காலையில் அவசரமா? இந்த 10 நிமிட ரெசிபிகள் பெண்களுக்கு ஒரு வரம்!

Quick Recipes
Quick Recipes
Published on

காலை நேர பரபரப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. அதிலும் பெண்களுக்கு காலை உணவு செய்வது கூடுதல் வேலை. இப்பிரச்சினைக்கு தீர்வாக குறைந்த நேரத்தில் தயாரிக்கக் கூடிய சில சுவையான உணவுகளின் ரெசிபியை இப்போது பார்க்கலாம்.

1. பன் தோசை ரெசிபி:

ஒரு கப் ரவையுடன் 3/4 கப் புளித்த தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். கலவையை மிக்ஸியில் போட்டு நன்கு மசிய அரைத்து ஒரு பாத்திரத்தில் கொட்டவும். ஒரு பெரிய வெங்காயம் மற்றும் இரண்டு பச்சை மிளகாய்களை மிக மெல்லிசாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு கடாயில் மூன்று டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் சீரகம், ஒரு இணுக்கு கறிவேப்பிலை சேர்த்துப் பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.

அதை கீழே இறக்கி வைத்து ஆறியவுடன் மாவில் கொட்டவும். ஒரு கைப்பிடி மல்லி தழை, ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு சிட்டிகை சமையல் சோடா ஆகியவற்றையும் மாவுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

கைப்பிடியுடன், பன் சைஸ் வட்ட வடிவமான வாயுள்ள தாளிப்பு கரண்டியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து ஊற்றி, ஒரு பக்கம் வெந்ததும், மறுபுறம் திருப்பிப் போட்டு வேக விட்டு எடுக்கவும். சுவையான பன் தோசை ரெடி. விருப்பப்பட்ட சட்னி சேர்த்து சாப்பிடலாம்.

2. கோதுமை தோசை:

ஒரு கப் கோதுமை மாவுடன் 1/2 கப் அரிசி மாவு, உப்பு சேர்த்து ரவா தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். ஆறு சாம்பார் வெங்காயம் மற்றும் இரண்டு பச்சை மிளகாய்களை மிகப் பொடிசாக நறுக்கி அவற்றுடன் ஒரு டீஸ்பூன் சீரகம், மல்லி இலைகள், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக் கலந்து கைகளால் பிசிறி, கரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும். பின் தோசைக் கல்லில் எண்ணெய் தடவி ரவா தோசை போல் மொறு மொறுப்பாக சுட்டு தேங்காய் சட்னி தொட்டு சாப்பிடவும்.

3. பிரட் உப்புமா:

இரண்டு பிரட் துண்டுகளில் இரண்டு பக்கமும் நெய் பூசி தோசை கல்லில் போட்டு சிவக்க ரோஸ்ட் பண்ணி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பத்து முந்திரி மற்றும் மூன்று டேபிள் ஸ்பூன் வேர் கடலைப் பருப்பை நெய்யில் சிவக்க வறுத்தெடுக்கவும்.

வாயகன்ற கடாயில் மூன்று டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கால் டீஸ்பூன் கடுகு, கறிவேப்பிலை, ஒரு டேபிள்ஸ்பூன் பொடிசா நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். கூடவே சிறிது உப்பு மற்றும் சாம்பார் பொடி ஒரு டீஸ்பூன் சேர்த்து மீடியம் தீயில் கலந்து விடவும். பின், வறுத்து வைத்த பருப்புகள் மற்றும் பிரட் துண்டுகளையும் கடாயில் உள்ள பொருட்களுடன் சேர்த்து நன்கு கலந்து சூடாக பரிமாறவும்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் பாரம்பரிய இனிப்புகளும் அதன் சுவைகளும்!
Quick Recipes

4. வெஜிடபிள் தோசை:

ஒரு கப் கோதுமை மாவுடன் இரண்டு டீஸ்பூன் ரவை, ஒரு டீஸ்பூன் அரிசிமாவு, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கால் டீஸ்பூன் கடுகு சேர்த்து அது வெடித்ததும் பொடிசா நறுக்கிய வெங்காயம், கேரட், குடைமிளகாய், கோஸ் ஆகிய அனைத்தும் சேர்ந்து அரை கப் அளவு எடுத்து அதனுடன் சேர்த்து வதக்கவும். கூடவே ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி, மல்லி இலைகள் சேர்த்துக் கொள்ளவும். சிறிது தண்ணீர் தெளித்து மிதமான தீயில் காய்களை வேக விடவும். வெந்ததும் கீழே இறக்கி வைத்து ஆற விடவும்.

இதையும் படியுங்கள்:
மொறுமொறு ரிங் முறுக்கு, வாயில் கரையும் திணை அல்வா!
Quick Recipes

பின் மாவுடன் சேர்த்து, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து ரவா தோசை மாவு பதத்திற்கு கரைத்து, தோசைக் கல்லில் மொறு மொறுவென்று சுட்டெடுக்கவும். இட்லிப் பொடி அல்லது விரும்பிய சட்னி சேர்த்து சூடாக உட் கொள்ளவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com