
'தினமும் இட்லி தோசை உப்புமாதானா' என அலுத்துக் கொள்ளுபவர்களுக்கு சந்தோஷம் தரும் எளிய ரெசிபிகளை தற்போது பலரும் காணொளி பார்த்தோ அல்லது சுயமாகவோ முயற்சி செய்து பார்க்கின்றனர். சமையலில் ஆர்வம் இருந்தால் போதும் நாமும் விதவிதமான சமையல் செய்து அசத்தலாம்.
அப்படி வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு இருபதே நிமிடங்களில் சுவையான மெதுமெது பன் தோசை (Sponge Dosa) செய்து பார்ப்போமா?
தேவை
கெட்டித்தயிர் - 3/4 கப்
ரவை - 2 கப்
உருளைக்கிழங்கு - 3 மீடியம் சைஸ்
பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
பெருங்காயம் - 1 சிட்டிகை
கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க
கறிவேப்பிலை - சிறிது
சோடா உப்பு - 2 சிட்டிகை
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை
உருளைக்கிழங்குகளை மண் போக கழுவி சிறிய துண்டுகளாக்கி நீர் விடாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ரவையை வறுத்து அதனுடன் தயிர் சேர்த்து மிக்சியில் இட்டு அரைத்துக் கொள்ளவும்.
சூடான எண்ணெயில் கடுகு உளுந்து சீரகம் கறிவேப்பிலை தாளித்து,
பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி,
அரைத்த உருளைக்கிழங்கு மற்றும் சோடா உப்பு பெருங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து,
தேவைப்பட்டால் சிறிது நீர் தெளித்து,
கெட்டியான தோசை மாவு பதத்தில் நன்கு கரைத்துக் கொள்ளவும்.
பத்து நிமிடங்கள் ஊறியதும் குழிவான அகலக் கரண்டி அல்லது தவா வைத்து அதில் சற்று தாராளமாக எண்ணெய் விட்டு ஒரு கரண்டி மாவு எடுத்து ஊற்றி சிவந்து வந்ததும் திருப்பி விட்டு சிவந்து எடுத்து வைக்கவும். இந்த மெது மெது பன் தோசைக்கு கெட்டியான சிவப்பு மிளகாய் போட்ட தக்காளி, பூண்டு சட்னி அல்லது தேங்காய் சட்னி சூப்பர் காம்பினேஷன்.
தக்காளி பூண்டு சட்னி
தேவை
தக்காளி - 1/4 கிலோ
பூண்டு - 1
சிவப்பு மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 3
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க - கடுகு, கறிவேப்பிலை
செய்முறை
ஒரு அடி கனமான கடாயை வைத்து தேவையான எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு , உளுத்தம் பருப்பு போட்டு சிவந்ததும் தனியா போட்டு வாசம் வந்ததும் நறுக்கிய வெங்காயம், பூண்டு மிளகாய் போட்டு நன்கு வதக்கி அதனுடன் நறுக்கிய தக்காளி தேவையான உப்பு சேர்த்து வதக்கி ஆறியதும் மிக்சியில் இட்டு கொரகொரப்பாக ஆட்டி சிறிது எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி பன்தோசையுடன் பரிமாறவும்.
குழந்தைகளுக்கு மிளகாய் சேர்க்காமல் இது போல் செய்து தந்தால் வேண்டும் எனக் கேட்டு சாப்பிடுவார்கள். பெரியவர்களுக்கு விரும்பினால் தக்காளி, புதினா சேர்த்தும் செய்யலாம். வித்யாசமான ருசி கிடைக்கும்.