பொதுவாகவே காய்கறி என்றாலே நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்பவை. அதிலும் நீர்க்காய்கள் மிக முக்கியமானவை. இதில் அனைவரும் விரும்பி சாப்பிடுவதில் சுரைக்காயும் ஒன்று. சுரைக்காயில் கிட்டத்தட்ட 85 சதவீதம் நீர்தான் இருக்கிறது. மேலும் உடலுக்குத் தேவையான பொட்டாசியம், மக்னீசியம், விட்டமின் சி, கால்சியம் போன்ற சத்துக்களும் காணப்படுகிறது. இதில் நார்ச்சத்து இருப்பதால் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளைத் தடுக்கும். சரி வாங்க, இவ்வளவு நன்மை செய்யும் சுரைக்காயைப் பயன்படுத்தி சூப் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
சுரக்காய் சூப் எப்படி செய்வது?
முதலில் குக்கரில் 1 தக்காளி மற்றும் ½ கிலோ சுரைக்காயை நறுக்கிப் போட்டு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை எடுத்து மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து, சீரகம் போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.
இறுதியில் தேவையான அளவு மிளகுத்தூள், உப்பு மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கினால், சூப்பர் சுவையில் எடையை குறைக்கும் சுரைக்காய் சூப் தயார்.
சுரக்காய் சூப் தினசரி குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். எனவே நாள் முழுவதும் உங்களை நீரேற்றத்துடன் வைத்துக்கொண்டு ஆரோக்கியமாக இருக்க உதவும். மேலும் சுரைக்காய் சூப் குடிப்பதால் உங்கள் சருமம் பொலிவு பெறும்.
சுரைக்காய் சூப் குடிப்பதால் அதிக நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும். இதனால் நீங்கள் கூடுதலாக உணவு எடுத்துக் கொள்வது தடுக்கப்பட்டு உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் தினசரி சுரைக்காய் சூப் குடித்தால் மன அழுத்தம் குறைவதாகவும் சொல்லப்படுகிறது.
இப்படி சுரைக்காய் சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை சொல்லிக் கொண்டே போகலாம். எனவே கட்டாயம் இந்த உணவை அனைவரும் எடுத்துக் கொள்ளுங்கள்.