த மிளகாய் - 2 

பூண்டு - 2 பல் 

உப்பு - தேவையானது

தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, நல்லெண்ணெய்

செய்முறை:

கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவல், மிளகாய், பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கிய பலன் தரும் நான்கு வகை பலாக்கொட்டை ரெசிபிகள்!
Spinach recipes

அடுப்பில் வாணலியை வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு அரை ஸ்பூன், சீரகம் அரை ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது ஆகியவற்றை நல்லெண்ணெய் விட்டு தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதில் பொடியாக நறுக்கிய பசலைக் கீரையை சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு ஒரு கை தண்ணீர் தெளித்து வதக்கவும். இரண்டே நிமிடத்தில் சுருள வதங்கிவிடும். அப்பொழுது அரைத்து வைத்த தேங்காய் சேர்த்து கலந்து விட மிகவும் சத்தான பசலைக்கீரை பொரியல் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com