
கேழ்வரகு இனிப்பு புட்டு
தேவை;
கேழ்வரகு - 2 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
வெல்லத்தூள் -1 கப்
நெய் - 2 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
செய்முறை;
கேழ்வரகை சுத்தம் செய்து வாணலியில் வறுத்து மாவாக அரைக்கவும். அதில் சிறிது சிறிதாக நீரை தெளித்து, மாவு உதிரியாக இருக்குமாறு பிசையவும். அதை இட்லி தட்டுகளில் நிரப்பி, ஆவியில் வேகவைக்கவும். வெந்ததும், ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். தேங்காய் துருவல், வெல்லத்தூள், நெய், ஏலக்காய் தூள் கலந்து கிளறினால், சுவையான, சத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு தயார்.
கேழ்வரகு உப்பு புட்டு
தேவை;
கேழ்வரகு - 1 கப்
தேங்காய் துருவல் - அரை கப்
உப்பு -1 சிட்டிகை
செய்முறை;
கேழ்வரகு வாணலியில் வறுத்து, மாவாக அரைக்கவும். அதில் உப்பு கலந்த நீரை தெளித்து தெளித்து, உதரியாக பிசையவும். இட்லி தட்டுகளில் இந்த மாவை ஆவியில் வேக வைத்து எடுத்து, தேங்காய் துருவல் கலந்து கிளறினால் சுவையான, சத்தான கேழ்வரகு உப்பு புட்டு தயார்.
அவல் உருண்டை
தேவை:
கெட்டி அவல் - 1 கப்
நெய் - 3 ஸ்பூன்
சர்க்கரை - அரை கப்
முந்திரிப் பருப்பு - பொடித்தது 6
ஏலக்காய் தூள் - சிறிது
செய்முறை:
வாணலியில் நெய்விட்டு அவலை சிவக்க வறுக்கவும். அதையும், சர்க்கரையையும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். அவற்றோடு நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு, ஏலக்காய்தூள் கலந்து, உருண்டைகளாக பிடிக்கவும். சுவையான அவல் உருண்டை தயார்.
மிளகு, சீரக அவல்
தேவை;
கெட்டி அவல் - 2 கப்
வறுத்து பொடித்த மிளகு சீரகப்பொடி - 3 ஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு -1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தலா 1 சிட்டிகை
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
தாளிக்க கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய் 2, கறிவேப்பிலை சிறிதளவு, நல்லெண்ணெய் தேவைக்கேற்ப.
செய்முறை:
அவலைக் களைந்து, நீரை வடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, மூன்று கப் நீர் ஊற்றி, மிளகு, சீரகப்பொடி, மஞ்சள் பொடி போட்டுக் கொதிக்க வைக்கவும். கொதித்து வரும்போது அவலைக் கொட்டி கிளறி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து, தேங்காய் துருவல் தூவி, கலக்கி இறக்கி வைக்கவும். சுவையான வித்தியாசமான மிளகு சீரக அவல் தயார்.