
ஹம்முஸில் நம் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஹம்முஸ் செய்வதற்கு முக்கிய மூலப் பொருளாக உள்ள கொண்டைக்கடலையில் நிறைய சத்துக்கள் உள்ளன.
ஹம்முஸ் என்பது வெள்ளை கொண்டைக்கடலையை வைத்து செய்யக்கூடிய ஒரு 'டிப்' அல்லது 'ஸ்பிரெட்'. அரபு நாடுகளில் இந்த டிப் மிகவும் பிரபலமானது. கபூஸ் என்னும் ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். மிடில் ஈஸ்ட் நாடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஹம்முசை எந்த உணவுடனும் சேர்த்து சாப்பிடலாம். அத்துடன் இதனை பல வழிகளில் சமைக்கவும் முடியும். காய்கறிகள், முழு தானியங்கள், பிரட் போன்றவற்றுக்கு தொட்டுக் கொள்ளவும் ருசியாக இருக்கும். இதனை சாலட் மற்றும் சாண்ட்விச்சிலும் பயன்படுத்தலாம். ஹம்முசில் அதிகமான கலோரிகள் உள்ளது. சரிவிகித டயட்டை பின்பற்றுபவர்கள் இதனை அளவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மத்திய கிழக்கு மற்றும் அரேபிய நாடுகளில் பிரபலமாக இருக்கும் இந்த ஹம்முஸ், வெள்ளை கொண்டைக்கடலையை நன்றாக சமைத்து தஹினியோடு அதை சேர்த்து மசித்து லெமன் ஜூஸ், ஆலிவ் ஆயில், பூண்டு மற்றும் பல வகையான மசாலாக்கள் சேர்க்கப்பட்டு செய்யப்படுகிறது. தஹினி என்பது எள்ளில் இருந்து தயாரிக்கப்படும் பேஸ்ட். கொண்டைக்கடலை, தஹினி மற்றும் மசாலா பொருட்களின் கிரீமி கலவை தான் ஹம்முஸ். இதன் சுவை அலாதியானது.
ஹம்முஸைப் பற்றி முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட குறிப்பு சிரியாவிலிருந்து வந்தது. 13 ஆம் நூற்றாண்டின் சமையல் புத்தகத்தில் புகழ்பெற்ற அலெப்பைன் வரலாற்று ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
பிறகு காலப்போக்கில் ஹம்முஸ் மத்திய கிழக்கு முழுவதும் பரவியது. மத்திய கிழக்கு பல்வேறு வகையான உணவு வகைகளில் பிரதான இடத்தை பிடித்துக் கொண்டது. சிரியா, பாலஸ்தீனம், லெபனான் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் பிரபலம் அடைந்தது. இருபதாம் நூற்றாண்டில் மேற்கத்திய நாடுகளிலும் பிரபலமானது.
ஹம்முஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
ஊட்டச்சத்து நிறைந்தது:
நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் சிறந்த நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், விட்டமின், இரும்புச்சத்து, ஃபோலேட், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளது.
இதய ஆரோக்கியம்:
இத்துடன் சேர்க்கப்படும் தஹினியில் ஆரோக்கியம் நிறைந்த கொழுப்பு சத்தும் உள்ளது. இது இதய நலனை மேம்படுத்தும். இதில் சேர்க்கப்படும் ஆலிவ் ஆயிலும் இதய நலனுக்கு பெரிதும் உதவுகிறது.
உடல் எடை பராமரிப்பு:
ஹம்முஸில் உள்ள புரதம் நார்ச்சத்து ஆரோக்கிய கொழுப்புகள் சாப்பிட்டதும் முழு திருப்தியை தருவதுடன் கூடுதலாக சாப்பிட வேண்டிய தேவையையும் ஏற்படுத்துவதில்லை. செரிமானத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான மெடபாலிசத்திற்கு காரணமாக உள்ளது.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது:
ஹம்முஸில் உள்ள புரதம், நார்ச்சத்து, ஆரோக்கிய கொழுப்புகள் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகின்றன. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்கி ரத்தத்தில் சர்க்கரை சேர்வதை குறைக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் ஹம்முஸ் எடுத்துக்கொள்வது நல்லது.