
தக்காளி குருமா
தேவை:
தக்காளி – 4,
வெங்காயம் – 2
பூண்டு – 3 பல்,
வரமிளகாய் – 5 ,
பொட்டுக்கடலை, கசகசா – தலா 2 டீஸ்பூன்,
சோம்பு - 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 கப்
நெய் - 1 ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.
பட்டை - சிறிது
செய்முறை:
தக்காளி, வெங்காயத்தை நறுக்கவும். தேங்காய்த் துருவல், பொட்டுக்கடலை, கசகசா, வரமிளகாய் இவற்றை நைசாக அரைக்கவும். பூண்டை தட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, சோம்பு தாளித்து, வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, பூண்டு, தக்காளியை வதக்கி, அரைத்த விழுதை சேர்த்து, உப்பு போட்டுக் கிளறவும். அனைத்தும் வெந்து, பொருந்தி வெட்டியானதும் இறக்கி வைத்து நெய் சேர்க்கவும். இந்தக் குருமா இடியாப்பத்திற்கு தொட்டுக்கொள்ள உகந்தது.
வெஜிடபிள் தயிர் குருமா
தேவை:
உருளைக்கிழங்கு – 2,
பச்சை பட்டாணி - அரை கப்
கேரட் - 2
பீன்ஸ் - 6
தக்காளி - 2
நறுக்கிய வெங்காயம் - 1 கப் பச்சை மிளகாய் – 2
கசகசா – 1 ஸ்பூன்,
இஞ்சித் துருவல் – அரை ஸ்பூன்,
பூண்டு – 2 பல்,
பட்டை, ஏலம், கிராம்பு - தாளிக்க
தனியா தூள் - 3 ஸ்பூன் தேங்காய் துருவல் - அரை கப்
முந்திரி - 6
தயிர் - ஒரு கப்
க்ரீம் - ஒரு கப்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
அனைத்து காய்கறிகளையும் நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு, கசகசா, பூண்டு இவற்றை அரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, ஏலம், பட்டை, கிராம்பு தாளித்து, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காய்கறிகள் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். அரைத்த விழுது, உப்பு, தேவைக்கேற்ப நீர் சேர்த்து, கொதி வந்து, எல்லாம் வெந்ததும் இறக்கி வைக்கவும். சூப்பர் சுவையில் வெஜிடபிள் தயிர் குருமா தயார்.
ஆலூ குருமா
தேவை:
உருளைக்கிழங்கு - 2,
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
தேங்காய் பால் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4,
கசகசா, பொட்டுக்கடலை தலா 2 ஸ்பூன்
சோம்பு - ஒரு ஸ்பூன்
பட்டை - சிறிது,
நெய் - ஒரு ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கவும். தக்காளி, வெங்காயத்தை நறுக்கவும். பொட்டுக்கடலை, கசகசா, பச்சை மிளகாய் இவற்றை அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, சோம்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் தக்காளியை வதக்கி, உருளைக்கிழங்கு, அரைத்த விழுது, தேவைக்கேற்ப நீர், உப்பு சேர்த்துக் கிளறவும். எல்லாம் பொருந்தி வந்ததும் தேங்காய் பால் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும். டேஸ்டியான உருளைக்கிழங்கு குருமா தயார்.
பக்கோடா குருமா
தேவை:
கடலைப்பருப்பு - ஒரு கப்,
பொட்டுக்கடலை - 3 டீஸ்பூன்,
வெங்காயம் - 3 ,
முந்திரிப் பருப்பு - 8,
பச்சை மிளகாய் - 2
தேங்காய்த் துருவல் - அரை கப்
பட்டை, சோம்பு - தாளிக்க புளித்த தயிர் - 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
தேங்காய் எண்ணெய் - பொரிக்க
மல்லித்தழை - சிறிது
செய்முறை:
கடலைப் பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து, கெட்டியாக அரைக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், அரைத்த மாவை பக்கோடாக்களாக உருட்டிப் போட்டு, பொரித்து எடுத்து வைக்கவும். தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, மல்லித்தழையை அரைத்து, நான்கு கப் தண்ணீர் விட்டுக் கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, முந்திரியை வறுத்து, வெங்காயத்தை நறுக்கி வதக்கி, குருமா கரைசலை கொட்டிக்கிளறி, ஒரு கொதி வந்ததும் இறக்கி பக்கோடாக்களை போட்டு ஊற வைக்கவும். ஆறியதும், புளித்த தயிரைக் கலக்கவும். வித்தியாசமான சுவையில் பக்கோடா குருமா தயார்.