தமிழ்நாட்டின் அசல் சுவை... இந்த 5 உணவுகளின் செய்முறை ரகசியம் தெரியுமா?

மணப்பாறை முறுக்கு முதல் மதுரை ஜிகர்தண்டா வரை பாரம்பரிய உணவுகளின் தனித்துவமான சுவைக்கு பின்னுள்ள சுவாரஸ்ய தகவல்கள்.
உணவுகள்
உணவுகள்Gemini image
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

ஆதி காலத்தில் மனிதன் காடுகளில் வாழ்ந்து கிடைக்கும் காய்கறிகளை உண்டு ஆரோக்கியமுடன் இருந்தான். காலங்கள் மாற மாற நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டு அதில் மாமிசங்களை காய்கறிகளையும் வாட்டி உண்ணத் துவங்கினான். பிற்காலங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு மனிதரின் வாழ்க்கையிலும் சமையலிலும் புதுப் புது மாற்றங்கள் உண்டாகின. இப்போது நவீன சமையல் முறைகள் ஏராளமாக பெருகி வருகின்றன.

இந்த உலகில் இருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் என்று தனிப்பட்ட மண்ணின் மணத்துடன் கூடிய உணவுகள் பாரம்பரியத்துடன் திகழும். அப்படி நமது தமிழகத்தின் உணவுகள் எப்போதுமே உலகில் மிகவும் பிரசித்தி பெற்றவையாக திகழ்கிறது. அதன் காரணம் நாம் பின்பற்றும் உணவே மருந்து என்ற தத்துவமே!

இந்த தத்துவத்தின் அடிப்படையிலும், பூமி உருவாக்கும் இயற்கையான மசாலாப் பொருட்களின் கலவையிலும் உணர்வுபூர்வமாகவும் தயாரிக்கப்படுவதால் தமிழக உணவுகளுக்கு தனி இடம் உண்டு. உணவே மருந்து எனும் நோக்கோடு மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு மற்றும் கறிவேப்பிலை போன்ற மருத்துவ குணமிக்க பொருட்கள் நமது பாரம்பரிய சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

புத்துணர்ச்சி தரும் மசாலாப் பொருட்களை வறுத்து அல்லது பச்சையாக அரைத்துச் சேர்க்கும் முறை நமது அறுசுவை உணவுகளின் தனித்துவமான சுவைக்குக் காரணமாகும். சரியான அளவில் இணையும் புளி மற்றும் காரமான மிளகாயின் சரியான கலவை உணவுக்குச் சிறந்த சுவையையும், செரிமானப் தன்மையையும் தருகிறது.

மேலும் புளிக்க வைத்த உணவுகளாக நமது ஸ்பெஷல் தயாரிப்பான இட்லி, தோசை போன்ற நொதித்தல் முறை மூலம் தயாரிக்கப்படும் உணவுகள் எளிதில் செரிமானமடைவதுடன், உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்தவையாக அனைவராலும் விரும்பப்படுகிறது.

உணவுகள்
உணவுகள்Gemini image

மண்ணின் மணம் கமழும் செட்டிநாடு காரசாரமான கறிகள், கொங்கு நாட்டு மணமான அரிசி உணவுகள், மற்றும் மதுரைக் கறி தோசை , நாகப்பட்டினம் மீன் குழம்பு, தூத்துக்குடி மக்ரூன், சேலம் தட்டுவடை செட், கோவை அரிசி பருப்பு சாதம், காஞ்சிபுரம் இட்லி, மணப்பாறை முறுக்கு, சேலம் அல்வாப்புட்டு என ஒவ்வொரு பகுதியிலும் தனித்துவமான ஸ்பெஷல் உணவுகள் உள்ளன.

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியும் தனக்கென ஒரு உணவுப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமே அதன் பாரம்பரிய சுவை மற்றும் தயாரிப்பு முறையுடன் பிரபலமாக இருக்கும் பெரும்பாலும் குறிப்பிடப்படும் 5 ஸ்பெஷல் உணவுகள் இங்கு.

1. மதுரை ஜிகர்தண்டா

மதுரைக்கே உரித்தான இந்த வண்ணமயமான குளிர்ச்சியான பானம், கடல் பாசி (சைனா கிராஸ்), பாதாம் பிசின், சுண்டக்காச்சிய பால், நன்னாரி சர்பத், கிஸ்மிஸ், பிளம்ஸ் மற்றும் ஸ்பெஷல் ஐஸ்கிரீம் சேர்த்து தனிச் சுவையுடன் தயாரிக்கப்படுகிறது. நாவில் கரையும் அதிக இனிப்பும், உடலுக்கு குளிர்ச்சியும் தரும் தனித்துவமான சுவை கொண்ட இந்த ஜிகர்தண்டா தற்போது அனைத்து ஊர்களிலும் இருந்தாலும் மதுரையில் இதன் சுவை தனிதான்.

