இலங்கை ஹோட்டல் சுவையில் சீக்ரெட் 'மஞ்சள் சாதம்'! இதை சேர்த்தால் டேஸ்ட் அள்ளும்!

சுவையான தேங்காய்ப்பால் மற்றும் ரம்பை இலையின் வாசனையில், அசல் இலங்கைக்கே சென்று வந்த உணர்வைத் தரும் பாரம்பரிய 'மஞ்சள் சாதம்' செய்யும் முறை!
Sri Lankan Yellow Rice
Sri Lankan Yellow Rice
Updated on

Sri Lankan Yellow Rice Recipe: ஞாயிற்றுக்கிழமை என்றாலே நம் ஊர்களில் பிரியாணி வாசம் தூக்கும். ஆனால், எப்போது பார்த்தாலும் அதே பிரியாணி, புலாவ் என்று செய்து சலித்துப் போனவர்களுக்கு ஒரு சூப்பரான, வித்தியாசமான மாற்று உணவு இருக்கிறது. அதுதான் அண்டை நாடான இலங்கையின் பாரம்பரிய உணவான 'ஸ்ரீலங்கன் எல்லோ ரைஸ்' (Sri Lankan Yellow Rice). 

சிங்கள மொழியில் 'கஹா பத்' (Kaha Bath) என்று அழைக்கப்படும் இந்த மஞ்சள் சாதம், இலங்கையில் நடக்கும் விசேஷங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் தவறாமல் இடம்பெறும் ஒரு ராஜ விருந்தாகும். தேங்காய்ப்பால், நெய் மற்றும் ரம்பை இலையின் (Pandan leaves) கமகமக்கும் வாசனையில் தயாராகும் இந்த சாதத்தை, நம் வீட்டிலேயே சுலபமாக எப்படிச் செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • பாஸ்மதி அல்லது சம்பா அரிசி - 1.5 கப்

  • கெட்டியான தேங்காய்ப்பால் - 1.5 கப்

  • தண்ணீர் அல்லது காய்கறி வேகவைத்த நீர் - 1.5 கப்

  • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

  • பெரிய வெங்காயம் - 1 

  • இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

  • பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2

  • ரம்பை இலை - 1 சிறிய துண்டு

  • எலுமிச்சைப் புல் - 1 சிறிய துண்டு

  • நெய் அல்லது வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

  • கறிவேப்பிலை - சிறிதளவு

  • உப்பு - தேவையான அளவு

  • அலங்கரிக்க - நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை மற்றும் பொன்னிறமாக வறுத்த வெங்காயம்.

செய்முறை!

முதலில் பாஸ்மதி அரிசியை நன்றாகக் கழுவி, 20 நிமிடங்கள் ஊறவைத்துத் தண்ணீரை முழுமையாக வடித்துக்கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரம் அல்லது குக்கரை வைத்து, அதில் நெய் ஊற்றுங்கள். நெய் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துத் தாளிக்கவும். 

அதனுடன் கறிவேப்பிலை, இலங்கையின் அசல் சுவையைத் தரும் ரம்பை இலை மற்றும் எலுமிச்சைப் புல் சேர்த்து மிதமான தீயில் வதக்குங்கள். இதன் வாசனை வீடு முழுவதும் பரவும். இப்போது நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஈஸ்வரி பொழைச்சு வந்துட்டாளா..? - இல்லத்தரசிகளின் தூக்கத்தை தீர்மானிக்கும் மெகா தொடர்கள்!
Sri Lankan Yellow Rice

இஞ்சி பூண்டு வாசனை போன பிறகு, மஞ்சள் தூள் சேர்த்து ஒருமுறை கிளறிவிடுங்கள். இப்போது தயார் செய்து வைத்துள்ள கெட்டியான தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்றாகக் கொதிக்கத் தொடங்கியதும், ஊறவைத்துள்ள அரிசியை மெதுவாகச் சேர்க்கவும். ஒருமுறை லேசாகக் கிளறிவிட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்துப் பாத்திரத்தை மூடி வையுங்கள்.

சாதம் முக்கால் பதம் வெந்து, தண்ணீர் வற்றத் தொடங்கியதும், அடுப்பை முற்றிலும் குறைத்து வைத்துவிட்டு, சுமார் 10 முதல் 12 நிமிடங்கள் வரை 'தம்'மில் வேகவைக்க வேண்டும். நேரம் முடிந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, உடனடியாகத் திறக்காமல் 5 நிமிடம் கழித்துத் திறக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஆசை 1x; மகிழ்ச்சி 10x: அந்த காலம்... அது வசந்த காலம்...
Sri Lankan Yellow Rice

ஆவி பறக்கும் மஞ்சள் சாதத்தில், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் முறுகலாக வறுத்த வெங்காயத்தைத் தூவி மெதுவாகக் கிளறுங்கள். அவ்வளவுதான், அசல் இலங்கை சுவையில் சுவையான 'ஸ்ரீலங்கன் எல்லோ ரைஸ்' தயார்.

logo
Kalki Online
kalkionline.com