
தானியம் என்றாலே, 'அதில் என்ன சத்துக்கள் நிறைந்திருக்கும்?' என்ற கேள்வி தான் நம்முள் எழும்.
ஒவ்வொரு தானியத்திலும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்தவகையில் தான் கருப்பு கொண்டைகடலை சாப்பிடுபவர்களுக்கு நிறைய சத்துக்கள் கிடைக்கின்றது.
கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்று கூறுவது போல் சிறிய கடலையாக இருந்தாலும் இதில் காணப்படும் சத்துக்கள் அதிகம் தான்.
· இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
· இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
· நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
· தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
· ரத்த சோகையையும் தடுக்கும்.
· செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
· சிறந்த குடல் ஆரோக்கியத்தை தரும்.
· உடல் எடையை குறைக்க உதவும்.
· உடலில் ஹூமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
இத்தகைய ஆரோக்கியமான கருப்பு கடலையில் இரண்டு டேஸ்டியான ரெசிபியை இப்ப பார்க்கலாம்.
1. கருப்பு செனா மசாலா:
தேவையான பொருட்கள்:
கருப்பு கடலை - 200g
தக்காளி -2
வெங்காயம் – 2
பூண்டு - 3 பல்
இஞ்சி – சிறிய துண்டு
பட்டை – ஒரு துண்டு
இலவங்கம் – 2
ஏலக்காய் – 2
பச்சை மிளகாய் – 3
கடுகு ¼ spoon
சோம்பு – ½ spoon
மிளகாய்த் தூள் – ½ spoon
தனியாத் தூள் – 1 spoon
மஞ்சள் தூள் – ½ spoon
கரம் மசாலா தூள் – 1 spoon
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் கடலையை 6 முதல் 8 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், ஏலக்காய், இலவங்கம், பட்டை எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகையும் சோம்பையும் தாளித்துக் கொள்ளவும். பிறகு அரைத்த மசாலா, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு ஊற வைத்த கடலையை போட்டு கலக்கவும். நன்றாக கலக்கின பிறகு கடலை மூழ்கும் வரை தண்ணீர் விடவும். பிறகு குக்கரை மூடி நான்கு விசில் விட்டு வேக வைக்கவும். வேக வைத்த பிறகு தேவைப் பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி கொத்தமல்லி இழைகளைத் தூவி பரிமாறவும்.
2. கருப்பு கடலை சுண்டல்:
கடலையை ஊற வைத்து தேவையான உப்பை போட்டு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகை போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம், பொடிப் பொடியாக நறுக்கிய கேரட், குடைமிளகாய், பீன்ஸ், முட்டை கோஸ் (2 வெங்காயம், மற்ற காய்கரிகள் தலா ¼ கப்) ஆகியவற்றை போட்டுக் கொள்ளவும். காய்கறிக்கு ஏற்ற உப்பை மட்டும் போட்டு வதக்கவும். இப்போது வேக வைத்த கடலையையும் போட்டு நன்றாக mix பண்ணிய பிறகு அடுப்பை அணைக்கவும். மேலே சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை பிழியவும்.
பொதுவாக சுண்டல் என்றால் அதில் தேங்காய் போட்டு செய்வோம். மாறாக இவ்வாறு செய்தால் சாப்பிடுவதற்கு டேஸ்டாக இருக்கும். காலையில் இதை breakfast க்கு கூட செய்யலாம். முயற்சி செய்து பாருங்கள்.