2. மணப்பாறை முறுக்கு

திருச்சிக்கு அருகில் உள்ள மணப்பாறை என்ற ஊரில் கிடைக்கும் இந்த முறுக்கு மிகவும் புகழ்பெற்றது. ஏன் இந்த முறுக்கு மட்டும் மணமாக உள்ளது என்றால் அங்குள்ள நிலத்தடி நீரின் சுவையும், அவர்கள் பயன்படுத்தும் பச்சரிசி மாவு மற்றும் ஓமமும் இதற்கு தனி ருசியைத் தருகிறது என்று பெருமையுடன் சொல்கின்றனர் அந்த ஊர் மக்கள். மற்ற முறுக்குகளை விட அதிக மொறுமொறுப்பும் பிரத்யேக மணமும் கொண்டதாக சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் வண்ணம் உள்ளது.

3. திருநெல்வேலி அல்வா

திருநெல்வேலியிலிருந்து வெளிநாட்டுக்கு பறக்கிறது வாயில் போட்டால் உடனே கரையும் இந்த அல்வா. தாமிரபரணி ஆற்றின் தண்ணீரே இதன் சுவைக்கு காரணமாகிறது. அந்த தண்ணீர் கலந்து ஊறவைத்த சம்பா கோதுமையிலிருந்து பிழிந்து எடுக்கப்படும் பாலிலிருந்து தூய்மையான பாரம்பரிய முறையில் இந்த அல்வா தயாரிக்கப்படுகிறது. தரமான நெய் மிதக்க கேசரி வண்ணத்தில் சூடாக வாயில் வைத்தவுடன் கரையும் இதன் சுவை உலகப் புகழ்பெற்றது.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை அளவை உயர்த்தாத 5 ஆரோக்கிய கோதுமை ரவை ரெசிபிகள்!
உணவுகள்

4. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆன்மீக பூமி மட்டும் அல்ல. தூய்மையான பசும்பாலை சுண்டக்காய்ச்சி, மிதமான சர்க்கரை சேர்த்து இது செய்யப்படுகிறது. பாலின் இயற்கையான மணமும், திகட்டாத மிதமான இனிப்பும் இதன் ஸ்பெஷல். பதமான முறையில் கை விடாமல் கிண்டி நெய் பிரிய மணல்  மணலாக மணக்கும் ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவாவை விரும்பாதவர்கள் எவருமில்லை.

5. திண்டுக்கல் / தலப்பாகட்டி பிரியாணி

உலகெங்கும் பிரியாணி பிரியர்கள் ஒரு முறையேனும் சாப்பிட வேண்டும் என நினைப்பது இந்த பிரியாணியைத்தான்.

பாசுமதி அரிசிக்கு பதிலாக, தமிழகத்தின் பாரம்பரிய சீரகச் சம்பா அரிசி மற்றும் பிரத்யேக மசாலாக்களைக் கொண்டு இது சமைக்கப்படுகிறது. சிறிய அரிசியில் மசாலாக்கள் நன்றாக ஊறி, ஒரு தனித்துவமான காரசாரமான நறுமணத்தையும் சுவையையும் தரும் இந்த பிரியாணியின் செய்முறை ரகசியம் இந்நிறுவனத்தினரைத் தவிர இன்னும் எவரும் அறியவில்லை என்பதே இதன் சிறப்பு.

இதையும் படியுங்கள்:
பாகற்காய் கசப்பை முற்றிலுமாக நீக்க பாட்டி சொன்ன 5 எளிய ரகசிய வழிகள்!
உணவுகள்

மேலும் காரைக்குடி/செட்டிநாடு உணவுகள் – சிவகங்கை–புதுக்கோட்டை பகுதியில் செய்யப்படும் செட்டிநாடு குழம்பு, கோழி, மீன் மற்றும் காய்கறி உணவுகளில் மிளகு, சோம்பு, பட்டை, கிராம்பு போன்ற மசாலாக்களின் தாராளப் பயன்பாடு தனித்துவமான காரம் மற்றும் மணத்தை உருவாக்குகிறது. கும்பகோணம் கடப்பா  இட்லி, தோசையுடன் சாப்பிடப்படும் உருளைக்கிழங்கு–பாசிப்பருப்பு கலவையான இந்தக் குழம்பில் தேங்காய், சோம்பு போன்றவற்றின் மணம் தனிச்சுவையைத் தருவதாக உள்ளது.

தமிழகத்தில் கண்டிப்பாக ருசிக்க வேண்டிய 5 முதன்மையான உணவுகள் எவை மற்றும் அவை ஏன் உலகப் புகழ்பெற்றவை என்பதைத் தெளிவான பட்டியலாகப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com