
ஸ்நாக்ஸ் என்றாலே சிப்ஸ் வகைகள்தான் எங்கும் இருக்கும். உருளைக்கிழங்கு சிப்ஸ் அல்லது மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் எதுவாக இருந்தாலும் கடைகளில் வாங்குவது போல் இருப்பதில்லை என்பதால் வீடுகளில் அவ்வளவு எளிதில் இந்த சிப்ஸ் வகைகளை போடுவதில்லை. ஆனால் வீடுகளில் நாமே சிப்ஸ் வகைகளை போடுவதால் சுகாதாரத்துடன் செலவும் மிச்சம். இதோ சிப்ஸ் வகைகள் போடுவதற்கான சில டிப்ஸ்களும் செய்முறையும்.
சிப்ஸ் போடுவதற்கு மிகவும் முக்கியமானது சிப்ஸ் பலகைதான். சிப்ஸ் நன்றாக வருவதற்கு இந்த பலகையில் உள்ள ப்ளேடு மிகவும் அவசியமானது. பலகை நல்லதாக இருந்தால்தான் சிப்ஸ் நல்ல வடிவில் கிடைக்கும்.
உருளைக்கிழங்கு சிப்ஸ்
ஒரே மாதிரியான தரத்தில் உள்ள உருளைக்கிழங்குகளை பொறுக்கி தோலை சீவி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேவையான உப்பு கலந்த நீரை எடுத்து சிப்ஸ் பலகையை உப்பு நீர் உள்ள பாத்திரத்தின் மீது வைத்து சிப்ஸ் வட்ட வடிவில் வருமாறு கவனமாக சீவ வேண்டும்.
இப்போது அடுப்பில் வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவிடவும் அதற்கிடையில் உப்பு நீரில் உள்ள சிப்ஸை எடுத்து வடிதட்டில் நீர் வடியும்படி வைக்கவும். ஒரு தடவை வாணலியில் போடும் அளவு சிப்ஸ் வடிகட்டி நன்றாக காய்ந்த எண்ணெயில் பரவலாக போட்டு சிப்ஸை பொறிக்கவும். மீண்டும் வடிதட்டில் கொஞ்சம் உப்பு நீரில் உள்ள உருளைக்கிழங்கை வடிகட்டவும். இப்படியே அனைத்தையும் பொரித்து எடுத்து மிளகுத்தூள் அல்லது மிளகாய்தூள் கலந்து உபயோகிக்கலாம்.
இதே முறையில் தீக்குச்சி போன்ற உருளைக்கிழங்கு சிப்ஸ்களையுமா தயாரிக்கலாம். இதற்கு சீவும் பலகையில் அரும்பரும்பாக உள்ள கத்தியை உபயோகப்படுத்த வேண்டும். அல்லது காய்கறி வெட்டும் அருவாள்மனையில் தீக்குச்சிகள்போல் மெலிதாக வெட்டி சிப்ஸ் தயார் செய்யலாம்.
ஃபிங்கர் சிப்ஸ்
உருளைக்கிழங்கை விரல் விரலாக நீளவாக்கில் ஒரே மாதிரியாக தட்டை பென்சில்கள் அளவில் வெட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சிவக்க பொரித்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் அழகாக அறிந்த பெல்லாரி வெங்காயத்தையும் கீறிய மிளகாய் ஒன்றையும் சிவக்க வறுத்து சிப்சுடன் சேர்த்து உப்புத்தூள் மிளகுத்தூள் சேர்த்து நறுக்கிய மல்லி தலையுடன் பரிமாறினால் வித்தியாசமான பிங்கர் சிப்ஸ் தயார்.
வாழைக்காய் சிப்ஸ்
நேந்திரங்காய், நாட்டுவாழைக்காய் ஆகியவற்றை சிப்ஸ் தயார் செய்ய தரமான காய்களாக எடுத்துக்கொள்ளவும். வாழைக்காய் தோல் மடிப்புகளை காயின் மீது படாதவாறு தோலை மட்டும் நீளமாக வெட்டி விட்டால் இலகுவாக எளிதாக தோலை உரித்து நீரில் முழுதாக போட்டு வைக்கவும்.
இப்போது வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சீவும் கட்டையை வாணலியின் மேல் வைத்துக்கொண்டு வாழைக்காயை பக்குவமாக ஒரே அளவு மாதிரி அளவில் சிப்ஸ் வரும் படி சீவி நேரடியாக எண்ணெயிலேயே வேகவிட்டு எடுக்கலாம். உப்பு கலந்த நீரை வைத்துக் வாழைக்காய் சிப்ஸ் அடுப்பில் இருக்கும் போது வாணலியில் அரைத்தேக்கரண்டி உப்பு நீர் ஜாக்கிரதையாகத் தெளித்து வறுத்தால் வறுத்து எடுக்கும் போது சிப்ஸில் உப்பு கலந்துவிடும்.
மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்
மரவள்ளிக்கிழங்கை நன்கு கழுவி வெந்நீரில் சிறிது நேரம் விட்டு பதமாக எடுத்து தோலை சீவி விடவும். சிப்ஸ் போடும் பலகையில் வட்ட வட்ட சிப்ஸாக கிழங்கை சீவி பெரிய பாலிதீன் கவர் பேப்பரில் வெயிலில் விரித்து சிப்ஸை காயவைக்கவும். சலசல என்று காய்ந்ததும் காற்று புகார் டப்பாக்களில் அடைத்து வைத்து தேவையானபோது வறுத்து உப்பு மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம். உருளைக் கிழங்குகளையும் இதேபோல் சீவி உப்பு நீரில் கழுவி காயவைத்து தேவையான சமயம் எடுத்து உபயோகிக்கலாம்.